Mar 11, 2006

ஒரு ஜல்லியடிப்பு

இது உண்மையான ஜல்லியடிப்பு பத்தினது தான். யாரவது, வலைப்பூவுல அடிக்கடி அடிக்கற ஜல்லின்னு ஏமாந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.

வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுறணும்ற வரிசையில போன வாரம் ஒரு பெரிய பதிவா எழுதினேன். சுத்தி இருக்கற மக்க ஜல்லியடிச்சிருக்கேன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப கடுப்பானதனால இந்த வாரத்துக்கு என்ன எழுதுறதுன்னே தெரியலை. கடைசியில உண்மையிலேயே ஜல்லியடிப்பை அள்ளி விட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


சரி இப்ப கதைக்கு. எனக்கும் ஜல்லிகளுக்கும் ரொம்ப பெரிய தொடர்பெல்லாம் கிடையாது. ஆனா ஒவ்வொரு இடத்திலயும் ஜல்லிகளை தவிர்க்க முடியாம ஏறி மிதிச்சி தான் கடந்து வந்துருக்கேன். சித்தாள் வேலை பாத்த வீடாகட்டும், நடந்து போன ரோடாகட்டும், விளையாடுன ஓடையாகட்டும் ஒரே ஜல்லி தான். ஓடையில கிடக்குறதை சரளைன்னு சொன்னாலும், நம்ம கதைக்கு அதை ஜல்லி கணக்குல சேத்துக்கலாம். ஜல்லியில அதோட சைஸை வைச்சி தான் குறிப்பிடுவாங்க. கால் இஞ்ச், அரை இஞ்ச், முக்கால், ஒன்னு, ஒண்னேகால் ஒன்னறை வரைக்கும் ஜல்லி கிடைக்கும். இதுக்கு மேல போறதெல்லாம் உடைசல்ன்னு சொல்லிருவாங்க. ரொம்ப பெருசா போயி சதுரமா அடிச்சிட்டாங்கன்னா அதை கல்லு கணக்குல சேத்துரலாம்.

இந்த ஜல்லி வகையில கால் இஞ்சும் அரை இஞ்சும் நம்ம வீடுகள்ல காங்க்ரீட் போடுறதுக்கு பயன்படுத்தறது. ஒன்னேகாலும், ஒன்னரையும் ரோடு போடுறதுக்கு பயன்படுத்தறது. நான் சொல்றது மெட்டல் ரோடுன்னு கிராமங்களுக்கு போயிக்கிட்டிருந்த ரோடுங்களை. (இதுவே தார் ரோடுன்னா, மெட்டல் போட்டுட்டு அதுக்கு மேல தாரோட சேத்து போடுறதுக்கு இந்த கால் இஞ்ச் ஜல்லி தேவைப்படும்). ஒவ்வொரு கிராமமும் உருப்படியான மெட்டல் ரோடாவது கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்த நேரமும் இருந்திச்சி. இன்னும் ஒரு சில இடங்கள்ல இப்பயும் மெட்டல் ரோடுதான் இருக்கு. இந்த ரோடுங்க போடுறதுக்காக சில நேரங்கள்ல ரோடு ஓரத்தில எல்லாம் இந்த ஜல்லியை கொட்டி வைச்சி சில மாசங்களுக்கு எதுவுமே பண்ண மாட்டாங்க. அது ஒரு பெரிய இம்சையா இருக்கும். அனேகமா எல்லாருக்குமே அதைப்பத்தின அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். ரொடு ஓரத்தில கொட்டி வைக்கிற ஜல்லி குவியலை 'தாக்கு' அப்டின்னு சொல்லுவாங்க. சாதாரண கிராமத்து ரோட்டுக்கு கிமீ க்கு இத்தனை தாக்குன்னு கணக்கு இருக்கு. இதுல ஆறு தாக்குக்கு ஒரு தாக்குதான் செம்மண் தாக்கு இருக்கணும். ஆனா காண்ட்ராக்டர் மக்க இங்க தான் விளையாடும். ஏன்னா ஜல்லி கொஞ்சம் விலை கூட. அதனால மண்ணைக் கொட்டி ரோட்டை போட்டுட்டு சந்தோசமா போயிரும். சனங்களும் ஆகா புது ரோடுன்னு சைக்கிளை குறுக்க மறுக்க ஓட்டி சந்தோசப் பட்டுக்கும். ஒரு ரெண்டு மாசங்கழிச்சி சின்னதா ஒரு மழை வந்துச்சின்னா அப்ப இளிக்க ஆரம்பிக்கும் அந்த ரோடு. அதுக்கப்புறம் தான் உலகத்தில இல்லாத இம்சை எல்லாம் ஆரம்பிக்கும்.

