Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Dec 19, 2008

அம்மாக்களின் கதை

நம்ம வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு சின்ன விசயம் நடந்து போச்சி....

நம்ம சுமதியக்கா வீடு, அதான் ரவி வீட்டுக்கு எதிர்த்த வீடு, அவங்க வீட்ல பிரச்சனை ஆனதுக்கப்புறமா அந்த வீட்டையும் வித்துட்டு எல்லாம் தனித்தனியா போயிட்டாங்க.

அதை ஒரு டீச்சர், ரிடையர் ஆனவங்கதான், வாங்கி குடிவந்து அதாச்சி ஒரு ஆறேழு மாசம். வீட்டுக்காரர் ரொம்ப நாளைக்கு முன்னாடியே விட்டுட்டு போயிட்டாராம். இவங்களும் பையனும் தான். பையனை இங்க பாலிடெக்னிக்ல படிக்கப்போட்டு அவ்வளவு சிக்கல்லயும் இஞ்சினியரிங்கும் படிக்க வைச்சிருக்காங்க. அந்தப் பையன் இப்ப மெட்ராஸ்ல வேலை பாத்துக்கிட்டு இருக்கான்.

சாயங்காலம் வாசல்ல உக்காந்திருந்தா வருவாங்க நல்லா பேசுவாங்க. என்னவோ தெருவுல வேற யாருகிட்டயும் அவ்வளவா வைச்சிக்கிறது இல்ல.

போன ஒருவாரமா புலம்பிக்கிட்டே இருந்தாங்க. அந்தப் பொலப்பத்துனாலயா இல்ல என்னன்னு தெரியலை அவங்களுக்கு உடம்பும் சரியில்லாமா போச்சி. நான் கூட ரெண்டு தடவை கூழு காச்சி குடுத்தேன். அடுத்த தடவை எடுத்துட்டு போனப்ப அவங்க வீட்ல இல்ல. ஆஸ்பத்திருக்கு போயிட்டாங்க. செல்வியக்கா தான் அதைக் காலி பண்ணினாங்க.

எல்லாம் பையனைப்பத்தின புலம்பல் தான். போன இடத்திலயா இல்ல படிக்கும்போதான்னு தெரியலை அந்தப் பையனுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்திருக்கு. போன வாரம் கல்யாணமும் முடிச்சிட்டான். இவங்களுக்கு சொல்லவும் இல்லை. பக்கத்துத் தெரு முக்குல இருக்கற ப்ரெண்ட்ஸுக்கெல்லாம் பத்திரிக்கை வைச்சிருக்கான்.

இவங்களுக்கு இந்த விசயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பொண்ணோட வீட்லருந்து அவங்க அப்பாவும் அம்மாவுக்கு விசயம் தெரிஞ்சி அவங்களே வந்திருக்காங்க. அவங்க வீட்ல மொதப்பொண்ணு ஓடிப்போனதினால ரெண்டாவது பொண்ணுக்கும் அதே மாதிரி ஆகிறக்கூடாதுன்னுதான் கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்கு வந்திருக்காங்க. இந்தம்மாதான் பிடி கொடுக்கலை.

அதுக்கப்புறமா அந்தப் பையனா கல்யாணம் முடிச்சிட்டான். கல்யாணம் நல்லா பெருசாவே பண்ணியிருக்காங்க. எல்லாம் போயிட்டு வந்தவங்க சொன்னது தான். இவங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதிலருந்தே மனசு கேக்கலை. எவ்வளவு பண்ணியிருக்கேன். அவனை முன்னாடி கொண்டு வர்றதுக்கு தனியா எவ்வளவு கஷ்டப்பட்டேன். பெத்தவளுக்கு என்ன மரியாதை. இப்படிப் பண்ணிட்டானேன்னு புலம்பிக்கிட்டே இருந்தாங்க. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மூணு நாள்லயே இவங்களுக்கும் உடம்பு முடியாம போயிருச்சி.

நாளு நாளைக்கு முன்னாடி ஈஸ்வரியக்கா தான் வந்து கதவை தட்டுனாங்க. டீச்சர் வீட்ல முனிசிபாலிட்டி தண்ணி வெள்ளம் போயிட்டிருக்கு. வீட்டு கேட்டும் உள்ள பூட்டியிருக்கு. பக்கத்து வீட்டு பீட்டி மாஸ்டர் கேட்டு மேல ஏறி உள்ள போனாரு. கதவு பூட்டாம தான் கிடந்துச்சி. எப்ப நடந்ததுன்னு யாருக்கும் தெரியலை. நைட்டு தான் உயிர் போச்சா இல்லை முந்துன நாளே போயிருச்சான்னு தெரியலை.

என்ன சொல்றது. யாருக்கு சொல்றதுன்னு கூட புரியலை. மாமா கூட அவங்களுக்கு சொந்தக்காரங்க ஒருத்தரு வேலை பாக்கறாரு. அதனால மாமாவை கூப்புட்டு அவங்களுக்கு சொல்ல சொன்னேன். சுத்தி முத்தி நிறைய சொந்தக்காரங்க இருப்பாங்க போலருக்கு. நிறையப் பெரு. நல்ல கூட்டம்.

பையனுக்கும் தகவல் சொல்லிவிட்டு அந்தப் பொண்ணு அவங்க அம்மா அப்பா எல்லாம் வந்திருந்தாங்க. அழகு பட்ட பொண்ணு. இன்னும் கொஞ்ச நேரம் நின்னு பாக்கலாமோன்னு தோணும். அந்தப் பையன்தான் அப்படி அழுதுக்கிட்டு இருந்தான். என்னால தான, என்னால தானன்னு அந்தப் பையன் அழுததை பாக்கவே எப்படியோ இருந்தது. எப்ப நடந்ததுன்னு தெரியாததால ரொம்ப நேரம் வைச்சிருக்கலை.

பையன் இன்னும் இங்க தான் இருக்கான். நான் அந்தப் பையன்கிட்ட எதுவும் பேசலை. பக்கத்து வீட்டுக்காரங்க, கீரை விக்கிறம்மான்னு போனவங்ககிட்டயெல்லாம் அப்படி அழுதானாம். என்ன அழுது என்ன பண்ண, போனது போனது தான.

நீயும் இந்த மாதிரி எதையாவது பண்ணித் தொலைச்சிராத. பாத்து இருந்துக்கோ.

May 27, 2008

நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் IISc

பெங்களூர்ல இருக்கற இந்திய அறிவியல் கழகம் (IISc) இன்னைக்கு(மே 27, 2008) தன்னோட நூறாவது ஆண்டுல அடியெடுத்து வைக்குது. இந்திய அறிவியலோட கலங்கரை விளக்கமா இருக்கற ஐஐஎஸ்சிக்கு என்னோட வாழ்த்துக்கள்.


ஐஐஎஸ்சி பிரதான கட்டிடம்.



இந்த சிலை, ஐஐஎஸ்சி உருவாக காரணமா இருந்த ஜே.ஆர்.டி டாட்டாவோடது. ஆரம்ப காலங்கள்ல இந்த நிறுவனம் டாட்டா இன்ஸ்டிடுயூட்ற பேர்ல தான் அறியப் பட்டிருக்கு.


பி.கு: தமிழ் வலையுலகத்தில IIScல இருந்து வந்தவங்கன்னு எனக்குத் தெரிஞ்சி ஒரு கும்பல் இருக்கு.

1. நாக.கணேசன்
2. மு.சுந்தரமூர்த்தி
3. வெங்கட்
4. அருள்செல்வன்
5. பாரி.பாலாஜி
6. கையேடு இரஞ்சித்
7. தங்கமணி

அவங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்.

Feb 16, 2008

மண்ணைத் தின்று உயிர் வாழும் மக்கள்

சின்னக் குழந்தைக மண்ணைத் திங்கிறதும் கர்ப்பமா இருக்கறவங்க திங்கிறதும் கேள்விப்பட்டது தான். ஆனா உயிர் வாழ்றதுக்கே மண்ணைத் தான் திங்க வேண்டியதிருக்குன்னு கேக்கும் போது பயங்கர அதிர்ச்சியா இருக்கு. இந்த மாதிரி நடக்கிறது ஹைய்தின்ற நாட்டில.





தொடர்பு பட்ட செய்திகள்

1.
2.

Jan 7, 2008

கக்கூஸ் டெக்னாலஜி

நம்மூர்ல இருக்கற கட்டணக் கழிப்பறைகள்ல மூக்க மூடிக்கிட்டு எதையும் கண்டுக்காம ஒன்னுக்கு அடிக்கவோ இல்ல மலம் கழிக்கவோ செஞ்சிட்டு வந்துடறோம். ஒரு சில இடங்கள்ல தவிர்க்கவே முடியாம உபயோகப்படுத்திட்டு வாழ்க்கையே வெறுப்பானதும் உண்டு. இங்க எல்லா இடங்கள்லயும் நல்லா சுத்தமாவே வைச்சிருக்காங்க. இருந்தாலும் இங்க இருக்கற வெஸ்டர்ன் டாய்லட்னு நம்மூர்ல சொல்ற கக்கூஸ்கள்ல மலம் கழிக்கணும்னா ஒரு தட்டு மேல உக்காந்து தான் இருக்கணும். பரபரப்பா இயங்குற விமானநிலையம் மாதிரி இடங்கள்ல ஏற்கனவே ஒருத்தர் உக்காந்த இடத்துமேல உக்காந்து மலம் கழிக்கறதுக்கு கொஞ்சம் நெருடலாவே இருக்கும். அதுக்காக புதுசா ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைச்சிருக்காங்க. இந்த வடிவமைப்பு படி நாம உக்கார்ற கோப்பை மேல ஒரு சிறப்பு பூச்சை கொடுத்துட்டா, சமீபத்தில அந்த கழிப்பறைய யாரும் உபயோகப்படுத்தியிருக்காங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம். இந்த சிறப்பு பூச்சு தெர்மோகுரோமிக்(thermochromic)ன்ற பொருளால ஆனது. இந்த பொருளோட சிறப்பு, வெப்பத்துக்கு தகுந்தமாதிரி தன்னோட நிறத்தை மாத்தறது தான். இந்த வடிவமைப்போட படம் தான் கீழ இருக்கறது.


