Mar 19, 2006

அவியலும் பக்கோடாவும்

இந்த பதிவுக்கு சரியான தலைப்புன்னு யோசிச்சப்ப ஞாபகத்துக்கு வந்தது அவியல். ஏண்டா கனடா போனவுடனேயே இப்டி இம்சை பண்ண ஆரம்பிக்கிறீங்கன்னு (ஏற்கனவே ஒருத்தரு இந்த மாதிரி பண்ணியிருக்காரு) சில பேரு டென்சன் ஆனாலும் எழுதறதுக்கு வேற எதுவும் இல்லாததனால(யாரு எழுதலைன்னு அழுதாங்க) இப்டியெல்லாம் பக்கம் நிரப்ப வேண்டியதிருக்கு.

இந்த அவியல், இருக்கற எல்லா காய்கறியும் போட்டு வெள்ளை இல்லாட்டி மஞ்சக் கலர்ல பண்ணி குடுப்பாங்க. சில நட்புங்க இதைப்பத்தி ரொம்ப சிலாகிச்சிப் பேசும். ஆனா எனக்கு மட்டும் என்னன்னு தெரியலை உள்ளயே எறங்காது. அதைப் பாத்தாலே உவ்வே தான்.

நமக்கு பிடிச்சது இந்த பக்கோடாதான். இது எப்டி பண்றாங்கன்னு தெரிஞ்சப்ப கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்திச்சி. நம்ம மக்க பெரிய பெரிய விசயத்துக்கெல்லாம் அதிர்ச்சி அடைஞ்சிட்டு(அப்டிதான் சொல்றாங்க) எல்லாம் தலையெழுத்துன்னு கிளம்பி மறு அதிர்ச்சி குடுக்க போற மாதிரி, நானும் என்னோட அதிர்ச்சிய தூக்கி குப்பை தொட்டியில போட்டுட்டு எங்க பக்கத்து டவுனு பேமஸ் முனியாண்டி விலாஸ்ல பக்கோடா வாங்க போயிட்டேன். ஒன்னுமில்லை, கடையில மீந்து போற சேவு, சீவல், மிக்சர் எல்லாத்தையும் நைட்டு தண்ணியில ஊறப் போட்டு அதை மாவாக்கி அதோட வெங்காயம், பூண்டுன்னு போட்டு பொறிச்சி வர்றது தான் இந்த பக்கோடா. வீடல பண்ணுனாங்கன்னா(எங்க வீட்ல!)கோதுமை, ரவை, வெங்காயம் சேத்து பண்ணுவாங்க. இங்க கனடா வந்ததுக்கப்புறமும் நான் பக்கோடா சாப்பிட்டேன். என்ன நான் பண்ண விருப்பப்பட்டது ரவா தோசை, ஆனா வந்தது பக்கோடா. எதுவா இருந்தா என்ன திங்கிறதுக்கு நல்லா இருந்தா சரிதானன்னு சந்தோசமா காலி பண்ணிட்டேன்.

அதனால எனக்கு பிடிச்ச பக்கோடா தான் இந்த பதிவுக்கு தலைப்பு.

இப்ப பதிவு.