மெயின் ரோட்டுல இருக்கற கிராமங்களுக்கு பிரச்சனையில்லை. ரோடே இல்லாம போனாலும் பஸ்ஸு வந்துரும். மெயின் ரோட்டுல இருந்து பிரிஞ்சி போற கிளை ரோட்டுல ஒரு கிளை ரோடு, அதுவும் அந்த கிராமத்துக்குன்னு தனியா ரெண்டு கிமீ உள்ள போய்ட்டு வரணும்னா கொஞ்சம் யோசிச்சி பாருங்க. பாதி நாளு பஸ்சுக்காரன் எதாவது காரணம் சொல்லிட்டு நேரா போயிருவான். அப்புறம் பஸ்சு பிடிக்கனும்னா சில கிமீ நடக்கணும் இல்லை இன்னும் கூடுதலா சில கிமீ நடந்தா டவுனு. எல்லாருகிட்டயும் சைக்கிள் இருக்காதில்ல அதனால இருக்கற எல்லா வகையிலயும் ஊர்க்காரங்க டவுனுக்கு போவாங்க. நம்ம கிராமமும் இந்த வகை தான். மொத்தம் ஒரு 150 வீடு இருக்கும் சனத்தொகை 450-500ன்னு நினைக்கிறேன்.

எங்க ஊருக்கு வரணும்னா பஸ்சுக்காரன் ஒரு ரெண்டு(மொத்தம் நாலு கிமீ) கிமீ உள்ளே வரணும். ரோடு கொஞ்சம் மோசமாயிருச்சின்னா உள்ள வரமாட்டாங்க. கஷ்டம் தான். ஒரு தடவை ரோடு போட்டாச்சின்னா கவர்மெண்டு சில பல வருசங்களுக்கு அந்த பக்கமே திரும்பி பாக்காது. மழை பேஞ்சி ரொடு மோசமாயிருச்சின்னு அப்டியே விட்டுட்டா பஸ்சு வராது. என்ன பண்றது. கவர்மெண்டு மோசம், பஸ்சுக்காரன் மோசம், , மழையைக் கொண்டு வந்த கடவுளு மோசம், ரோடு போட்டவன் சுருட்டிட்டான் அப்டின்ற புலம்பல்கள் எல்லாம் இருக்கும். புலம்பிக்கிட்டே இருந்தா மட்டும் பஸ்சு ரோடும் திரும்பி வந்துறாதுன்னு மக்களுக்கு நல்லா தெரியும். ஒன்னு எலக்சன் வரணும் இல்லை கிராமத்துக்குன்னு சொந்த பஸ்சு இருக்கணும். 500 பேருல 50 பேரு கூட டவுனுக்கு போக மாட்டாங்க. அதனால சொந்த பஸ்சு கதையெல்லாம் புவ்வாவுக்காகது. எலக்சனும் அடிக்கடி வர்றதில்லயில்ல. ஒரு ரெண்டு வாரம் பாப்பாங்க. மூணாவது வாரம் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. அவன் குத்தம், இவன் குத்தம்னு அடுத்தவனை கையைக் காட்டிக்கிட்டிருந்தாலும், கதைக்காகுறது எதுன்னு ரொம்ப சுளுவா முடிவு பண்ணிருவாங்க. ரோடு போடுறதுக்கும் வசதி பத்தாது. அதனால ஒரே வழி ஜல்லியடிக்கறது தான். காங்க்ரீட் ஜல்லி எல்லாம் அடிக்க முடியாது. அதனால ஓடையில இருந்து, சரளையை கொட்டுறதுன்னு முடிவு பண்ணிருவாங்க. வீட்டுக்கு இவ்வளவு, கவர்மெண்டு சம்பளக்காரங்க இவ்வளவு, ஊரு இவ்வளவு, விருப்பப் படுறவங்க அதுக்கு மேலன்னு ஊர்ல ஒக்காந்து புரணி பேச்சோட இதையும் பேசி பெருசுங்க முடிவு பண்ணி இளவட்டங்களுக்கு தகவல் போகும். அப்புறம் எப்டியும் ஒரு ரெண்டு நாள்ல ஜல்லியடிக்கற திருவிழா நடக்கும். ஊர்ல பாதிப்பேரு அங்க தான் இருப்பாங்க. இதே மாதிரி
வருசத்துக்கு ரெண்டு மூணு ஜல்லியடிப்பு திருவிழா இருக்கும்.