மூலம்: Canadiandesingresource

Dec 25, 2007

மைக்ரோநாடுகள்

ஒரு தனி மனுசனுக்கு, இல்லை ஒரு குடும்பத்துக்கு, இல்லை ரெண்டு மூணு குடும்பத்துக்கு மட்டும் தனியா ஒரு நாடுன்னு கற்பனை பண்ணிப் பாக்கமுடியுதா உங்களால. கிட்டத்தட்ட 8 கோடிப் பேர் இருக்கோம், இருந்தும் ஈழம்னு ஒரு தனி நாட்டுக்காக எவ்வளவு சண்டை, எத்தனை உசுரு. இந்த இலட்சணத்தில குடும்பத்துக்கு ஒரு நாடெல்லாம் வாய்ப்பே இல்லைங்கற கும்பலா நீங்க. நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் மைக்ரோநாடுகள்ன்னு சொல்லப்படுற குட்டி நாடுகளும் இந்த உலகத்தில இருக்கு. ஏகப்பட்ட மைக்ரோநாடுகள் ஆரம்பத்தில (1970கள்ல) இருந்தாலும் இப்போதைக்கு மூணு நாடுகள் இருக்கு. இதெல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்களாவே அறிவிச்சிக்கறது. நாடுகள்னு சொல்லப்படுறதுக்கான வரைமுறைக்குள்ள இதுகள் அடங்கினாலும் உலக அமைப்புகள் இந்த நாடுகள் எதையும் அங்கீகரிக்கலை. ஆனாலும் இந்த நாடுகள் நாடுகள் செய்ற பாஸ்போர்ட் வெளியிடுறது, தபால் தலை, காசு வெளியிடுறது, தனியா கொடி வைச்சிக்கறது மாதிரி வேலையெல்லாம் செஞ்சிக்கிட்டு தான் இருக்காங்க. இதுல இப்போதைக்கு இருக்கற மூணு நாடுகளைப்பத்தி மட்டும் பாக்கலாம்.

1. சீலேண்ட் (Principality of Sealand)
மைக்ரோநாடுகள்ல அதிகமா வெளியுலகத்துக்கு தெரிஞ்சது இந்த நாடு தான். பேர்ல இருக்கற மாதிரியே இது ஒரு கடல்நாடு தான். இந்த நாட்டுக்குன்னு சொந்தமா தரை கிடையாது. இரண்டாம் உலகப்போரப்ப இங்கிலாந்து படைகள் வானூர்தி எதிர்ப்பு தளமா பயன்படுதின ஒரு சின்ன இடம் தான் இந்த நாடு. இது இங்கிலாந்துக்குப் பக்கத்திலயே இருக்கு. இருந்தும் போர் முடிஞ்சதுக்கப்புறமா படைகள் இந்த இடத்தை உபயோகப்படுத்தாம விட்டுட்டாங்க. அதை ஒருத்தர் ஆக்கிரமிச்சி தனி நாடா அறிவிச்சிட்டாரு.சமீபத்தில இதை விக்கப் போறதா கூட அறிவிச்சிருந்தாங்க. சிவாஜி ரஜினி மாதிரி கோடிகள் சம்பாதிச்சி வைச்சிருந்தீங்கன்னா நீங்ககூட முயற்சி பண்ணிப் பாக்கலாம். இந்த நாடு பரபரப்பா செய்திகள்ல அடி பட்டதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இந்த நாட்டுல நடத்தப்படுற டேட்டா சென்டர். காப்புரிமை பிரச்சனையிலருந்த தப்பிக்க இது நல்ல வழின்னு மியூசிக், வீடியோ கோப்புகளை சட்டத்துக்கு புறம்பா விநியோகம் செய்ற கம்பெனிக்காரங்க இந்த நாட்டை வாங்க முயற்சி செஞ்சாங்க. இன்னும் செஞ்சிக்கிட்டு தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.




2. மொலாசிய குடியரசு:
சில ஹெக்டேர் நிலத்தில மட்டுமே அமைஞ்சிருக்கற ஒரு நாடு. இன்னும் ஆச்சரியமானது இது அமெரிக்கவுக்குள்ளயே நெவதா மாகாணத்தில இருக்கு. மொத்த மக்கள் தொகை 4 பேர். இதுல மூணு ஆண்கள், ஒரு பெண். இருக்கற நாலு பேர்ல இந்த நாட்டோட விதிப்படி நாட்டோட இராணுவத்தில சேர்றதுக்கு ஒரே ஒருத்தர் தான் தகுதியானவர். இப்போதைக்கு அவர் தான் இந்த நாட்டோட அதிபரும் கூட.



3.ரெடோண்டா:
ஒரு சதுர மைல் பரப்பளவே உள்ள ஒரு குட்டிப் பாறை தான் இந்த நாடு. இந்த நாட்டுக்காக பலபேர் உரிமை கொண்டாடிக்கிட்டு இருக்காங்களாம். இந்த நாடு அமெரிக்கா பக்கத்தில இருக்கற ஆண்டிகுவா வோட பராமரிப்புல இப்போதைக்கு இருக்கு. இந்த நாட்டோட முக்கிய வருமானம் கடற்பறவைகள் போடுற எச்சம். வருசத்துக்கு 7000 டன் அளவில பறவைகளோட எச்சம் இந்த இடத்திலருந்து கிடைச்சிருக்குது. தற்போதைக்கு இந்த நாட்டில யாரும் வசிக்கலை.



இதைத்தவிர பல மைக்ரோ நாடுகள் இருந்திருந்தாலும் தற்போதைக்கு அது எல்லாம் இணையத்தில மட்டுமோ இல்லை பக்கத்து நாடுகளால கபளீகரம் செய்யப்பட்டோ இருக்கு.

இணைப்புகள்

1. விக்கிப்பீடியா
2. Weburbanist

இணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்

வருசத்துக்கு எத்தனை புத்தகங்கள் வெளியாகுதுன்னு எப்பவாவது யோசிச்சி பார்த்திருக்கீங்களா? சரியான கணக்கு எனக்கு கிடைக்கலைன்னாலும் சுமாரா 10 இலட்சம் புத்தகத்துக்கு மேல வெளியாகுதுன்னு விக்கிபீடியா சொல்லுது. எண்ணிக்கைய பாக்கும் போதே தலைசுத்தல் வருது. வர்ற ஒவ்வொரு புத்தகத்தையும் த்லைமுறைக்கும் பாதுகாக்கணும்னா யோசிச்சி பாருங்க. நூலகங்கள்லயும் எவ்வளவு புத்தகங்களைத் தான் சேத்து வைக்கமுடியும். இப்ப வர்ற புத்தங்களாவது பரவாயில்லை, டிஜிட்டல் முறையில கிடைக்கறதால இன்னும் கொஞ்சம் காலத்துக்கு அதை பாதுகாக்கலாம். ஆனா ஏற்கனவே வந்த புத்தகங்களோட நிலைமை? பழைய புத்தகங்களை பாதுகாக்கறதுக்காக ஏற்கனவே குட்டென்பெர்க் திட்டம் செயல் பட்டுக்கிட்டிருக்கு. இதுல 100,000 புத்தகங்களை இலவசமா தர்றாங்க. தமிழ்லயும் மதுரைத்திட்டம் செயல் பட்டுக்கிட்டு இருக்கு. ஈழத்துமக்களும் தங்களோட படைப்புகளை நூலகம் திட்டம் மூலமா மாத்திக்கிட்டு இருக்காங்க. இது போக கூகுள் மாதிரி பெருந்தலைகளும் இந்த வேலையில இறங்கியிருக்காங்க.

இதுக்கு நடுவில சத்தமேயில்லாம் சில பல்கலைக்கழகங்களும் இந்த வேலையில இறங்கி இது வரைக்கும் 10 இலட்சம் புத்தகங்களை டிஜிட்டைஸ் பண்ணியிருக்காங்க. இவங்களோட இலக்கு 1 கோடி. தமிழ்ல இதுவரைக்கூம் 4000 புத்தகங்கள் முடிஞ்சிருக்கு. தெலுங்குல 50,000மும் கன்னடத்தில 20,000மும் முடிஞ்சிருக்கு. இந்த புத்தகங்கள் எல்லாரோட பார்வைக்கும் இணையத்தில கிடைக்குது.

இதைப்பற்றிய செய்திக் குறிப்பு

நூலகத்திற்கு செல்ல

முடிக்கப்பட்ட புத்தக எண்ணிக்கைகளோட விபரம்

பிகு: புத்தகங்களை தேடிப் படிக்கறது இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. போகப்போக சரியாகும்னு நம்புவோம்.

பிகு2: நூலகம் திட்டத்தை பின்னூட்டத்தில் நினைவு படுத்திய நண்பர் மயூரனுக்கு நன்றி

Mar 13, 2007

இந்த சமூகம் உன்னை(ப்) பொறுப்பேற்கும்/வழிநடத்தும்..

வாரக் கடைசியில பனிச்சறுக்கு போயி பல்டி அடிச்ச கதையை இங்க ஆபிஸ்ல அளந்துகிட்டு இருந்தேன். அதை சொல்லிக்கிட்டு இருக்கும் போது பல்டி அடிக்கிறதுல எனக்கு இருந்த பயத்தையும் இதே இது ஊர்ல இருந்தா எனக்கு இந்தளவுக்கு பயம் இருந்திருக்காதுன்னு அதுல இருக்கற வித்தியாசத்தையும் சொன்னேன். அதாவது இந்த மாதிரி குத்து கரணம் போடுறதால எதாவது கால்ல சுளுக்கோ இல்லை வேற எதாவது சின்ன விபத்தோ நடந்தா இங்க இருக்கறதினால எனக்கு அது கொடுமையா இருக்கும்ன்ற தொனியில சொன்னேன். கேட்டுக்கிட்டு இருந்த நண்பர் சிரிச்சிக்கிட்டே, நான் சொல்றது தப்புன்னும் இங்கதான் நான் எந்த வித பயமும் இல்லாம இருக்கமுடியும்ன்ற வித்தியாசத்தையும் சொன்னாரு. இங்க ஒருத்தருக்கு எதாவது ஒன்னுன்னா அதுக்கு இந்த சமூகம் பொறுப்பெடுத்துக்கும் அப்படின்னாரு.






விளக்கமா சொல்றதுன்னா, யாருக்காவது உடம்புக்கு முடியாமலோ இல்ல ஒரு விபத்தோ நடந்தா அவங்களுக்கு தேவையான உதவி உடனடியா தேடி வந்திரும். குறைஞ்சது ஒரு அஞ்சு நிமிசத்திலருந்து கூடுனது அரைமணி நேரத்துக்குள்ள உங்களை கவனிக்கறதுக்கு பக்கத்தில ஆள் இருப்பாங்க. இந்த உதவி அரசாங்கத்துகிட்ட இருந்தோ இல்ல யாரவது தனி மனிதர்கிட்ட இருந்தோ இருக்கலாம். அதுக்கு மேல நீங்க மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டுட்டீங்கன்னா, மருத்துவமனை உங்களை பொறுப்பெடுத்துக்கும். நீங்க முழுமையா குணம் ஆகுற வரைக்கும் அங்க இருக்கலாம். அதுக்கு மேலயும் உங்களுக்கு வீட்லயும் உதவி தேவைப்பட்டதுன்னா செவிலியர்கள் அப்பப்ப வந்து பாத்துப்பாங்க. கனடாவோட மருத்துவகாப்பீட்டுத்திட்டம் உண்மையிலயே ஒரு நல்ல திட்டம். என்ன மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கறதால எப்பவும் ஒரு பெரிய வரிசை இருக்கும்.