போன வாரம் என்னோட பிரெஞ்ச்(என்னது பிரெஞ்சா!!) கிளாஸ்ல டெஸ்ட். நானும் இங்க வந்த புதுசுல ஏகப்பட்ட கனவுல(உண்மையில புதுசா ஒரு மொழியை கத்துக்க போறோமே அப்டின்ற கனவு தான்) போய் அடிச்சிப் பிடிச்சி போய் கிளாஸ்ல சேந்துட்டேன். முத கிளாஸ்ல எதிர்பார்ப்போட போய் உக்காந்தேன். எதிர்பார்ப்பு வீணாகலை. கிட்டத்தட்ட ஒரு 20 பேரு வந்திருந்தாங்க. இருக்கறதிலயே நான் தான் சின்னப்பையன்(!). எல்லாம் வீட்ல குழந்தைங்க படிக்கறதுக்காக வேலை பாக்குறதுக்கு வெளியேறி போயிட்டாங்க அதனால பொழுது போகலைன்னு வந்தவுங்க, கம்பெனியில புரமோசனுக்கு பிரெஞ்சு தேவைப்படுதுன்னு வந்தவுங்க அப்டின்னு ஒரு பெரிய பட்டாளம். எல்லாருக்குமே புது மொழி கத்துக்கறதுல நல்ல ஆர்வம்(எனக்குந்தான்!!!). கிளாஸ் எடுக்கற மேடத்துக்கு வயசு 50க்கு மேல. அவங்களுக்கு கேன்சர் அட்டாக் ஆகி 9 வருசத்துக்கு மேல ஆகிருச்சாம். அவங்க கிட்ட இருக்கற நம்பிக்கை, எறும்பு மாதிரி சுறுசுறுப்பா சுத்துற வேகம், சக மனிதர்கள் மேல இருக்க்கற நம்பிக்கை, வாழ்க்கை மேல இருக்கற காதல், இப்டி அவங்களைப்பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். ஒவ்வொரு அசைன்மண்டுக்கும் மார்க்கோட சேத்து ஒரு நல்ல ஸ்டிக்கர் (ஸ்மைலி, கோப்பை, ஸ்டார் இந்த மாதிரி) ஒட்டி குடுப்பாங்க. இந்த அணுகுமுறை எனக்கு வித்தியாசமானது. ரெண்டு மூணு அசைன்மண்ட் எப்டியோ ஒப்பேத்திட்டேன். ஆனா இந்த டெஸ்ட், என்ன ஸ்டிக்கர் ஒட்டுறதுன்னு அவங்களை யோசிக்க வைக்கிறமாதிரி பண்ணியிருக்கேன். நமக்கும் பரிச்சைக்கும் அப்டி ஒரு ராசி. நாம என்ன படிக்கறமோ அதைத்தவிர எல்லாமே கொஸ்டின் பேப்பர்ல இருக்கு. என்ன பண்றது. பாக்கலாம் என்ன ஸ்டிக்கர் குடுக்கபோறாங்கன்னு.

அப்புறம் இங்க வேலை பாக்குற எடத்துல ஒருத்தரு வேற வேலைக்கு போறாருன்னு அவருக்காக ஒரு கெட்-டுகதர் பக்கத்தில இருக்கற பார்ல ரெடி பண்ணியிருந்தாங்க. நம்ம ஊரு பார்ட்டியோட ஞாபகத்தில வயத்தை பட்டினி போட்டுட்டு ரெடியாயிருந்தேன். நேரமாகிட்டே இருக்கு இங்க ஆபிஸ் ரூம்ல யாரும் கிளம்பறதுக்கான அறிகுறியே இல்லை. கேட்டா நான் வரலை, நீ வரலைன்னு, ஒரே வரலை தான். அப்புறம் போனாப் போகுதுன்னு ஒருத்தரு மட்டும் எனக்காக(!!!!) சரி வர்றேன்னு கிளம்பி வந்தாரு. போனா ஒரு நாளஞ்சி டேபிள்ல ஒரு 20 பேர் உக்காந்திருந்தாங்க. ஒவ்வொரு டேபிள்லயும் ஒரே ஒரு மக் பீர் மட்டும் வைச்சிருந்தாங்க. அதுலயும் ஏற்கனவே பாதி காலி. கேட்டா இங்க எல்லாம் இப்டிதான். வேணும்னா நீ போய் காசு குடுத்து வாங்கிக்கணும்னு சொல்லிட்டாங்க. சரின்னு போய் ஒரு கோக் மட்டும் (உண்மையிலயே!!) வாங்கிட்டு நானும் போயி அந்த ஜோதியில ஐக்கியமாகிட்டேன். எல்லாம் பிரெஞ்சுலயே கதைச்சிக்கிட்டு இருக்காங்க. அப்டியே தலை சுத்த ஆரம்பிச்சது(பிரெஞ்சு புரியாததனால). நல்லவேளை கொஞ்ச நேரத்தில தெரிஞ்சவுங்க ரெண்டு பேரு வந்து சேந்தாங்க. கொஞ்ச நேரத்துல பக்கத்துல இருந்த டேபிள்ல போய் பில்லியர்ட்ஸ் (முத தடவை) ஆடி பொழுத போக்காட்டிடு வந்தாச்சி.

