Mar 13, 2007

இந்த சமூகம் உன்னை(ப்) பொறுப்பேற்கும்/வழிநடத்தும்..

வாரக் கடைசியில பனிச்சறுக்கு போயி பல்டி அடிச்ச கதையை இங்க ஆபிஸ்ல அளந்துகிட்டு இருந்தேன். அதை சொல்லிக்கிட்டு இருக்கும் போது பல்டி அடிக்கிறதுல எனக்கு இருந்த பயத்தையும் இதே இது ஊர்ல இருந்தா எனக்கு இந்தளவுக்கு பயம் இருந்திருக்காதுன்னு அதுல இருக்கற வித்தியாசத்தையும் சொன்னேன். அதாவது இந்த மாதிரி குத்து கரணம் போடுறதால எதாவது கால்ல சுளுக்கோ இல்லை வேற எதாவது சின்ன விபத்தோ நடந்தா இங்க இருக்கறதினால எனக்கு அது கொடுமையா இருக்கும்ன்ற தொனியில சொன்னேன். கேட்டுக்கிட்டு இருந்த நண்பர் சிரிச்சிக்கிட்டே, நான் சொல்றது தப்புன்னும் இங்கதான் நான் எந்த வித பயமும் இல்லாம இருக்கமுடியும்ன்ற வித்தியாசத்தையும் சொன்னாரு. இங்க ஒருத்தருக்கு எதாவது ஒன்னுன்னா அதுக்கு இந்த சமூகம் பொறுப்பெடுத்துக்கும் அப்படின்னாரு.






விளக்கமா சொல்றதுன்னா, யாருக்காவது உடம்புக்கு முடியாமலோ இல்ல ஒரு விபத்தோ நடந்தா அவங்களுக்கு தேவையான உதவி உடனடியா தேடி வந்திரும். குறைஞ்சது ஒரு அஞ்சு நிமிசத்திலருந்து கூடுனது அரைமணி நேரத்துக்குள்ள உங்களை கவனிக்கறதுக்கு பக்கத்தில ஆள் இருப்பாங்க. இந்த உதவி அரசாங்கத்துகிட்ட இருந்தோ இல்ல யாரவது தனி மனிதர்கிட்ட இருந்தோ இருக்கலாம். அதுக்கு மேல நீங்க மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டுட்டீங்கன்னா, மருத்துவமனை உங்களை பொறுப்பெடுத்துக்கும். நீங்க முழுமையா குணம் ஆகுற வரைக்கும் அங்க இருக்கலாம். அதுக்கு மேலயும் உங்களுக்கு வீட்லயும் உதவி தேவைப்பட்டதுன்னா செவிலியர்கள் அப்பப்ப வந்து பாத்துப்பாங்க. கனடாவோட மருத்துவகாப்பீட்டுத்திட்டம் உண்மையிலயே ஒரு நல்ல திட்டம். என்ன மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கறதால எப்பவும் ஒரு பெரிய வரிசை இருக்கும்.

மருத்துவ வசதி இந்த மாதிரின்னா, உங்களுக்கு வேலைக்கும் போக முடியாததால சம்பளம் எதுவும் கிடைக்கலைன்னா அதுவும் அரசாங்கமே குடுத்துரும். அதனால இங்க நம்மளைப் பத்தி எதுவும் நாம கவலைப்பட வேண்டிய தேவையில்ல. இதைத்தான் நண்பர் இந்த சமூகம் உன்னை பொறுப்பெடுத்துக்கும்னு சொன்னாரு.

நண்பர் சொன்னதெல்லாம் உண்மை. எல்லாமே தெளிவான வரைமுறைகள். எங்கயும் எதப் பத்தியும் யோசிக்கவேண்டியதில்லை. நமக்கு ஒரு சான்றிதழ் வேணும்னா அது எப்படி வாங்கனும்ற விதிமுறைகளை பின்பற்றினா வீடு தேடி வந்திரும். எதுவும் அலைய வேண்டியதில்லை, லஞ்சம் குடுக்கவேண்டியதில்லை. பல்லிளிக்கவோ, கூனிக் குறுகவோ வேண்டியதில்லை. ஒருவகையில பார்த்தா எல்லா நாடுகளும் தங்களோட பொது மக்களை இந்த மாதிரி நடத்தினா நல்லாருக்கும்ன்ற எண்ணம் வரும்.


இதைப் பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது, இதுக்கு நாம கொடுக்கற விலை என்னவா இருக்கும்ன்ற கேள்வியும் வந்தது. எல்லாத்துக்குமே ஒரு விலை உண்டு இல்லையா. இந்த விசயத்தை போன பதிவுக்கப்புறமா நடந்த மெயிலாடல்ல என்னோட தோழி ஒருத்தங்க விளக்கமா எழுதியிருந்தாங்க. அது கீழ இருக்கு. அவங்க சொல்றது, நீ குடுக்க வேண்டிய விலை "இந்த சமூகம் உன்னை வழிநடத்தும்" ங்கறதை ஒத்துக்கணும். நீ ஒன்னோட வழியில போக முடியாது. இது உண்மையிலேயே கொஞ்சம் சிக்கலானது. யாரவது ஒருத்தரு உங்களோட வாழ்க்கைய நீங்க எப்படி வாழணும்னு முடிவு பண்ணினா உங்களால ஏத்துக்க முடியுமா ? ஏற்கனவே இங்க குழந்தைகள் வளர்க்கப்படுற விதத்தைப் பாத்து பயந்து போயிருக்கற எனக்கு இவங்க சொல்ற வித்தியாசம் ரொம்ப முக்கியமானதா இருக்கு. .