மருத்துவ வசதி இந்த மாதிரின்னா, உங்களுக்கு வேலைக்கும் போக முடியாததால சம்பளம் எதுவும் கிடைக்கலைன்னா அதுவும் அரசாங்கமே குடுத்துரும். அதனால இங்க நம்மளைப் பத்தி எதுவும் நாம கவலைப்பட வேண்டிய தேவையில்ல. இதைத்தான் நண்பர் இந்த சமூகம் உன்னை பொறுப்பெடுத்துக்கும்னு சொன்னாரு.

நண்பர் சொன்னதெல்லாம் உண்மை. எல்லாமே தெளிவான வரைமுறைகள். எங்கயும் எதப் பத்தியும் யோசிக்கவேண்டியதில்லை. நமக்கு ஒரு சான்றிதழ் வேணும்னா அது எப்படி வாங்கனும்ற விதிமுறைகளை பின்பற்றினா வீடு தேடி வந்திரும். எதுவும் அலைய வேண்டியதில்லை, லஞ்சம் குடுக்கவேண்டியதில்லை. பல்லிளிக்கவோ, கூனிக் குறுகவோ வேண்டியதில்லை. ஒருவகையில பார்த்தா எல்லா நாடுகளும் தங்களோட பொது மக்களை இந்த மாதிரி நடத்தினா நல்லாருக்கும்ன்ற எண்ணம் வரும்.


இதைப் பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது, இதுக்கு நாம கொடுக்கற விலை என்னவா இருக்கும்ன்ற கேள்வியும் வந்தது. எல்லாத்துக்குமே ஒரு விலை உண்டு இல்லையா. இந்த விசயத்தை போன பதிவுக்கப்புறமா நடந்த மெயிலாடல்ல என்னோட தோழி ஒருத்தங்க விளக்கமா எழுதியிருந்தாங்க. அது கீழ இருக்கு. அவங்க சொல்றது, நீ குடுக்க வேண்டிய விலை "இந்த சமூகம் உன்னை வழிநடத்தும்" ங்கறதை ஒத்துக்கணும். நீ ஒன்னோட வழியில போக முடியாது. இது உண்மையிலேயே கொஞ்சம் சிக்கலானது. யாரவது ஒருத்தரு உங்களோட வாழ்க்கைய நீங்க எப்படி வாழணும்னு முடிவு பண்ணினா உங்களால ஏத்துக்க முடியுமா ? ஏற்கனவே இங்க குழந்தைகள் வளர்க்கப்படுற விதத்தைப் பாத்து பயந்து போயிருக்கற எனக்கு இவங்க சொல்ற வித்தியாசம் ரொம்ப முக்கியமானதா இருக்கு. .

இப்ப மெயிலாடல்லருந்து


//எனக்கு இங்க குழந்தை வளர்க்கிறதை பாத்தா என்னவோ ஒரு ஆர்மி ட்ரெயினிங் மாதிரி தான் பாக்க முடியுது.//

ஆமாம் முனியாண்டி.

இதுனாலும்தான் நாங்கள் இந்தியா போகவேண்டும் என்ற காரணம் எங்களுக்கு ரொம்பவும் வலுப்பெற்றுவிட்டது. ஒருவகையில், பண,வாழ்க்கை முறை, சமுதாயம், படிப்பிற்கேத்த வேலை இப்படியான தளங்களில், அமெரிக்கா போன்ற நாடுகள் மிக உயர்நிலை அடைந்துவிட்டாலும், தனிமனித அறிவில், ஆன்மீக வாழ்க்கைக்கு இந்தியா ஒரு சிறந்த நாடு என்பது எங்கள் இருவரின் எண்ணம்.

அதனாலுமேகூடத்தான், ஒரு வகையான சமூகக் குளறுபடிக்கு குழந்தை வருமுன்னர் இந்தியாபோய்விட நாங்கள் நினைப்பதை இந்தக் காரணமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது ( பெற்றோருடன் இருக்கவேண்டும்என்ற விருப்பமும்ஒரு காரணம்) நிறைய முறை நாங்கள் சிந்தித்தோம். இந்த ஒரு காரணத்தை எங்களால் புறந்தள்ள முடிந்ததில்லை. அதாவது, ஒரு தனி மனிதன் சார்ந்த சிந்தனையை இந்த வளர்ந்த நாடுகளில் வளரும் குழந்தைகள் தொலைக்கின்றன என்ற எங்களது கணிப்பு நாளுக்கு நாள் உறுதிசெய்யப்படுகிறதே ஒழிய, தவறாகவில்லை. இதுதான் இந்த சமுக வாழ்க்கைக்கு மக்கள் கொடுக்கும் விலையோ என்ற எண்ணம் வலுப்படுகிறது.

இந்தியாவிலும், நாம் இந்த தனி மனித வாழ்க்கையை அடைவதினால் நிறய விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், என்னளவில், ஒரு மனிதனை எப்பொழுதும், பணக்காரனாக, சமூக அந்தஸ்த்து பெற்றவானாக நாம் (பெற்றோர்) மனது வைத்தால் முடியும். ஆனால், அவனது ஆன்மீகத் தேடலில் அந்த அளவுக்கு மேலைநாடுகளில் வளர்த்தால் முடியுமா என்பது எங்கள் இருவரின் கேள்விக்குறியே.

சரி. அதுதான், இந்த புற, அக வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை. இதை எங்கிருந்தாலும் நாம் கொடுத்தேயாகவேண்டும். அதனால் எது வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டால் பின் கவலையில்லை. ஆதலால் எங்களது பிள்ளைகட்கு, சமூக வாழ்க்கைமுறையைவிட அவனது/அவளது தனிப்பட்ட வாழ்க்கைமுறையே (அதாவது, for his values in life, he has to take incharge, not the society) நல்லது என் நாங்கள் இருவரும் உறுதியாக நம்புவதாலும்தான், சீக்கிரம் இந்தியா போய்விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்




(இதை பதிப்பிக்க அனுமதித்த தோழிக்கு நன்றி)

Mar 12, 2007

குழந்தைகளுக்கு ஏனிந்த நிறப் பாகுபாடு !!!!

நண்பரோட குட்டிக்குழந்தைக்கு துணி எடுக்க போயிருந்தோம். குட்டீஸ் பிரிவுல இருந்த துணியெல்லாம் ரெண்டே ரெண்டு கலர்லதான் இருந்தது. ஒன்னு புளு இன்னொன்னு பிங்க். மீதிக் கலர்லாம் இல்லைன்னு கூட சொல்லலாம. அந்தளவுக்கு கம்மி. இதுவே எனக்கு அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருந்தது. நண்பர்ட்ட இதைப்பத்தி கேட்டா பையனுங்கன்னா புளு கலர், பொண்ணுங்கன்னா பிங்க் கலர் அப்டின்னாரு. கடையில எனக்கு பிடிச்ச டிசைன்லாம் புளு கலர்ல தான் இருக்கு. ஆனா நாம நினைச்ச மாதிரியெல்லாம் இங்க டிரெஸ் மாட்டி விடக்கூடாதுன்னுட்டாரு.

எனக்கு இன்னும் இந்த வித்தியாசம் விளங்கமாட்டேங்குது. ஒரு குழந்தைக்கு என்ன கலர் டிரெஸ் நல்லா இருக்கோ அதை மாட்டி விடலாம்ல. இல்லை கலருக்கு ஒன்னா போட்டு விடலாம்ல. அதை விட்டுட்டு இது என்ன திருகுதாளம்னு தெரியலை. குழந்தையை ஆண்/பெண்ணுன்னு வித்தியாசப் படுத்தி காட்டணும்ன்றதுக்காக இப்டியெல்லாம் பண்றது சரியா தெரியலை.






இந்தியாவுல இந்த மாதிரி வம்பெல்லாம இல்லைன்னு நினைக்கிறேன்.குறைஞ்ச பட்சம் எனக்கு அந்த மாதிரி அனுபவம்லாம் இல்லை. ஏன்னா நாலு வயசு வரைக்கும் "free bird" தான்.

சரி, எதுக்காக இந்த கூத்தெல்லாம் பண்றாங்கன்னு தேடுனா வர்ற விபரம் பெரிய கூத்தா இருக்கு. இந்த கலர் கண்ணாமூச்சியெல்லாம் இப்ப சமீபத்தில 20ம் நூற்றாண்டுலருந்து தான் ஆரம்பிச்சிருக்காங்க. அதுலயும் முதல்ல பையன்களுக்கு பிங்க் பொண்ணுங்களுக்கு புளுன்னு பிரிச்சிருக்காங்க. அவங்க அப்ப பிரிச்சதுக்கு ஒரு கதை வேற கட்டி வைச்சிருக்காங்க. . பிங்க் கலர், சிவப்பை வெளிற வைக்கிறதினால வருது. சிவப்புன்றது தெளிவு, வீரம், கோபம் இதைக் குறிக்குதாம். அதனால இது ஆணுக்காம். புளு கலர் அமைதியைக் குறிக்குதாம். அதனால இது பெண்ணுக்காம்.

இந்த நடைமுறைக்கு என்ன ஆச்சின்னு தெரியலை. திடீர்ன்னு பாத்தா இரண்டாம் உலகப் போருக்கப்புறமா இது அப்டியே உல்டாவாக்கிட்டாங்க. இப்ப வந்து ஆண்களுக்கு புளு, பெண்களுக்கு பிங்க்.

எவனுக்கோ என்னவோ ஆகி ஏடாகூடமா எதாவது பண்ணுனா அதை அப்டியே காப்பியடிக்கிறது நல்லாவா இருக்கு.

நம்மூர்ல மட்டும் தான் சுடலை மாடனும் அய்யனாரும் யாருக்குமே தெரியாம சிவனுக்கு சொந்தக்காரணாவங்கன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இந்த கலர் கலட்டாவைப் பாத்தா இந்த மாதிரி திருகுதாளம் எல்லா ஊருலயும் இருக்கும் போலருக்குது.

கலர் கலரா கலக்கவேண்டிய குழந்தைங்க தான் பாவம்!!!!

Mar 4, 2007

ஹோலி தின வாழ்த்துக்கள் -வீடியோ

நேத்து ஹோலி தினமாம். ஹோலின்னா எனக்கு என்னன்னு தெரியாது. ஆனா அது ஒரு கொண்டாட்டம் கலந்த பண்டிகைன்னு மட்டும் தெரியும். அதனால எனக்கு ஹோலி பிடிக்கும். இன்னைக்கு ஹோலி கொண்டாட்டம் பத்தி நண்பன் ஒரு வீடியோ அனுப்பிருந்தான். எனக்கு பிடிச்சிருந்தது. இங்க உங்களுக்கும். ஹோலி தின வாழ்த்துக்கள்

Oct 28, 2006

குழந்தைத் தொழிலாளி

India Literacy Project (ILP) நண்பர்கள் மூலமா சிக்கின ஒரு குழந்தை தொழிலாளி பத்தின ஒரு வீடியோ.





