போன வாரம் இந்திய ஹை-கமிஷனர் (பொறுப்பு) நானிருக்கற இந்த ஊருப் பக்கமா வந்திருந்தாரு. வந்தவரு "இந்திய பொருளாதார முன்னேற்றமும் இந்திய-கனேடிய உறவும்" ன்ற தலைப்புல ஒரு மணி நேரம் பேசினாரு. ரொம்ப பொதுவான பேச்சா இருந்தாலும் சில புள்ளி விபரங்கள் குடுத்தாரு. ஏற்கனவே சிலது தெரிஞ்சிருந்தாலும், சிலது ஆச்சரியமாவும் சிலது அதிர்ச்சியாவும் இருந்தது. அதுல
ஆச்சரியங்கள்:
1. இந்தியாவுல மாசத்துக்கு 6 மில்லியன் செல் போன் விற்பனையாகுதாம்
2. இந்தியாவோட வளர்ச்சி 8% த் தொட்டு போய்கிட்டு இருக்கு. அடுத்த இருபது வருசங்களுக்கான எதிர் கூறல்லயும் இது 7-8 சதவீதம் வரைக்கும் இருக்கும்ன்னு கணிச்சிருக்காங்க
3. இந்தியாவோட சந்தை 65% உள்நாட்டை சார்ந்திருக்கு. அதனால தொடர்ந்த வளர்ச்சியில பெரிய பிரச்சனை இல்லை.
4. வறுமைக் கோட்டு எல்லை வந்து கணிசமா குறைஞ்சிருக்கு( 35ல இருந்து 25ன்னு ஞாபகம்)
அதிர்ச்சிகள்:
1. இந்தியாவோட மத்திய தர வர்க்கம் 30 மில்லியன். ( ஒரு 10 மில்லியன் பணக்காரங்கன்னு வச்சிக்கிட்டாலும் மீதி இருக்கற 60-70 மில்லியன் ஏழைகளா? )
2. தொழில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுறதினால நிறைய விவசாயிங்களால (விவசாயத்தை விட்டதால) இப்ப வறுமைக் கோட்டு எல்லைய தாண்ட முடிஞ்சிருக்கு. அரசாங்கத்தோட விருப்பமும் அதுதான். இங்க என்னனா அரசாங்கமே விவசாயத்த வேணாம்னு விடச் சொல்லுது!!!
இவரோட இந்த பேச்சுக்கப்புறமா அங்க இருந்தவங்கள்ல ஒருத்தரு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாரு.
எல்லாரும் விவசாயத்தை விட்டுட்டு வேற வேலைக்கும் போய்ட்டா உங்களோட சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க. அதுக்குி இவரு வழவழா பதில் ஒண்ணு எடுத்து விட்டாரு. இந்தியாவோட மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கறதால நிறைய பேரு விவசாயத்தை விட்டாலும் எந்த பிரச்சனையுமில்ல. எங்களுக்கு இப்போதைய தேவையும் முக்கியமும் தொழில் துறை முன்னேற்றமும் வளர்ச்சியும் தான், விவசாயமில்ல.

விவசாயக் குடும்பத்தில பிறந்த எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்தது. ஏற்கனவேெ எங்க கிராமத்தில என்னோட தலைமுறைல விவசாயத்துக்கு போனவங்க யாருமில்ல. எல்லாம் ஊரை விட்டு வெளியேறிட்டோம். இதுல அரசாங்கமும் அதை ஆதரிக்குதுங்கும் போது ஒண்ணும் சொல்ல வரலை.
ஆனா இதுலயும் ஒரு நன்மை இருக்குன்னு நான் நினைக்கிறேன். இப்போதைய விவசாயம் அதிகமான நவீன தொழில் நுட்பங்களை (டிராக்டரையும், பூச்சி மருந்தயும் தவிர்த்து) பயன் படுத்தலை. இதுக்கான முக்கிய காரணின்னு பார்த்தா விவசாயம் பண்ணப் படுற இடத்தோட அளவு. ஒவ்வொருத்தரும் விவசாயம் பண்றது சில ஏக்கர்ல தான்; அதுவும் ஒரே எடத்தில இல்லாம பிரிஞ்சி பிரிஞ்சி இருக்கும். இதனால மத்த நாடுகள்ல உபயோகப்படுத்தற எந்த உபகரணங்களும் நமக்கு லாபகரமா இருக்காது.
நமக்குன்னு சிலதை நம்ம மக்களே இப்பப்ப வடிவமைச்சி உபயோகப்படுத்திக்கிட்டு இருக்காங்க. ஆனாலும் அதினால வர்ற பயன்னு பாக்கும்போது ரொம்ப கம்மியா தான் இருக்கு. "உழுதவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாது" இன்னும் உண்மையாதான் இருக்கு. இந்த சூழ்நிலையில நிறைய பேரு விவசாயத்தை விடும்போது பண்ணை முறை விவசாயத்துக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு நினைக்கிறேன். அது ஒரு வேளை லாபகரமாவும் தன்னிறைவ தக்க வைச்சிருக்கற வாய்ப்புகளையும் தரலாம்.
பட்டுப் போயிருந்த முனியாண்டியோட விவசாய கனவு கொஞ்சம் கொஞ்சம் துளிர்க்கற மாதிரி தெரியுது. பாக்கலாம்.