Dec 19, 2008

அம்மாக்களின் கதை

நம்ம வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு சின்ன விசயம் நடந்து போச்சி....

நம்ம சுமதியக்கா வீடு, அதான் ரவி வீட்டுக்கு எதிர்த்த வீடு, அவங்க வீட்ல பிரச்சனை ஆனதுக்கப்புறமா அந்த வீட்டையும் வித்துட்டு எல்லாம் தனித்தனியா போயிட்டாங்க.

அதை ஒரு டீச்சர், ரிடையர் ஆனவங்கதான், வாங்கி குடிவந்து அதாச்சி ஒரு ஆறேழு மாசம். வீட்டுக்காரர் ரொம்ப நாளைக்கு முன்னாடியே விட்டுட்டு போயிட்டாராம். இவங்களும் பையனும் தான். பையனை இங்க பாலிடெக்னிக்ல படிக்கப்போட்டு அவ்வளவு சிக்கல்லயும் இஞ்சினியரிங்கும் படிக்க வைச்சிருக்காங்க. அந்தப் பையன் இப்ப மெட்ராஸ்ல வேலை பாத்துக்கிட்டு இருக்கான்.

சாயங்காலம் வாசல்ல உக்காந்திருந்தா வருவாங்க நல்லா பேசுவாங்க. என்னவோ தெருவுல வேற யாருகிட்டயும் அவ்வளவா வைச்சிக்கிறது இல்ல.

போன ஒருவாரமா புலம்பிக்கிட்டே இருந்தாங்க. அந்தப் பொலப்பத்துனாலயா இல்ல என்னன்னு தெரியலை அவங்களுக்கு உடம்பும் சரியில்லாமா போச்சி. நான் கூட ரெண்டு தடவை கூழு காச்சி குடுத்தேன். அடுத்த தடவை எடுத்துட்டு போனப்ப அவங்க வீட்ல இல்ல. ஆஸ்பத்திருக்கு போயிட்டாங்க. செல்வியக்கா தான் அதைக் காலி பண்ணினாங்க.

எல்லாம் பையனைப்பத்தின புலம்பல் தான். போன இடத்திலயா இல்ல படிக்கும்போதான்னு தெரியலை அந்தப் பையனுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்திருக்கு. போன வாரம் கல்யாணமும் முடிச்சிட்டான். இவங்களுக்கு சொல்லவும் இல்லை. பக்கத்துத் தெரு முக்குல இருக்கற ப்ரெண்ட்ஸுக்கெல்லாம் பத்திரிக்கை வைச்சிருக்கான்.

இவங்களுக்கு இந்த விசயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பொண்ணோட வீட்லருந்து அவங்க அப்பாவும் அம்மாவுக்கு விசயம் தெரிஞ்சி அவங்களே வந்திருக்காங்க. அவங்க வீட்ல மொதப்பொண்ணு ஓடிப்போனதினால ரெண்டாவது பொண்ணுக்கும் அதே மாதிரி ஆகிறக்கூடாதுன்னுதான் கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்கு வந்திருக்காங்க. இந்தம்மாதான் பிடி கொடுக்கலை.

அதுக்கப்புறமா அந்தப் பையனா கல்யாணம் முடிச்சிட்டான். கல்யாணம் நல்லா பெருசாவே பண்ணியிருக்காங்க. எல்லாம் போயிட்டு வந்தவங்க சொன்னது தான். இவங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதிலருந்தே மனசு கேக்கலை. எவ்வளவு பண்ணியிருக்கேன். அவனை முன்னாடி கொண்டு வர்றதுக்கு தனியா எவ்வளவு கஷ்டப்பட்டேன். பெத்தவளுக்கு என்ன மரியாதை. இப்படிப் பண்ணிட்டானேன்னு புலம்பிக்கிட்டே இருந்தாங்க. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மூணு நாள்லயே இவங்களுக்கும் உடம்பு முடியாம போயிருச்சி.

நாளு நாளைக்கு முன்னாடி ஈஸ்வரியக்கா தான் வந்து கதவை தட்டுனாங்க. டீச்சர் வீட்ல முனிசிபாலிட்டி தண்ணி வெள்ளம் போயிட்டிருக்கு. வீட்டு கேட்டும் உள்ள பூட்டியிருக்கு. பக்கத்து வீட்டு பீட்டி மாஸ்டர் கேட்டு மேல ஏறி உள்ள போனாரு. கதவு பூட்டாம தான் கிடந்துச்சி. எப்ப நடந்ததுன்னு யாருக்கும் தெரியலை. நைட்டு தான் உயிர் போச்சா இல்லை முந்துன நாளே போயிருச்சான்னு தெரியலை.

என்ன சொல்றது. யாருக்கு சொல்றதுன்னு கூட புரியலை. மாமா கூட அவங்களுக்கு சொந்தக்காரங்க ஒருத்தரு வேலை பாக்கறாரு. அதனால மாமாவை கூப்புட்டு அவங்களுக்கு சொல்ல சொன்னேன். சுத்தி முத்தி நிறைய சொந்தக்காரங்க இருப்பாங்க போலருக்கு. நிறையப் பெரு. நல்ல கூட்டம்.

பையனுக்கும் தகவல் சொல்லிவிட்டு அந்தப் பொண்ணு அவங்க அம்மா அப்பா எல்லாம் வந்திருந்தாங்க. அழகு பட்ட பொண்ணு. இன்னும் கொஞ்ச நேரம் நின்னு பாக்கலாமோன்னு தோணும். அந்தப் பையன்தான் அப்படி அழுதுக்கிட்டு இருந்தான். என்னால தான, என்னால தானன்னு அந்தப் பையன் அழுததை பாக்கவே எப்படியோ இருந்தது. எப்ப நடந்ததுன்னு தெரியாததால ரொம்ப நேரம் வைச்சிருக்கலை.

பையன் இன்னும் இங்க தான் இருக்கான். நான் அந்தப் பையன்கிட்ட எதுவும் பேசலை. பக்கத்து வீட்டுக்காரங்க, கீரை விக்கிறம்மான்னு போனவங்ககிட்டயெல்லாம் அப்படி அழுதானாம். என்ன அழுது என்ன பண்ண, போனது போனது தான.

நீயும் இந்த மாதிரி எதையாவது பண்ணித் தொலைச்சிராத. பாத்து இருந்துக்கோ.

3 comments:

குடுகுடுப்பை said...

யாருப்பா இங்கெ நம்மள மாதிரி பேரு வெச்சுக்கிர ஆளு

கையேடு said...

ம்ம்ம்ம்...
இது ஏதோ தொலைபேசும்போது கிடைச்ச அறிவுரை போல இருக்கே.. ;)

Kulapam said...

தலைமுறைகளிடையே வரும், இந்த பிரச்சனைகளை, காலம் எனும் மருந்து தான், சரி செய்ய முடியும். பகுத்து, அறிந்து, புரிந்தாலுமே, சில சமயம், சிறிது, கிழே சரியதான் வேண்டியிருக்கிறது. ஆனாலும், ஏறிய தூரத்தை விட, சருக்கியது மிக குறைவு. உங்கள் நண்பர், விரைவில் துயரத்தில் இருந்து மீள விரும்பம்.