இந்த வீடியோவை பாத்துட்டு youtube ல நோண்டிக்கிட்டு இருந்தப்ப கிடைச்ச இன்னொரு வீடியோ. ஆணாதிக்கச் சமூகத்தில பெண்கள் படுற அவஸ்தையைப் பத்தினது.




ம்ம்ம்ம்ம்... இதெல்லாம் பாக்கும்போது, நாம போக வேண்டிய தூரம் ரொம்பவே அதிகமா தோணுது..

நன்றி : http://nalandaway.blogspot.com/

Jul 15, 2006

டாக்டர் . வெங்கடசாமி - அரவிந்த் கண் மருத்துவமனை

Intelligence and capability are not enough. There must be the joy of doing something beautiful
Dr.G.Venkatasawamy


"Whenever I visited Madurai, for me it was a pilgrimage to visit the Arvind Eye Hospital and meet the great soul, Dr. G. Venkataswamy, who gave light to more than a hundred thousand patients -- Dr APJ Abdul Kalam



அரவிந்த் கண் மருத்துவமனை அப்டின்னா இங்க பல பேருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதோட நிறுவனர் பத்மஸ்ரீ. டாக்டர் வெங்கடசாமி போன வாரம் தன்னோட 87வது வயசுல இறந்து போயிட்டாரு. அதைப் பத்தி யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை(இல்லை என் கண்ல படலையா). சரி அவரு அவ்வளவு முக்கியமானவர் இல்லைன்னு எல்லாரும் விட்டுட்டாங்க போலருக்கு.


1948ல்ல தன்னோட கை விரல்களோட பாதி செயல் திறனை இழந்ததுக்கப்புறமா தன்னோட கண் மருத்துவரா ஆகிறதுக்கான் மேல் படிப்புகளை ஆரம்பிச்சவரு. கடைசி வரைக்கும் தன்னோட cripple ஆன விரல்களால தான் அறுவை சிகிச்சைகளை பண்ணிருக்காரு. அவர் மட்டும் தனியொருத்தரா ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை பண்ணியிருக்காரு. இது ஒரு தனி மனுசனோட ஆர்வம், உழைப்பு, ஈடுபாடு.இன்னைக்கு அவர் பேர் சொல்ல வைச்சிருக்கற விசயங்கள்ல இதுவும் ஒன்னுன்னு தான் சொல்ல முடியும். ஏன்னா முக்கியமான விசயங்கள்னு சொன்னா அது அவரோட சமூகப் பார்வை.




இன்னைக்கு பல கிராமங்கள்ல கண் பார்வைக் குறைபாடுகள் கம்மியா/இல்லாம இருக்குன்னா அதுக்கு முழு முதல் காரணம் இவர் தான். நடமாடும் கண் பரிசோதனை மையத்திட்டங்களை உருவாக்கி மருத்துவர்களை மக்களை நோக்கி அனுப்புனது இவர் தான். இது இவர் அரசாங்கத்தோட ஆதரவுல ஒரு டாக்டரா பண்ணினது.

ஆனா அரசாங்க வேலையில இருந்து ரிட்டையர் ஆனதுக்கப்புறமா பண்ணினது தான் மகத்தான விசயங்கள். சமூகத்தின் மேல அக்கறை உள்ள யாரும், உறுதியான செயல் திட்டங்களோட இறங்குனா வயசையெல்லாம் தாண்டி ஜெயிக்கமுடியும்னு காமிச்சிருக்காரு. தன்னோட ரிடையர்மெண்ட் அப்ப சொந்த முயற்சியில 11 படுக்கை வசதியோட ஆரம்பிச்சது தான் இந்த அரவிந்த் மருத்துவமனை. இன்னைக்கு உலக அளவுல பேர் சொல்ற அளவுக்கு இருக்குன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவர் மட்டும் தான் காரணம்.

http://www.aravind.org

இன்னைக்கும் இந்த மருத்துவமனைகள் (மதுரை தாண்டி இன்னும் சில இடங்கள்ல இருக்கு) ஏழை மக்களை முன்னிறுத்திதான் தங்களோட பயணத்தை தொடர்ந்து கிட்டு இருக்கு. அரசாங்கத்தை எதிர்பார்க்காம தங்களோட செலவுலயே மக்களை நோக்கிப் பயணம் செஞ்சி இன்னும் நல்லாவே பண்றாங்க. தங்களோட மருத்துவ செலவை கவனிச்சிக்க முடிஞ்சவங்ககிட்ட வாங்குற பணம் மறுபடியும் ஏழைகளுக்கான சிகிச்சை, ஆராய்ச்சின்னு தான் செலவு செய்யப் படுது. இவங்களோட ஆராய்ச்சியால சில ஆயிரங்களுக்கு விக்கப் படுற கண்ணுக்கு உள்ள வைக்கப்படுற லென்ஸ் இப்ப சில நூறுகளுக்கு கிடைக்குது. மறுபடியும் இதுவும் சமூகத்தை முன்னிறுத்திதான்.

இவரைப் பத்தி எழுதணும்னா நிறைய எழுதலாம். ஆனா ஒரே ஒரு லிங்க் மட்டும்


இந்த அமைப்பு பத்தி எழுதப் பட்டுள்ள ஒரு கட்டுரை



அவர் கட்டுக்கோப்பா வளர்த்த இந்த மருத்துவமனை/அமைப்பு அவரோட எண்ணங்களின்படி இன்னும் சிறப்பா வளரும்னு நம்புவோம்.

இந்த மண்ணின் மைந்தனா, இந்த மண்ணின் மக்களுக்காகவே வாழ்ந்த இந்த ஆத்மாவுக்கு எனது அஞ்சலிகள்

Mar 28, 2006

பெண்ணே! பெண்ணே!

சமீபத்தில கடந்து போன பெண்கள் தினத்துக்கு தோழிகளுக்கு வாழ்த்து அனுப்பியிருந்தேன். அதுல ஒருத்தி ஏன் ஆண்கள் தினம் கொண்டாடுறதில்லை, ஏன் எங்களுக்கு மட்டும், எனக்கு எல்லா நாளும் ஒன்னுதான்னு பொரிஞ்சி தள்ளியிருந்தா. எனக்குமே பெண்கள் தினம்னா என்னன்னு தெரியாது. அப்புறம் நெட்ல தேடுனதுல சில விவரங்கள் கெடைச்சது. நான் புரிஞ்சிக்கிட்ட வரையில பெண்கள் தங்களோட உரிமையை நிலை நாட்டுறதுக்காக போராடுன போராட்டங்களை நினைவு படுத்தற நாள். பெண்கள் தின நிகழ்ச்சிகள் தான் ரஷ்யப் புரட்சிக்கே வழி ஏற்படுதிருக்கு.

அப்டி போராடுன பெண்கள் எவ்வளவு தூரம் வெளிய வந்திருக்காங்க. முன்னேறுன நாடுகள்னு நாம சொல்ற இடங்கள்ல இது எவ்வளவு தூரம் சாத்தியமாகியிருக்குன்ற கேள்விகள் அப்பப்ப மனசுல ஓடும். வெளிய வர்றதுன்னா அடுப்படிய விட்டு மட்டுமா, சொந்த கால்ல நிக்கிறதா, ஆணுக்கு பெண் சரி நிகர்ன்னு முரசு கொட்றதா, இல்லை ஆணை விட பெண் தான் உயர்ந்தவன்னு நிரூபிக்கறதா(பட்டி மண்டபம் போட்டு இல்லை) தெரியலை. ஆனா என்னைப் பொருத்தவரைக்கும்(யாரு கேட்டா அதைப் பத்தி)......

போன வாரக் கடைசியில எங்க மாநகர(!) இந்திய மக்கள் ஒரு ஒன்று கூடலுக்கு ரெடி பண்ணியிருந்தாங்க(சுமாரா ஒரு 15 குடும்பம் இருக்கும்). இந்த பார்ட்டியில விசேசம்(!) என்னன்னா, இந்த கூட்டத்துக்கான சாப்பாட்டை ஆண்களே தயார் பண்ணி கொண்டு வரணும். நம்மளை பேச்சிலர் கணக்குல சேத்து லீவு விட்டுட்டாங்க. மத்தவங்க எல்லாம் வித விதமா சமைச்சி கொண்டு வந்திருந்தாங்க. காஞ்ச மாடு கம்மங்கொல்லையில கலக்குற மாதிரி இருந்த எல்லா அயிட்டத்தையும் கட்டிட்டு வந்தாச்சி.(இதுல அவசரத்துல ஒரு சட்டியை சுட வைக்கிறேன்னு கீழ கொட்னதெல்லாம் தனி). சும்மா சொல்லக் கூடாது. எல்லாருமே நல்லா பண்ணிருந்தாங்க. உண்மையில யாரு பண்ணுனதுன்றது அவங்களுக்கே வெளிச்சம். ஆனா என்ன ஒன்னு எல்லா வீட்லயும் பெண்கள் தான் சமையல் பண்ணுறாங்க. ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரிஞ்சாலும் அடுப்படி இன்னும் பெண்களுக்கு தான்.(இவனுக்கு பைத்தியம் முத்தி போச்சின்னு சாத்த வர்றதுக்கு முன்னாடி...)