இந்த மாதிரி தேவையான விசயங்களை எப்டியாவது சாதிச்சிக்கறதினால, எங்க ஊர்க்காரங்க அடுத்த ஊர்க்காரங்க கிட்ட விடற பந்தா சொல்லி மாளாது. நானும் அந்த ஊர்க்காரன் தான. இங்க நான் படம் போடலைன்னு வேற யாரு எங்க ஊருக்காக படம் போடுறது. அதனால ஒன்னு ரெண்டு (எல்லாம் பத்து வருசத்துக்கு முந்துன கணக்கு)

1. 150 வீட்டுக்கு, 55-60 தெரு விளக்கு. இது போக ஒவ்வொரு வீட்லயும் சாயங்காலம் அடுத்த வீட்ல போடுறதுக்கு முன்னாடி நம்ம வீட்ல போட்றணும்னு வைச்சிருக்கிற வெளி லைட்டு, அங்கங்க இருக்கற கோயில் லைட்டுன்னு ஊரே பளிச்சுன்னு இருக்கும். ஊரை விட்டு வெளிய நின்னு பாத்த என்னமோ டவுனுக்கு பக்கத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

2. ஊரைச்சுத்தி 100-200 மீட்டருக்கு ஒரு அடிகுழாயி. ஊரை விட்டு ஒரு ரெண்டு கிமீ தாண்டி காட்டுக்குள்ள ஒரு அடிகுழாயி(காட்டுக்கு போனா குடிக்கறதுக்கு வேணுமாம்)

3. பக்கத்து டவுனுல இருந்து பஸ் அப் அண்டு டவுன் 12 டிரிப்(பெரிய பெரிய கிராமங்கள் எல்லாம் ஒன்னு ரெண்டுக்கே அல்லாடிக்கிட்டு இருப்பாங்க). இதனால மக்க அலம்புன அலம்பு கொஞ்சம் நஞ்சமில்லை. டவுனுக்கு போயி டீக்குடிச்சிட்டு வரேன்னு, ஊர்ல இருந்து போற பஸ்சுல டவுனு ஆரம்பத்திலயே எறங்கி டீக்குடிச்சிட்டு அந்த பஸ் திரும்பி வரும்போது ஏறி வந்துர்றது. ஒரே காமெடி தான். அப்பப்ப பஸ்சுக்காரன் ஊருக்குள்ள வராம கட் அடிச்சா, பஸ்சைக் கட்டி போட்டுட்டு வரச்சொல்லு உன்னோட அதிகாரிய அப்டின்னு உதார் விட்டது எல்லாம் உண்டு.

4. பக்கத்து ஊர்க்காரங்க கையால அடிக்கற ஸ்பிரேயர்ல காட்டுல மருந்தடிச்சா இங்க மக்க, பவர் ஸ்பிரேயர்ல படம் போட்டுக்கிட்டு இருக்கும். அதனாலயே சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் விவசாயத்தில முன்னொடியா இருக்க முடிஞ்சது.

5. அப்புறம் டீவி பொட்டி. பஞ்சாயத்து பொட்டி எப்ப படுத்தாலும் மிஞ்சி போச்சின்னா ரெண்டு வாரம் தான். இது போக வாரத்துக்கு ஒரு தடவை டீவி டெக்குன்னு விடிய விடிய படம் ஓடும். கலர் டீவின்னு ரூல் வந்தப்ப, ஆளுக்கு மொதலா போயி தூக்கிட்டு வந்துட்டாங்க.

6. இப்பயும் எங்க ஊரு பெருமையா பேமஸா சொல்லிக்கறது தண்ணித்தொட்டிய தான். மோட்டார் போட்டு ஓவர் டேங்க் கட்டி முதல்ல பொதுக்குழாய், பின்னாடி வீட்டுக்கு வீடு கனெக்சன், இப்ப இன்னொரு ஓவர்டேங்க்ன்னு பட்டைய கிளப்பிக்கிட்டிருக்காங்க. சுத்தி இருக்கற ஊருங்கள்ல ஆரம்பிச்ச ஆறு மாசத்தில ஊத்தி மூடுனப்ப, எனக்கு தெரிஞ்சி எங்க ஊருல 10-20 நாளைக்கு மேல நிப்பாட்டுனது கிடையாது.

