ஒவ்வொரு முறை தமிழில் எதையாவது எழுத ஆரம்பித்த உடனேயே மொழிச்சிக்கலில் மாட்டிக் கொள்வதென்பது விருப்பத்திற்குரிய விளையாட்டாகவே மாறிப்போயிருக்கிறது. ஆனால் மூளையைக் கசக்கினாலும் பிழிந்தாலும் வழிவதென்னவோ இன்னொரு ஆங்கிலச் சொல் தான். இதற்காக ஆங்கிலப் புலமை அதிகமென்னும் பொய்யைச் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. கணினியின் ஓரத்தில் உட்காந்திருக்கும் ஆங்கில அகராதி அவ்வேலையைச் செய்து விடுகிறது. ஆங்கில அகராதியைப் பயன்படுத்தும் போது தமிழுக்கென்று ஒரு அகராதியையும் பயன்படுத்தலாம் தான். தமிழுக்கென்று சில அகராதிகள் இருப்பது தெரியுமென்றாலும் எழுத்துருச் சிக்கல்களால் அவற்றை அவ்வளவாக பயன்படுத்தியதில்லை. இந்தச் சூழலில் தான் விக்சனரி அறிமுகமானது. எண்ணிக்கையில் குறைவான வார்த்தைகளே இருந்தாலும் உபயோகிப்பது எளிதாக இருந்ததால் தேவைப்படும் போது எட்டிப் பார்ப்பது உண்டு. இப்பொழுது சமீபத்தில் தமிழிணையப் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் சொற் களஞ்சியங்களையும் விக்சனரிக்கு கொண்டு வந்திருக்கின்றனர். எனவே எண்ணிக்கையளவு கொஞ்சம் உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு முறை விக்சனரி தேவைப்படும் போது, விக்சனரிப் பக்கத்திற்கு செல்வதென்பது கடிமான ஒன்று. ஆனால் கொஞ்சம் தேடிய போது பயர்பாக்ஸின் நீட்சி ஒன்று இச்சிக்கலைத் தீர்த்து வைப்பதை அறிய முடிந்தது. Wikilook எனும் இந்த நீட்சி நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் பக்கத்திலிருந்தவாறே விக்கி மற்றும் விக்சனரிகளில் இருந்து தேவையான பொருளடக்கத்தைப் பெற உதவுகிறது. இன்னும் சிறப்பாக விக்சனரி உள்ளடக்கம் தனிப் பக்கமாக இல்லாமல் சிறு சன்னலிலேயே காண்பிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை நிறுவுவதும் உபயோகப்படுத்துவதும் எளிது. நீட்சியை நிறுவியபின் அதன் அமைவுப் பக்கத்தில் தமிழ் விக்சனரி மற்றும் தமிழ் விக்கியின் முகவரிகளை அளிப்பதன் மூலம் நீங்கள் உலாவிக் கொண்டிருக்கும் பக்கத்திலிருந்தே அப்பக்கங்களை அணுகலாம். மேலும் உலாவியில் ஏதாவதொரு வார்த்தையை தெரிவு செய்தால், எவ்விதச் சொடுக்கல்களுமில்லாமலேயே தன்னாலேயே விக்சனரி உள்ளடக்கத்தினை காண்பிக்குமாறும் அமைக்க முடியும். இந்த நீட்சியை இயங்கச் செய்வதும் நிறுத்துவதும் கூட மிக எளிதாகவே இருக்கிறது. அதனால் தேவையான போது மட்டும் இயங்கவைத்துக் கொள்ளலாம்.
Nov 18, 2009
Subscribe to:
Posts (Atom)