அடுத்த நாளு கூட வேலை பாக்கிற ஒரு பொண்ணு வீட்ல பார்ட்டி. அந்த பொண்ணு இரான். அன்னைக்கு அவங்களுக்கு புது வருசம். (எங்கிட்டயும் கேட்டாங்க உன்னோட புதுவருசம் எப்பன்னு. எனக்கு தெரியலை. சித்திரை ஒன்னா இல்லை தை ஒன்னான்னு. எல்லா நாளும் எனக்கு புதுசு தான்னு கடுப்படிச்சேன்). இரானிய புது வருசம் வசந்த கால ஆரம்பத்தில பகலும் ராத்திரியும் சம அளவுல ஏற்படுற நாள்ல (spring equniox) ஆரம்பிக்குது. பார்ட்டிக்கு வர்ற ஆட்களோட எண்ணிக்கை அதிகமா இருந்ததால வர்றவங்களை சாப்பிடுறதுக்கு எதாவது பண்ணி கொண்டு வரச் சொல்லியிருந்தாங்க. நான் காரட்டை வதக்கி கொண்டு போயிருந்தேன். மொத்தம் ஒரு 10 பேரு வந்திருந்தாங்க. இருக்கறதிலயே சின்னப் பையன் நான் தான். இதுல ஒரு உக்ரைன் ஜோடி ரெண்டு பேருமே கூட வேலை பாக்கிறாங்க. அவங்க ரெண்டு மூணு அயிட்டம் பண்ணி கொண்டு வந்திருந்தாங்க. சரி நிறைய பண்ணியிருக்காங்களேன்னு அந்த பையன் கிட்ட கேட்டேன், இதுல நீ பண்ணுனது எதுன்னு. அவன், எல்லாமே என்னோட பொண்டாட்டி பண்ணுனது தான். அவளை இதெல்லாம் பண்ண வைச்சது தான் என்னோட வேலைன்னு(!!!!!). ரொம்ப பெரிய வேலை தான்னு நினைச்சிக்கிட்டேன். எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் UNOன்னு ஒரு சீட்டாட்டம் ஆடுனோம்(என்ன இருந்தாலும் நம்ம ஊரு ரம்மிக்காகுமா). ஆட்டம் இழுத்துக்கிட்டே இருந்தது. அந்த உக்ரைன் பொண்ணு தன்னோட புருசனை பாத்து, நீ காலையில நல்லா தூங்கிருவ, நான் இல்ல எந்திரிச்சி சமைக்கணும்னும் ஆட்டத்தை முடிச்சி வைச்சிச்சி. எனக்கு அந்த பொண்ணு கிட்ட ரெண்டு மூணு கேள்வி கேக்கணும்னு தோணிச்சி. ஆனா வேணாம் குடும்பத்துல குழப்பம் பண்ண வேணாம்னு விட்டுட்டேன். அதோட நம்ம கேள்வியைப் பாத்துட்டு எங்க ரெண்டு பேரும் சண்டைக்கு வந்துருவாங்களோன்ற இன்னொரு பயமும் இருந்திச்சி. ஏன்னா கூட இருக்கறவங்களே நாம எதாவது சொன்னா புரிஞ்சிக்காம சண்டைக்கு வர்றாங்க. இதுல வந்த எடத்துல எதுக்கு வம்புன்னு கம்முன்னு சிரிச்சிட்டே வந்துட்டேன்.

ஏனோ இந்த பதிவை டைப் பண்ணு முடிக்கறப்ப சம்பந்தமேயில்லாம நாரயணனோட பதிவுல இருக்கற கலீல் ஜீப்ரானோட வரி தான் ஞாபகம் வந்திச்சி.

"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையை விட்டு வெளியேறி விடுகின்றன" (அப்ப அது வரைக்கும் முனியாண்டி மாதிரி ஙன்னு முழிச்சிக்கிட்டு இருக்கறதா!!!!!)

Mar 11, 2006

ஒரு ஜல்லியடிப்பு

இது உண்மையான ஜல்லியடிப்பு பத்தினது தான். யாரவது, வலைப்பூவுல அடிக்கடி அடிக்கற ஜல்லின்னு ஏமாந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.

வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுறணும்ற வரிசையில போன வாரம் ஒரு பெரிய பதிவா எழுதினேன். சுத்தி இருக்கற மக்க ஜல்லியடிச்சிருக்கேன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப கடுப்பானதனால இந்த வாரத்துக்கு என்ன எழுதுறதுன்னே தெரியலை. கடைசியில உண்மையிலேயே ஜல்லியடிப்பை அள்ளி விட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


சரி இப்ப கதைக்கு. எனக்கும் ஜல்லிகளுக்கும் ரொம்ப பெரிய தொடர்பெல்லாம் கிடையாது. ஆனா ஒவ்வொரு இடத்திலயும் ஜல்லிகளை தவிர்க்க முடியாம ஏறி மிதிச்சி தான் கடந்து வந்துருக்கேன். சித்தாள் வேலை பாத்த வீடாகட்டும், நடந்து போன ரோடாகட்டும், விளையாடுன ஓடையாகட்டும் ஒரே ஜல்லி தான். ஓடையில கிடக்குறதை சரளைன்னு சொன்னாலும், நம்ம கதைக்கு அதை ஜல்லி கணக்குல சேத்துக்கலாம். ஜல்லியில அதோட சைஸை வைச்சி தான் குறிப்பிடுவாங்க. கால் இஞ்ச், அரை இஞ்ச், முக்கால், ஒன்னு, ஒண்னேகால் ஒன்னறை வரைக்கும் ஜல்லி கிடைக்கும். இதுக்கு மேல போறதெல்லாம் உடைசல்ன்னு சொல்லிருவாங்க. ரொம்ப பெருசா போயி சதுரமா அடிச்சிட்டாங்கன்னா அதை கல்லு கணக்குல சேத்துரலாம்.

இந்த ஜல்லி வகையில கால் இஞ்சும் அரை இஞ்சும் நம்ம வீடுகள்ல காங்க்ரீட் போடுறதுக்கு பயன்படுத்தறது. ஒன்னேகாலும், ஒன்னரையும் ரோடு போடுறதுக்கு பயன்படுத்தறது. நான் சொல்றது மெட்டல் ரோடுன்னு கிராமங்களுக்கு போயிக்கிட்டிருந்த ரோடுங்களை. (இதுவே தார் ரோடுன்னா, மெட்டல் போட்டுட்டு அதுக்கு மேல தாரோட சேத்து போடுறதுக்கு இந்த கால் இஞ்ச் ஜல்லி தேவைப்படும்). ஒவ்வொரு கிராமமும் உருப்படியான மெட்டல் ரோடாவது கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்த நேரமும் இருந்திச்சி. இன்னும் ஒரு சில இடங்கள்ல இப்பயும் மெட்டல் ரோடுதான் இருக்கு. இந்த ரோடுங்க போடுறதுக்காக சில நேரங்கள்ல ரோடு ஓரத்தில எல்லாம் இந்த ஜல்லியை கொட்டி வைச்சி சில மாசங்களுக்கு எதுவுமே பண்ண மாட்டாங்க. அது ஒரு பெரிய இம்சையா இருக்கும். அனேகமா எல்லாருக்குமே அதைப்பத்தின அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். ரொடு ஓரத்தில கொட்டி வைக்கிற ஜல்லி குவியலை 'தாக்கு' அப்டின்னு சொல்லுவாங்க. சாதாரண கிராமத்து ரோட்டுக்கு கிமீ க்கு இத்தனை தாக்குன்னு கணக்கு இருக்கு. இதுல ஆறு தாக்குக்கு ஒரு தாக்குதான் செம்மண் தாக்கு இருக்கணும். ஆனா காண்ட்ராக்டர் மக்க இங்க தான் விளையாடும். ஏன்னா ஜல்லி கொஞ்சம் விலை கூட. அதனால மண்ணைக் கொட்டி ரோட்டை போட்டுட்டு சந்தோசமா போயிரும். சனங்களும் ஆகா புது ரோடுன்னு சைக்கிளை குறுக்க மறுக்க ஓட்டி சந்தோசப் பட்டுக்கும். ஒரு ரெண்டு மாசங்கழிச்சி சின்னதா ஒரு மழை வந்துச்சின்னா அப்ப இளிக்க ஆரம்பிக்கும் அந்த ரோடு. அதுக்கப்புறம் தான் உலகத்தில இல்லாத இம்சை எல்லாம் ஆரம்பிக்கும்.

மெயின் ரோட்டுல இருக்கற கிராமங்களுக்கு பிரச்சனையில்லை. ரோடே இல்லாம போனாலும் பஸ்ஸு வந்துரும். மெயின் ரோட்டுல இருந்து பிரிஞ்சி போற கிளை ரோட்டுல ஒரு கிளை ரோடு, அதுவும் அந்த கிராமத்துக்குன்னு தனியா ரெண்டு கிமீ உள்ள போய்ட்டு வரணும்னா கொஞ்சம் யோசிச்சி பாருங்க. பாதி நாளு பஸ்சுக்காரன் எதாவது காரணம் சொல்லிட்டு நேரா போயிருவான். அப்புறம் பஸ்சு பிடிக்கனும்னா சில கிமீ நடக்கணும் இல்லை இன்னும் கூடுதலா சில கிமீ நடந்தா டவுனு. எல்லாருகிட்டயும் சைக்கிள் இருக்காதில்ல அதனால இருக்கற எல்லா வகையிலயும் ஊர்க்காரங்க டவுனுக்கு போவாங்க. நம்ம கிராமமும் இந்த வகை தான். மொத்தம் ஒரு 150 வீடு இருக்கும் சனத்தொகை 450-500ன்னு நினைக்கிறேன்.

எங்க ஊருக்கு வரணும்னா பஸ்சுக்காரன் ஒரு ரெண்டு(மொத்தம் நாலு கிமீ) கிமீ உள்ளே வரணும். ரோடு கொஞ்சம் மோசமாயிருச்சின்னா உள்ள வரமாட்டாங்க. கஷ்டம் தான். ஒரு தடவை ரோடு போட்டாச்சின்னா கவர்மெண்டு சில பல வருசங்களுக்கு அந்த பக்கமே திரும்பி பாக்காது. மழை பேஞ்சி ரொடு மோசமாயிருச்சின்னு அப்டியே விட்டுட்டா பஸ்சு வராது. என்ன பண்றது. கவர்மெண்டு மோசம், பஸ்சுக்காரன் மோசம், , மழையைக் கொண்டு வந்த கடவுளு மோசம், ரோடு போட்டவன் சுருட்டிட்டான் அப்டின்ற புலம்பல்கள் எல்லாம் இருக்கும். புலம்பிக்கிட்டே இருந்தா மட்டும் பஸ்சு ரோடும் திரும்பி வந்துறாதுன்னு மக்களுக்கு நல்லா தெரியும். ஒன்னு எலக்சன் வரணும் இல்லை கிராமத்துக்குன்னு சொந்த பஸ்சு இருக்கணும். 500 பேருல 50 பேரு கூட டவுனுக்கு போக மாட்டாங்க. அதனால சொந்த பஸ்சு கதையெல்லாம் புவ்வாவுக்காகது. எலக்சனும் அடிக்கடி வர்றதில்லயில்ல. ஒரு ரெண்டு வாரம் பாப்பாங்க. மூணாவது வாரம் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. அவன் குத்தம், இவன் குத்தம்னு அடுத்தவனை கையைக் காட்டிக்கிட்டிருந்தாலும், கதைக்காகுறது எதுன்னு ரொம்ப சுளுவா முடிவு பண்ணிருவாங்க. ரோடு போடுறதுக்கும் வசதி பத்தாது. அதனால ஒரே வழி ஜல்லியடிக்கறது தான். காங்க்ரீட் ஜல்லி எல்லாம் அடிக்க முடியாது. அதனால ஓடையில இருந்து, சரளையை கொட்டுறதுன்னு முடிவு பண்ணிருவாங்க. வீட்டுக்கு இவ்வளவு, கவர்மெண்டு சம்பளக்காரங்க இவ்வளவு, ஊரு இவ்வளவு, விருப்பப் படுறவங்க அதுக்கு மேலன்னு ஊர்ல ஒக்காந்து புரணி பேச்சோட இதையும் பேசி பெருசுங்க முடிவு பண்ணி இளவட்டங்களுக்கு தகவல் போகும். அப்புறம் எப்டியும் ஒரு ரெண்டு நாள்ல ஜல்லியடிக்கற திருவிழா நடக்கும். ஊர்ல பாதிப்பேரு அங்க தான் இருப்பாங்க. இதே மாதிரி
வருசத்துக்கு ரெண்டு மூணு ஜல்லியடிப்பு திருவிழா இருக்கும்.