7. ரொம்ப நாளா குறைன்னு இருந்த கக்கூசு பிரச்சனையையும் இப்ப சரி படுத்திட்டதா கேள்வி பட்டேன்(ஊரை விட்டு வந்து ஆச்சி அது ஒரு 10-12 வருசம்)

இந்த வகையில எங்க கிராமத்தில தன்முனைப்பா செஞ்ச விசயங்கள் நிறைய. எந்த விதமான தகவல்களோ இல்லை உதவியோ இல்லாதப்பயும் தேவையை முன்னிட்டு தங்களுக்கு தேவையானதை யாரோட உதவியையும் எதிர்பார்க்காம பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க/இருக்காங்க. சும்மா சும்மா நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்காம செயல்ல காட்டுறது அவ்வளவு சுலபமில்லை தான். ஆனா காட்ட முடிஞ்சிருக்கு. அந்த மாதிரி ஊர்ல இருந்து வந்ததனாலேயே, யாராவது, அவன் யோக்கியமா, இவன் யோக்கியமான்னு நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு, இதெல்லாம் கவர்மெண்டு பண்ணனும் ரொம்ப ஈஸியா அடுத்தவங்களை நோக்கி கைய காமிச்சிட்டு நாம என்ன பண்ணியிருக்கோம், என்ன பண்ண முடியும்னு யோசிக்காம இருக்கறவங்களை பாத்தா கொஞ்சம் ஒதுங்கி போகத் தோணுது. சரி அதை விடுங்க.


இப்ப ஜல்லிக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்.
ஒரு நாலஞ்சி பேரு ஊர்ல மண்டையா திரிஞ்சிக்கிட்டு இருந்தாங்க. டெலிபோன் ஆபிஸ்ல எங்கூருக்கு போனு குடுக்க முடியுமா முடியாதாங்குறது, பஸ் டிப்போவுல பஸ்சு கரெக்டா வரணும் வரலைன்னா நடக்கிறதே வேறன்னு சட்டம் பேசுறது, கரண்டாபீஸ்ல போயி எங்கூரு முன்னேறிருச்சி, முதல்ல அந்த ஓட்டை டிரான்ஸ்பார்மரை மாத்துன்னு சவுண்டு விடுறது, ரோட்டைச் சுத்தி காட்டுக் கருவேலை வளர்ந்து போச்சு, அவங்க அவங்க எடத்துல இருக்கறதை வெட்டிருங்க; நாங்க வெட்டுனா கட்டைய நாங்களே வித்துருவோம்னு பயமுறுத்தறதுன்னு அலம்பிக்கிட்டு திரிஞ்சாங்க. அந்த சமயத்தில ஊர்ல இருக்கற ரோடு காணாது, இன்னொரு ரோடு வேணும்னு சண்டை போட்டு புது ரோட்டுக்கு பெர்மிசன் வாங்கி வைச்சிருந்தாங்க. ரோடு போட ஆரம்பிச்சப்ப, காண்ட்ராக்டரை இம்சை பண்றதுக்காக இன்னொரு காண்ட்ராக்டரை தொந்தரவு பண்ணி தெரிஞ்சிக்கிட்ட விசயங்கள் தான் இந்த ஜல்லி விசயங்கள் எல்லாம். மேல சொல்லியிருக்கற விசயங்கள் எல்லாம் மண்டக்காரங்க சொன்ன ஞாபகத்தில இருந்து எழுதுனது. அதனால சரியா இருக்குமான்னு தெரியலை. அப்ப மண்டையா சுத்திக்கிட்டு இருந்ததில ஒருத்தரு இன்னைக்கு ஊர் பஞ்சாயத்து தலைவரு. இப்ப ஊரெல்லாம் சிமெண்டு ரோடு, கலையரங்கம், அங்கங்க கக்கூசு, ரெண்டாவது தண்ணித்தொட்டி, இன்னொரு புது ரோடுன்னு என்னன்ன பண்ண முடியுமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.

6 comments:

துளசி கோபால் said...

நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.