ரொம்ப நாளா காத்திருந்த ஸ்கீயிங் இந்த வாரம் பண்ண முடிஞ்சது. ஏற்கனவே ஒருதடவை போய்ட்டு கொஞ்ச நேரத்துல விரல் எல்லாம் உறைய ஆரம்பிச்சிருச்சின்னு பாதியிலயே ஓடி வரவேண்டியதாயிருச்சி. கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலைன்னு புலம்பிக்கிட்டே இருந்தேன். அதனால இந்த தடவை ரெண்டு மூணு அடுக்கு சாக்ஸ், குளவுஸ், ட்ரெஸ்ன்னு ஒரே அமர்க்களமா போய் ஸ்கீயிங் கிரவுண்ட்ல போய் நின்னேன். அவங்க குடுத்த ஸ்கீயிங் பூட்ட போட்டு நடந்தா எதோ நிலாவுல மனுசன் நடக்கறது மாதிரி இருந்திச்சி. எப்டியோ சமாளிச்சி பனியில போய் நின்னேன். பத்தடி போறதுக்குள்ள பல்டி அடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் கூட்டிட்டு போனவுங்க எப்டி பண்ணனும்னு சொல்லிக்குடுத்தாங்க. ஆனா கடைசி வரையில பல்டி அடிக்கறத மட்டும் நிப்பாட்டவேயில்லை. இன்னொரு தடவை வரும்போது நல்லா பண்ணிருவேன்னு வந்தவுங்களுக்கு நம்பிக்கை குடுத்து வைச்சிருக்கேன். அந்த இன்னொரு தடவை அனேகமா அடுத்த வருசம் தான் வரும்ன்ற நம்பிக்கை. ஆமாங்க இந்த தடவை போனப்பயே எங்கயும் பனி இல்ல. நாங்க போன அந்த இடத்துல கூட மெஷின் வைச்சி பண்ணியிருந்த பனி தான் இருந்தது. அதனால அந்த பனி மலைய மத்த மலைகளோட தூரத்துல இருந்து பாக்குறதுக்கு வித்தியாசமா இருந்திச்சி. அடுத்த பதிவுல முடிஞ்சா போட்டா!!!

இந்த வார பதிவை எப்டியோ ஒப்பேத்தியாச்சி.......

4 comments:

- உடுக்கை முனியாண்டி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..............

:|

Thangamani said...

:)

பாலராஜன்கீதா said...

// ஒவ்வொரு அசைன்மண்டுக்கும் மார்க்கோட சேத்து ஒரு நல்ல ஸ்டிக்கர் (ஸ்மைலி, கோப்பை, ஸ்டார் இந்த மாதிரி) ஒட்டி குடுப்பாங்க. இந்த அணுகுமுறை எனக்கு வித்தியாசமானது. ரெண்டு மூணு அசைன்மண்ட் எப்டியோ ஒப்பேத்திட்டேன். ஆனா இந்த டெஸ்ட், என்ன ஸ்டிக்கர் ஒட்டுறதுன்னு அவங்களை யோசிக்க வைக்கிறமாதிரி பண்ணியிருக்கேன். //

சரி சரி, எத்தனை கப் கிடைத்தன ?
:-)))

- உடுக்கை முனியாண்டி said...

இருக்கறாதிலயே கம்மியான மார்க் நானா தான் இருக்கும்னு நினைக்கிறேன். எல்லாருக்கும் ஒட்டுன மாதிரி எனக்கும் ஒரு பட்டாம்பூச்சி ஒட்டிக் குடுத்தாங்க. சிரிச்சிட்டே குடுத்துட்டு போயிட்டாங்க. அப்புறமா வேற எதோ சொல்லும் போது நான் பண்ணுன தப்ப எப்டி சரி பண்ணுறதுன்னு சொன்னாங்க.

அதனாலயே கிளாஸ் மிஸ் பண்ணுறதுக்கு மனசு வரமாட்டேங்குது.