இந்த மாதிரி தேவையான விசயங்களை எப்டியாவது சாதிச்சிக்கறதினால, எங்க ஊர்க்காரங்க அடுத்த ஊர்க்காரங்க கிட்ட விடற பந்தா சொல்லி மாளாது. நானும் அந்த ஊர்க்காரன் தான. இங்க நான் படம் போடலைன்னு வேற யாரு எங்க ஊருக்காக படம் போடுறது. அதனால ஒன்னு ரெண்டு (எல்லாம் பத்து வருசத்துக்கு முந்துன கணக்கு)

1. 150 வீட்டுக்கு, 55-60 தெரு விளக்கு. இது போக ஒவ்வொரு வீட்லயும் சாயங்காலம் அடுத்த வீட்ல போடுறதுக்கு முன்னாடி நம்ம வீட்ல போட்றணும்னு வைச்சிருக்கிற வெளி லைட்டு, அங்கங்க இருக்கற கோயில் லைட்டுன்னு ஊரே பளிச்சுன்னு இருக்கும். ஊரை விட்டு வெளிய நின்னு பாத்த என்னமோ டவுனுக்கு பக்கத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

2. ஊரைச்சுத்தி 100-200 மீட்டருக்கு ஒரு அடிகுழாயி. ஊரை விட்டு ஒரு ரெண்டு கிமீ தாண்டி காட்டுக்குள்ள ஒரு அடிகுழாயி(காட்டுக்கு போனா குடிக்கறதுக்கு வேணுமாம்)

3. பக்கத்து டவுனுல இருந்து பஸ் அப் அண்டு டவுன் 12 டிரிப்(பெரிய பெரிய கிராமங்கள் எல்லாம் ஒன்னு ரெண்டுக்கே அல்லாடிக்கிட்டு இருப்பாங்க). இதனால மக்க அலம்புன அலம்பு கொஞ்சம் நஞ்சமில்லை. டவுனுக்கு போயி டீக்குடிச்சிட்டு வரேன்னு, ஊர்ல இருந்து போற பஸ்சுல டவுனு ஆரம்பத்திலயே எறங்கி டீக்குடிச்சிட்டு அந்த பஸ் திரும்பி வரும்போது ஏறி வந்துர்றது. ஒரே காமெடி தான். அப்பப்ப பஸ்சுக்காரன் ஊருக்குள்ள வராம கட் அடிச்சா, பஸ்சைக் கட்டி போட்டுட்டு வரச்சொல்லு உன்னோட அதிகாரிய அப்டின்னு உதார் விட்டது எல்லாம் உண்டு.

4. பக்கத்து ஊர்க்காரங்க கையால அடிக்கற ஸ்பிரேயர்ல காட்டுல மருந்தடிச்சா இங்க மக்க, பவர் ஸ்பிரேயர்ல படம் போட்டுக்கிட்டு இருக்கும். அதனாலயே சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் விவசாயத்தில முன்னொடியா இருக்க முடிஞ்சது.

5. அப்புறம் டீவி பொட்டி. பஞ்சாயத்து பொட்டி எப்ப படுத்தாலும் மிஞ்சி போச்சின்னா ரெண்டு வாரம் தான். இது போக வாரத்துக்கு ஒரு தடவை டீவி டெக்குன்னு விடிய விடிய படம் ஓடும். கலர் டீவின்னு ரூல் வந்தப்ப, ஆளுக்கு மொதலா போயி தூக்கிட்டு வந்துட்டாங்க.

6. இப்பயும் எங்க ஊரு பெருமையா பேமஸா சொல்லிக்கறது தண்ணித்தொட்டிய தான். மோட்டார் போட்டு ஓவர் டேங்க் கட்டி முதல்ல பொதுக்குழாய், பின்னாடி வீட்டுக்கு வீடு கனெக்சன், இப்ப இன்னொரு ஓவர்டேங்க்ன்னு பட்டைய கிளப்பிக்கிட்டிருக்காங்க. சுத்தி இருக்கற ஊருங்கள்ல ஆரம்பிச்ச ஆறு மாசத்தில ஊத்தி மூடுனப்ப, எனக்கு தெரிஞ்சி எங்க ஊருல 10-20 நாளைக்கு மேல நிப்பாட்டுனது கிடையாது.

7. ரொம்ப நாளா குறைன்னு இருந்த கக்கூசு பிரச்சனையையும் இப்ப சரி படுத்திட்டதா கேள்வி பட்டேன்(ஊரை விட்டு வந்து ஆச்சி அது ஒரு 10-12 வருசம்)

இந்த வகையில எங்க கிராமத்தில தன்முனைப்பா செஞ்ச விசயங்கள் நிறைய. எந்த விதமான தகவல்களோ இல்லை உதவியோ இல்லாதப்பயும் தேவையை முன்னிட்டு தங்களுக்கு தேவையானதை யாரோட உதவியையும் எதிர்பார்க்காம பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க/இருக்காங்க. சும்மா சும்மா நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்காம செயல்ல காட்டுறது அவ்வளவு சுலபமில்லை தான். ஆனா காட்ட முடிஞ்சிருக்கு. அந்த மாதிரி ஊர்ல இருந்து வந்ததனாலேயே, யாராவது, அவன் யோக்கியமா, இவன் யோக்கியமான்னு நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு, இதெல்லாம் கவர்மெண்டு பண்ணனும் ரொம்ப ஈஸியா அடுத்தவங்களை நோக்கி கைய காமிச்சிட்டு நாம என்ன பண்ணியிருக்கோம், என்ன பண்ண முடியும்னு யோசிக்காம இருக்கறவங்களை பாத்தா கொஞ்சம் ஒதுங்கி போகத் தோணுது. சரி அதை விடுங்க.


இப்ப ஜல்லிக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்.
ஒரு நாலஞ்சி பேரு ஊர்ல மண்டையா திரிஞ்சிக்கிட்டு இருந்தாங்க. டெலிபோன் ஆபிஸ்ல எங்கூருக்கு போனு குடுக்க முடியுமா முடியாதாங்குறது, பஸ் டிப்போவுல பஸ்சு கரெக்டா வரணும் வரலைன்னா நடக்கிறதே வேறன்னு சட்டம் பேசுறது, கரண்டாபீஸ்ல போயி எங்கூரு முன்னேறிருச்சி, முதல்ல அந்த ஓட்டை டிரான்ஸ்பார்மரை மாத்துன்னு சவுண்டு விடுறது, ரோட்டைச் சுத்தி காட்டுக் கருவேலை வளர்ந்து போச்சு, அவங்க அவங்க எடத்துல இருக்கறதை வெட்டிருங்க; நாங்க வெட்டுனா கட்டைய நாங்களே வித்துருவோம்னு பயமுறுத்தறதுன்னு அலம்பிக்கிட்டு திரிஞ்சாங்க. அந்த சமயத்தில ஊர்ல இருக்கற ரோடு காணாது, இன்னொரு ரோடு வேணும்னு சண்டை போட்டு புது ரோட்டுக்கு பெர்மிசன் வாங்கி வைச்சிருந்தாங்க. ரோடு போட ஆரம்பிச்சப்ப, காண்ட்ராக்டரை இம்சை பண்றதுக்காக இன்னொரு காண்ட்ராக்டரை தொந்தரவு பண்ணி தெரிஞ்சிக்கிட்ட விசயங்கள் தான் இந்த ஜல்லி விசயங்கள் எல்லாம். மேல சொல்லியிருக்கற விசயங்கள் எல்லாம் மண்டக்காரங்க சொன்ன ஞாபகத்தில இருந்து எழுதுனது. அதனால சரியா இருக்குமான்னு தெரியலை. அப்ப மண்டையா சுத்திக்கிட்டு இருந்ததில ஒருத்தரு இன்னைக்கு ஊர் பஞ்சாயத்து தலைவரு. இப்ப ஊரெல்லாம் சிமெண்டு ரோடு, கலையரங்கம், அங்கங்க கக்கூசு, ரெண்டாவது தண்ணித்தொட்டி, இன்னொரு புது ரோடுன்னு என்னன்ன பண்ண முடியுமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.

Feb 5, 2006

தோற்றுப் போக நமக்கு அனுமதியில்லை.....அறிவொளி இயக்கம் -2

"மேல் தட்டு மக்கள் கல்வி பெறுவதும் ஒடுக்கப் பட்ட மக்கள் கல்வி பெறுவதும் ஒன்றல்ல.அவர்களின் கல்வி அவர்களுக்கே பயன்படும். ஆனால் பாட்டாளிகள் கற்பது சமூகத்தை மாற்றும்." --பாவ்லோ ப்ரையர்.

ஊர் கூடி தேர் இழுக்கறதில, சாமியக் கொண்டு போய் கரை சேக்கலன்னா நைட்டு வந்து கண்ணைக் குத்திருவாருன்ற பயத்தில எப்டியாவது எவனையாவது உள்ள தள்ளியாவது தேர உருட்டி கொண்டு நிலை சேத்துருவாங்க.

இத எதுக்கு சொல்றன்னா, சாதாரணமா நாலு அஞ்சி பேரு சேந்து செய்ற வேலையிலயே ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக்கிட்டு கடைசியில ஏண்டா இந்த வேலைய ஆரம்பிச்சோம்ன்ற நிலமைக்கு வந்திருவோம்

ஆனா இங்க(அறிவொளி இயக்கம்) சில லட்சம் பேரு சேர்ந்து, அதுவும் கலெக்டர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டம், ஒன்றியம், பகுதி, கிராமம், வார்டு அப்புறம் இடையில இந்த ஆபிஸ், அந்த ஆபிஸ் இது போதாதுன்னு கரை வேட்டிங்க கடைசியா திருவாளர் பொதுஜனம் அப்டிற ஏழெட்டு அடுக்கு அதிகார வரிசை தாண்டியும் இந்த இயக்கம் ஜெயிச்சிருக்கு. ஏகப்பட்ட பரிசோதனைகள், முயற்சிகள், தோல்விகள், வெற்றிகள் ன்னு கடந்து வந்திருக்கு. இதுக்கு பின்னாடி இருக்கறவங்களோட முயற்சியையும் அர்ப்பணிப்பையும் யாரும் சாதாரணமா எடுத்துக்க முடியாது.