இந்தமாதிரி ஒவ்வொரு ஊரும் இருந்தா நம்ம நாடு எப்பவோ உருப்பட்டிருக்கும்,இல்லே? ஹூம்....

Thangamani said...

தாக்குங்க..
ஜல்லியடிப்பு..
கேக்க சந்தோசமா இருக்கு...

Thangamani said...

நீங்க பின்னூட்டத்த மட்டுறுத்தரதால பிளாக்கர் கணக்கு இல்லாதவங்களுக்கும் பின்னூட்ட வழி பண்ணலாம்.

- உடுக்கை முனியாண்டி said...

வாங்க துளசி. எங்க ஊர்ல நாங்க பண்ணதெல்லாம் சும்மாங்க. Survival ன்ற ஒரே காரணம் தான். ஆனா இத விட நிறைய மத்த இடங்கள்ல பண்ணியிருக்காங்க. Kuthambakkam ன்னு தேடுனீங்கன்னா ஒரு கிராமம் ஒரே ஒருத்தரால எப்டி அடியோட மாறிடிச்சின்னு தெரியும். இத்தனைக்கும் அவர் ஒரு scientist இருந்து வேலைய விட்டுட்டு இந்த வேலைய செஞ்சிக்கிட்டு இருக்காரு. இந்த மாதிரி எத்தனை எத்தனையோ கிராமங்கள். அவங்களுக்கு அதெல்லாம் பெரிய விசயமுன்னு கூட தெரியாது. முடிஞ்சா அந்த மாதிரி சில கிராமங்கள் பத்தியும் அப்புறமா எழுதுறேன். அதையெல்லாமே பதிவு பண்ணனும்னு விருப்பம் இருக்கு. பாக்கலாம்.

தங்கமணி,
மாத்தீட்டேன்.

Unknown said...

//எந்த விதமான தகவல்களோ இல்லை உதவியோ இல்லாதப்பயும் தேவையை முன்னிட்டு தங்களுக்கு தேவையானதை யாரோட உதவியையும் எதிர்பார்க்காம பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க/இருக்காங்க. சும்மா சும்மா நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்காம செயல்ல காட்டுறது அவ்வளவு சுலபமில்லை தான். ஆனா காட்ட முடிஞ்சிருக்கு. அந்த மாதிரி ஊர்ல இருந்து வந்ததனாலேயே, யாராவது, அவன் யோக்கியமா, இவன் யோக்கியமான்னு நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு, இதெல்லாம் கவர்மெண்டு பண்ணனும் ரொம்ப ஈஸியா அடுத்தவங்களை நோக்கி கைய காமிச்சிட்டு நாம என்ன பண்ணியிருக்கோம், என்ன பண்ண முடியும்னு யோசிக்காம இருக்கறவங்களை பாத்தா கொஞ்சம் ஒதுங்கி போகத் தோணுது.//

நாங்க என்னா செஞ்சுகிட்டு இருந்தோம், இருக்கோம் எங்க பக்கம்னும் காட்ட ஆசை வருதுதான். இப்படி நொட்டானையெல்லாம் பார்க்கும்போது., முப்பது வருடம் என்னேரமும் மக்களுக்கு வாத்தியாராகி 'நல்லாசிரியர்' விருது வாங்கியோர்., எப்போதும் தன் மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கலாம் எனப் நகரம் பெயர்ந்து 'திருவள்ளுவர்' விருது வாங்கியவர்கள். இப்படிப் பல விருதுகள் வெளியே காட்ட விருப்பமில்லாமல் பரணில் தூங்குவதானோ., மாற்றம் ஆணந்த சரஸ்வதிகளால்தான் என்று இன்றும் அடித்துக் கொண்டிருக்கிறார்களோ? என்னத்த சொல்றது போங்க....

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி சாரா.

அப்டிப் போடு:
உண்மையிலயே "நல்லாசிரியர்", "திருவள்ளுவர்" வாங்குனவுங்களுக்கு தங்களை விளம்பரப்படுத்திக்கறதுக்கு என்னத்த பெருசா கிழிச்சிட்டோம்ன்ற ஒரு வித கூச்சம் இருக்கும். இந்த மாதிரி எத்தனையோ பேரு ஒவ்வொரு இடத்திலயும் இருந்துக்கிட்டு இருக்காங்க. நமக்கு தான் அதை விட பெரிய வேலைங்கள்லாம்(!!!!!) இருக்கே. என்ன பண்றது...