இப்ப மெயிலாடல்லருந்து


//எனக்கு இங்க குழந்தை வளர்க்கிறதை பாத்தா என்னவோ ஒரு ஆர்மி ட்ரெயினிங் மாதிரி தான் பாக்க முடியுது.//

ஆமாம் முனியாண்டி.

இதுனாலும்தான் நாங்கள் இந்தியா போகவேண்டும் என்ற காரணம் எங்களுக்கு ரொம்பவும் வலுப்பெற்றுவிட்டது. ஒருவகையில், பண,வாழ்க்கை முறை, சமுதாயம், படிப்பிற்கேத்த வேலை இப்படியான தளங்களில், அமெரிக்கா போன்ற நாடுகள் மிக உயர்நிலை அடைந்துவிட்டாலும், தனிமனித அறிவில், ஆன்மீக வாழ்க்கைக்கு இந்தியா ஒரு சிறந்த நாடு என்பது எங்கள் இருவரின் எண்ணம்.

அதனாலுமேகூடத்தான், ஒரு வகையான சமூகக் குளறுபடிக்கு குழந்தை வருமுன்னர் இந்தியாபோய்விட நாங்கள் நினைப்பதை இந்தக் காரணமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது ( பெற்றோருடன் இருக்கவேண்டும்என்ற விருப்பமும்ஒரு காரணம்) நிறைய முறை நாங்கள் சிந்தித்தோம். இந்த ஒரு காரணத்தை எங்களால் புறந்தள்ள முடிந்ததில்லை. அதாவது, ஒரு தனி மனிதன் சார்ந்த சிந்தனையை இந்த வளர்ந்த நாடுகளில் வளரும் குழந்தைகள் தொலைக்கின்றன என்ற எங்களது கணிப்பு நாளுக்கு நாள் உறுதிசெய்யப்படுகிறதே ஒழிய, தவறாகவில்லை. இதுதான் இந்த சமுக வாழ்க்கைக்கு மக்கள் கொடுக்கும் விலையோ என்ற எண்ணம் வலுப்படுகிறது.

இந்தியாவிலும், நாம் இந்த தனி மனித வாழ்க்கையை அடைவதினால் நிறய விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், என்னளவில், ஒரு மனிதனை எப்பொழுதும், பணக்காரனாக, சமூக அந்தஸ்த்து பெற்றவானாக நாம் (பெற்றோர்) மனது வைத்தால் முடியும். ஆனால், அவனது ஆன்மீகத் தேடலில் அந்த அளவுக்கு மேலைநாடுகளில் வளர்த்தால் முடியுமா என்பது எங்கள் இருவரின் கேள்விக்குறியே.

சரி. அதுதான், இந்த புற, அக வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை. இதை எங்கிருந்தாலும் நாம் கொடுத்தேயாகவேண்டும். அதனால் எது வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டால் பின் கவலையில்லை. ஆதலால் எங்களது பிள்ளைகட்கு, சமூக வாழ்க்கைமுறையைவிட அவனது/அவளது தனிப்பட்ட வாழ்க்கைமுறையே (அதாவது, for his values in life, he has to take incharge, not the society) நல்லது என் நாங்கள் இருவரும் உறுதியாக நம்புவதாலும்தான், சீக்கிரம் இந்தியா போய்விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்




(இதை பதிப்பிக்க அனுமதித்த தோழிக்கு நன்றி)

4 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஐரோப்பாவில் இரண்டு வருச வாழ்க்கையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. நாடு திரும்பும் பலரும் குழந்தைகளை முன்னிட்டே திரும்புகிறார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது

Anonymous said...

//யாரவது ஒருத்தரு உங்களோட வாழ்க்கைய நீங்க எப்படி வாழணும்னு முடிவு பண்ணினா உங்களால ஏத்துக்க முடியுமா ? //

unknowingly many of us are accepting this fact.

Thanks for the post


sarah

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி ரவி

//நாடு திரும்பும் பலரும் குழந்தைகளை முன்னிட்டே திரும்புகிறார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது//

தாங்கள் கட்டிக் காப்பாத்திட்டு வர்ற "கலாச்சாரத்தை" எங்க தங்களோட பிள்ளை மதிக்காம போயிருமோன்னு பயந்து போய் போறவங்களை நீங்க சொல்லலைன்னு நினைக்கிறேன்.


சாரா, நன்றி

Santhosh said...

நீங்க சொல்வது சரி தான் முனியாண்டி. ஆனால் நான் இங்க பார்த்த பல குடும்பங்கள் அங்கே இந்தியாவில் இருப்பவர்களை விட நல்ல முறையில் தங்கள் பிள்ளைகளை கலாச்சார முறையில் வளர்க்கிறார்கள். ஆனால் நாளை உலகம் இந்தியா, சைனா போன்ற நாடுகளில் தான் உள்ளது என்பதால் பெரும்பாலானோர் அங்கு செல்கின்றனர்.