இதுல ஈடுபட்ட அரசு ஊழியர்களாகட்டும் இல்ல ஒரு பைசா வாங்காத தன்னார்வலர்களாகட்டும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம வேலை பாத்திருக்காங்க. என்ன பெரிய வேலை, போயி படிக்க தெரியாதவங்களுக்கு கத்துக் குடுக்கணும அவ்வளவுதான அப்டின்னு ஈசியா சொல்லிரலாம் (சொல்றதுக்கு காசா பணமா). சரி அத ஈசின்னே எடுத்துக்கிட்டாலும், இங்க பிரச்சனை என்னன்னா படிக்கத் தெரியாதவங்கள படிக்க கூட்டிட்டு வர்றது. நாலு கழுத வயசாயிருச்சு (இவங்க குறி வச்சது 15-35 வயசை) எனக்கு, இனிமே படிச்சு என்ன கிழிக்க போறேன்னு இழுத்து போர்த்திட்டு தூங்குறவன நைட்டு படிக்கிறதுக்கு வான்னு எப்டி கூப்பிடறது. ஏனுங்க நான் நல்ல வாத்தியாரு, நல்லா பாடம் எடுப்பேன் அப்டின்ற பூச்சாண்டியெல்லாம் பலிக்காது. (இதயெல்லாம் பாத்து சுணங்குறவங்கள அப்டியே விட்டுறாம, இந்த என்ஜினை இழுத்துட்டு போனவங்கள்ல முக்கியமான டாக்டர். ஆத்ரேயா சொன்ன வார்த்தைகள் தான் " தோற்றுப் போக நமக்கு அனுமதி இல்லை" )

ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் குடுத்த, இவங்களோட ஆரம்பமே மெகா அமர்க்களமா இருந்திருக்கு. எத்தன பேரு படிக்காதவங்க, மத்தபடி யார் யாரு எந்த எத்தன பேருக்கு சொல்லிக் குடுக்கணும் அப்டின்ற கணக்கெடுப்பு எல்லாம் "ஒரே" நாள்ல முடிச்சிருக்காங்க. இது நிச்சயமா ஒரு பெரிய சாதனைதான்.

சரி இவங்க எப்டி மக்களை ஒன்னு திரட்டுனாங்க? ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் அப்டினின்னு ஒரு சொலவடை கிராமத்தில சொல்லுவாங்க. அத மனசில வாங்கிட்டாங்களா என்னன்னு தெரியல. "புத்தகம் கையில் எடுத்து விடு, புத்தொரு ஆயுதம் ஆகிடும் உனக்கது" அப்டின்னு ஆட்டம் பாட்டம் போட்டு தான் இவங்க தூங்குறவன எழுப்பி படிக்க வச்சிருக்காங்க. உனக்கு பாட்டு புடிக்குமா, இந்தா பாடுறோம். உனக்கு பாடத் தெரியுமா, உன்னோட பாட்ட நீ பாடு நாங்க கேக்குறோம். கத சொல்ல தெரியுமா சொல்லு. விடுகத தெரியுமா, போடு. டான்ஸ் புடிக்குமா, இந்தா அதுவும் இருக்கு அப்டின்னு தான் மக்களை நெருங்கிருக்காங்க. இதுக்காக சைடுல ஒரு பெரிய கலைஞர்கள் கூட்டமும் உருவாகி நின்னுருக்கு. மேடையில நின்னு பாடக்கூடியளவுக்கு தைரியம் உள்ள ஒரு லட்சம் பேரை இந்த இயக்கம் உருவாக்கிருக்குன்னா அது சாதாரணமான விசயமில்லை. நம்மல்ல எத்தனை பேரால இன்னைக்கு மேடையில நின்னு கூச்சப் படாம பேச முடியும் சொல்லுங்க.

அப்புறம் இங்க சொல்ல வேண்டிய முக்கியமான விசயம் அறிவொளி வாத்தியார்களப் பத்தினது. யண்ணே, யக்காவ் அறிவொளிக்கு வந்து சேருன்னு இழுத்து பிடிச்சி பாடம் நடத்துனது எல்லாம் 9-10 வரைக்கும் படிச்ச, பாஸான, பெயிலானவங்க தான்.(மொத்தத்திலயே 200 பேரு தான் இதுல காலேஜ் எட்டிப் பாத்தவங்க. படிச்சவங்கள்லாம் அவங்க அவங்க வேலையப் பாக்க போயிட்டாங்க போலருக்கு). இதுல இன்னும் முக்கியமானது பொம்பளைங்களோட பங்கு. அவங்க இத சமூகம் தங்களுக்கு தந்த கவுரவமா நினைச்சி ஒரு பெரிய தனி ஆவர்த்தனமே நடத்திருக்காங்க. கரெக்டா சொல்லணும்னா, இவங்க தான் என்ஜினா நின்னு இழுத்துகிட்டு போயிருக்காங்க.

"நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எரிவது மேல்" அப்டின்றத மனசில போட்டுக்கிட்டு சோர்வுக்கும் நம்பிக்கைக்கும் நடுவேயான ஒரு பெரிய போராட்டத்தோட அறிவொளி அடுத்த கட்டங்களையும் தொட்டிருக்கு. தொடர் கல்வி இயக்கம், வாசிப்பு இயக்கம் நூலக இயக்கம்,வாசகர் வட்டம்னு அடுத்தும் சாதனைகளை படச்சிருக்கு. இந்த கட்டத்தில முக்கியமா நிறைய புத்தகங்களை தயாரிச்சி வெளியிட்டிருக்காங்க. ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு வாசகன்றத குப்பையில தூக்கிப் போட்டுட்டு, ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு புத்தகம் அப்டின்னு பல புத்தகங்களை கொண்டு வந்ததும் இல்லாம அத லட்சக் கணக்கில(தோராயமா பத்து லட்சம்) வித்தும் காண்பிச்சிருக்காங்க. படிக்க வந்தவங்க சொன்ன கதைகள், பாட்டுகள், விடுகதைகள் எல்லாமே புத்தகத்தில ஏறிருக்கு.

இவ்வளவு நடந்தும் தொக்கி நிக்கிற விசயங்கள் இதுல நிறைய இருக்கு..

இன்னொரு அறிவொளி இயக்கம் இங்க தேவையில்லைன்ற ஒரு நிலை இருக்கா அப்டின்னா அது இல்ல.

எவ்வளவோ பரிசோதனைகள், எவ்வளவோ முயற்சிகள் அப்டியே நட்டாத்தில நின்னு போச்சி. அதெல்லாம் ஆவணப் படுத்தக் கூட இல்லை. ஒருக்கா மறுபடி இதே மாதிரி ஒரு திட்டம் வந்துச்சின்னா (ஒரு நப்பாசை), மறுபடியும் ஆரம்பத்தில இருந்து தான் தொடங்கணும்.

எவ்வளவோ கலைஞர்கள், இந்த இயக்கத்தோட தூண்களா நின்னவங்க, இயக்கம் இழுத்துக்கிட்டு கிடந்தப்ப எல்லாம் ஆக்ஸிஜன் குடுத்தவங்க அப்டியே காணாம போய்ட்டாங்க.

நிறைய பெண்கள், வீட்டை விட்டு வெளிய வந்து நிறைய பண்ணியிருக்காங்க. எவ்வளவோ பேர் கலைஞர்களா, ஆளுமை கொண்டவர்களா இந்த இயக்கத்தோட போக்க நிர்ணயியம் பண்றவங்களா இருந்திருக்காங்க. ஆனா அறிவொளிக்கப்புறம் மறுபடியும் அவங்களோட சிறக சுருக்கிக்கிட்டு வீடுகள்லயே முடங்கிட்டாங்க

இது மாதிரி இன்னும்.............


குறிப்பு: இன்னும் அறிவொளி மிச்சம் மீதி இருக்கான்னு கேக்குறவங்களுக்கு:
1. அறிவொளி இயக்கத்தில தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோழர்கள் முக்கியமான உந்து சக்தியா நின்னு வேலை பாத்திருக்காங்க. அவங்களோட முகவரி: தலைமை அலுவலகம், 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 14; 46 இரண்டாவது தெரு, க.கீ. கார்டன்ஸ், ரெட்டியார்பாளையம், பாண்டிச்சேரி-10
2. சில மாவட்டங்கள்ல (கடலூர், விழுப்புரம்..) சமீபகாலங்கள்ல நிறைய இரவுப் பள்ளிகள் தொடங்கி நடந்துகிட்டிருக்கு.(aidindia & DYFI சார்பான்னு நினைக்கிறேன்)

Jan 29, 2006

பட்டா படி

"பட்டா படி" -ன்ற இந்த வார்த்தைகள பத்தி இங்க எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல. பட்டான்னா நிலத்துக்கு குடுக்கிற டாகுமெண்டு; படின்னா படிக்கிறது அப்டின்றது தாண்டிப் பாத்தா இந்த வார்த்தைகளோட வீச்ச யோசிச்சு பாக்குறதுக்கே மலைப்பா இருக்கு.

" சந்திரன் மேல கால வச்ச காலம்; இன்னும் கைநாட்டு போடுறது அலங்கோலம்" அப்டின்ற குத்துப்பாட்டோட பாமர மக்களோட மொழியை அங்கீகரிச்சு, இந்த வார்த்தைகள் சுத்தி வந்த தூரமும், உழுது போட்ட நிலங்களும் அதிகம். கடைக்கோடில ஆடு மேய்ச்சிக்கிட்டு இருக்கிற அலமேலுல ஆரம்பிச்சு, காலேஜ் புரொபசருங்கள தாண்டி, நான் பொறந்த மண்ணுக்கு எதாவது செய்யணும்னு நினைச்ச பலரை உள்ளடக்கி, Don't try to teach me ன்னு எதுத்து நின்ன கலெக்டரு, வாழ்க்கையில எனக்கு கிடைச்ச வெகுமதின்னு அழுத கலெக்டரு, எனக்கும் என் கட்சிக்காரனுக்கும் என்ன லாபம்னு வந்து குடைஞ்சு பாத்த மந்திரின்னு இந்த சுனாமி தாக்குன மக்களோட எண்ணிக்கை நிஜமாவே அதிகம். ரமணா ஸ்டைல்ல இல்லாட்னாலும், தோராயமா சொல்லணும்னா, 10 மாவட்டம் (மத்த மாவட்டங்கள்ல நடைமுறைப் படுத்தப் பட்டுச்சான்னு தெரியல), 25 லட்சம் மக்கள், 2.5 லட்சம் தன்னார்வலர்கள், 10,000 கலைஞர்கள்ன்னு பரந்து நின்ன ஒரு இயக்கத்தோட முதல் வார்த்தைகள் தான் இந்த "பட்டா படி".


நினைவாய், பழங்கனவாய்ன்னு எல்லாருமே (இதுல இருந்தவங்க எத்தனை பேரு இன்னும் துடிப்பா இருக்காங்கன்னு தெரியல) மறந்து போன இந்த இயக்கத்தோட பேரு "அறிவொளி இயக்கம்". தொண்னூறுகளடோ ஆரம்பத்தில National Literacy Mission டோட ஒரு பகுதியா தமிழ்நாட்டுல புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்(நம்ம மாவட்டங்கோ), வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வெலி, ம்துரை, தஞ்சாவூர் அப்புறம் பாண்டிச்சேரின்னு சில மாசங்களுக்கு( அப்புறம் வருசங்களுக்கு) ஒரு பெரிய திருவிழாவையே நடத்திக் காட்டுனாங்க.

இப்ப என்ன எழவுக்கு இதெல்லாம்ன்னு நீங்க கேக்குறது ஞாயந்தான். சில வருசங்களுக்கு தங்களோட நேரம், காலம், பதவி, பணம்னு தூக்கிப் போட்டுட்டு தலையில சிலேட்டையும் புத்தகத்தையும் தூக்கிக்கிட்டு பஸ் போகாத ஊருக்கெல்லாம் போய் என்னத்தையாவது இந்த மக்களுக்கு பண்ணனும்னு சுத்துனவுங்க இந்த தமிழ்நாட்டுல சமீபத்தில கூட ஆயிரக்கணக்கில இருந்திருக்காங்கன்னு சொல்றதுக்காகத் தான் இந்த வெளக்கம் எல்லாம்.

என்னளவுல நான் வருத்தப் பட்ட, படுற விசயங்களல, அறிவொளி இயக்கத்தில சேர முடியல, எதுவும் பண்ண முடியலன்றதுன்றதும் ஒன்னு. அப்ப பன்னெண்டாப்பு படிச்சிக்கிட்டு இருந்ததா ஞாபகம்.

எங்க போனாலும் விடாது கருப்புன்ற ரேஞ்சுல, கனடா வந்ததுக்கப்புறமும் ஒருத்தர் கையில ஒரு புத்தகததை திணிச்சிட்டு போனாரு. எல்லாம் அதனால வந்த வினை.

புத்தகத்தோட பேரு

"இருளும் ஒளியும்" - அறிவொளி இயக்க அனுபவங்கள்
அப்டின்னு ச.தமிழ்செல்வன் எழுதுன புத்தகம்.

இவரு திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளரா இருந்திருக்காரு. தான் அறிவொளிய எதிர்கொண்ட விதத்தையும், கத்துக் கொடுக்கப் போய்ட்டு, கத்துக்கிட்டு வந்த விதத்தையும் சொல்லிருக்காரு. என்னோட குற்ற உணர்ச்சியை இன்னும் கொஞ்சம் கிளறி விட்டுட்டாரு.

பல சமுக அக்கறையுள்ளவுங்க பங்கெடுத்துக்கிட்ட இவ்வளவு முக்கியமான ஒரு இயக்கத்தை பத்தின வேர்களையும், காலடித்தடங்களையும் சாதரணமா நீங்க தேடுனீங்கன்ன, ஒங்களுக்கு பெரிய ஏமாத்தம் தான் மிஞ்சும். இத்தனைக்கும் சில பேர் போன எழுத்தாளர்களும் இந்த இயக்கத்தில பங்கெடுத்திருக்காங்க. அப்படி இருந்தும் ஏனோ இது அவ்வளவு முக்கியமில்லைன்னு விட்டுட்டாங்க போல.இந்த புத்தகம் கூட ஒரு ஆவணமா இல்லாம, அனுபவங்கள தான் பகிருது.


தமிழ்ச்செல்வன் சொல்றவகையில பாத்தா இந்த இயக்கத்த பத்தி மொத்தம் மூணு புத்தகமும் (இந்த புத்தகத்தையும் சேத்து) சில கட்டுரையும் தான் மிஞ்சும் போல. மீதி இருக்கிற ரெண்டு புத்தகத்தில ஒன்னு புதுக்கோட்டை கலெக்டரா இருந்த ஷீலா ராணி சுங்கத்தும், மாநில ஒருங்கிணைப்பாளரா இருந்த ஆத்ரேயாவும் சேந்து எழுதுன Literacy and Empowerment(இதப் பத்தின விமர்சனம்). இன்னொன்னு புதுக்கோட்டை அறிவொளியில இருந்த எழுத்தாளர் ஆர்.நீலா எழுதுன "பாமர தரிசனம்".


தமிழ்ச்செல்வனோட இந்த புத்தகத்தை விமர்சனம் பண்றதுக்கோ, இல்லை அதப் பத்தி எழுதற அளவுக்கோ எனக்கு அறிவில்லை. ஆனாலும் என்னைய அறஞ்ச சில வரிகள மட்டும் இன்னொரு பதிவுல போடறேன்.

Jan 26, 2006

எல்லாம் வல்ல முனீஸ்வரன்......

எல்லாம் வல்ல முனீஸ்வரன் என்னையும் காப்பாத்தட்டும்....


ரொம்ப நாளைக்கு அப்புறம், ரொம்ப யோசனை பண்ணி வலைப்பூ ஆரம்பிச்சிருக்க, இப்டி 'உ' போடாம, சாமி கும்பிடாம பண்ணினா தெய்வ குத்தம் வந்துறப் போகுதுன்னு ஒரு சிலர் வருத்தப் பட்டுகிட்டாங்க.. ஏற்கனவே நீ இந்த மாதிரி ரொம்ப தெய்வ குத்தம் பண்ணுனதால தான் சீ பட்டு லோல் பட்டு இப்டி தனியா போய் அல்லாடிக்கிட்டு இருக்கன்னு கொஞ்சம் பயமுறுத்தல் வேற. எங்கப்பா வேற ஒனக்கு சனி உச்சியில நின்னு ஆடுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.

மத்தவங்க மனசை நோகடிக்கிறதுல முனியாண்டிக்கு எப்பவுமே சம்மதம் கிடையாது.. அதனால நடந்த, நடக்கிற, நடக்கபோற தெய்வ குத்தத்தை எல்லாம் டீல்ல விட்டுறதுக்காக அண்ணன் முனீஸ்வரன வேண்டிக்கிறேன்.



இந்த படம் மறக்க முடியாத ஒரு தருணத்தில எடுத்தது. ரொம்ப நாளா புல்லட் வாங்கவா, யெஸ்டி வாங்கவான்னு ரொம்ப யோசனை பண்ணி(யோசனை பண்ணிக்கிட்டு இருக்கிறதே ஒனக்கு பொழப்பா போச்சின்னு மத்தவங்க சத்தம் போட்டதுக்கப்புறம்) ஒரு ஓட்டை யமாகா RX 100 வாங்குனேன். ஒழுங்கா ஓடுமா, ஓடாதன்னு தெரியாத, ஹார்ன் இல்லாத அந்த வண்டியில, two wheeler ன்னாலே அலறி அடிச்சு ஓடுற ஒருத்தரை இழுத்துப் போட்டுகிட்டு பெங்களூர்லருந்து, ஒகேனக்கலுக்கு பறந்து போய்ட்டு (ஓட்டை வண்டின்னாலும் விட்டுக் குடுக்க முடியுமா) வரும்போது எடுத்தது தான் இந்தப்படம்.

ஸ்பீடாமீட்டர்ல முள்ளு எவ்வளவு தூரம் போகும்னு ஒரு ஒருத்தன், முள்ளு 40 தொட்டாலே அலறுற ஒருத்தன், புத்தம் புது வண்டியோட ஒருத்தன், அப்புறம் எங்கேயாவது வண்டி நின்னுறப் போகுதேன்ற பயத்துலயும் வண்டி எவ்வளவு ஸ்பீடா போகும்னு நானு, அப்டின்னு ஒரு 7 பேரு (4 வண்டி) போனோம். போற வழியில ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் (தமிழ்ப் படத்தில வர்ற ஹீரோக்கள், வில்லன் எங்க போனாலும் முன்னாடி வர்றது மாதிரி) நம்ம அண்ணன் காட்சி கொடுத்துக்கிட்டு பயமுறுத்திக்கிட்டு இருந்தாரு. ஒரு எடத்துல எளனி வித்துக்கிட்டு இருக்கறதை பாத்த மக்க அங்கயே வண்டிய நிப்பாட்ட்டிருச்சி.





சைடுல சுப்ரமணிய சிவா (எங்கயோ கேள்வி பட்ட பேரா இருக்கா ?) மணி மண்டபம் அப்டின்னு மங்கிப்போன ஒரு தோரணவாயில பாத்துட்டு மணி மண்டபம், மணி மண்டபம்னு சொல்றாங்களே எப்டி தான் இருக்கும்னு, பாக்குறதுக்காக, மக்களை கேட்டு பாத்தேன் (நீங்களும் எப்டி இருக்கும்னு மேல இருக்கிற போட்டால பாத்துக்கோங்க). நாங்க நின்ன அந்த எடத்தில இருந்து ஒரு 100மீ தள்ளி இருந்ததால மத்த மக்க முதல்ல வர முடியாதுன்னிருச்சி. அப்புறம் எப்டியோ எல்லாம் சேந்து போனோம். எதுக்கு அத்துவான காட்ல மணி மண்டபம்னு யாரையாவது கேக்கலாம்னு நினைச்ச்சி அங்க களை எடுத்துக்கிட்டு இருந்த ஒரு அம்மாகிட்ட கேட்டோம். அவங்க அதைப் பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. பக்கத்துல பாரத மாதா கோயில் ஒண்ணு அரகுறையா நிக்குது. சரி நம்மளை மாதிரி நிறைய பேரு இருக்காங்கன்னு சந்தோசமா திரும்பலாம்னு நினைச்சோம். பாத்தா மணிமண்டபம் சைடுல பத்தாப்பு படிக்கிற பையன், கருமமே கண்ணா படிச்சிக்கிட்டு இருந்தான். ஞாபகம் வருதே, ஞாபகம் வருதேன்னு... பாடிக்கிட்டே பையன் கிட்ட வெவரம் கேட்டேன். அதெல்லாம் எதுவும் தெரியாது, இங்க யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க அதனால இங்க ஒக்காந்து படிக்கிறேன்னு சொன்னான். சரி அதுக்கு மேல அவன தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லிட்டு ( ஒகேனக்கலுக்கு லேட்டாயிரும்னு சத்தம் வர ஆரம்ம்பிச்சிருச்சி) அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டோம்.

இதுல சொல்ல மறந்தது என்னன்னா, இங்க தான் சுப்ரமணிய சிவாவை அடக்கம் பண்ணியிருக்காங்க. (மணி மண்டபம்னாலே அதானா!! தெரியலை). அவர் தன்னோட கடைசி காலத்துல கட்ட முயற்சி பண்ணது தான் அரகுறையா நிக்கிற் பாரத மாதா கோயில்.

அண்ணன் முனீஸ்வரன் எல்லாரையும் காப்பாத்துவாராக.

இந்த ஊரு நாங்க போய்ட்டு வந்ததுக்கப்புறம் ரொம்ப பேமசாயிருச்சி. இந்த ஊரோட பேரு பாப்பாரப்பட்டி. வீரப்பனை சுட்டதா சொல்லப்படற இடம்.