Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Mar 11, 2006

ஒரு ஜல்லியடிப்பு

இது உண்மையான ஜல்லியடிப்பு பத்தினது தான். யாரவது, வலைப்பூவுல அடிக்கடி அடிக்கற ஜல்லின்னு ஏமாந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை.

வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுறணும்ற வரிசையில போன வாரம் ஒரு பெரிய பதிவா எழுதினேன். சுத்தி இருக்கற மக்க ஜல்லியடிச்சிருக்கேன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப கடுப்பானதனால இந்த வாரத்துக்கு என்ன எழுதுறதுன்னே தெரியலை. கடைசியில உண்மையிலேயே ஜல்லியடிப்பை அள்ளி விட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


சரி இப்ப கதைக்கு. எனக்கும் ஜல்லிகளுக்கும் ரொம்ப பெரிய தொடர்பெல்லாம் கிடையாது. ஆனா ஒவ்வொரு இடத்திலயும் ஜல்லிகளை தவிர்க்க முடியாம ஏறி மிதிச்சி தான் கடந்து வந்துருக்கேன். சித்தாள் வேலை பாத்த வீடாகட்டும், நடந்து போன ரோடாகட்டும், விளையாடுன ஓடையாகட்டும் ஒரே ஜல்லி தான். ஓடையில கிடக்குறதை சரளைன்னு சொன்னாலும், நம்ம கதைக்கு அதை ஜல்லி கணக்குல சேத்துக்கலாம். ஜல்லியில அதோட சைஸை வைச்சி தான் குறிப்பிடுவாங்க. கால் இஞ்ச், அரை இஞ்ச், முக்கால், ஒன்னு, ஒண்னேகால் ஒன்னறை வரைக்கும் ஜல்லி கிடைக்கும். இதுக்கு மேல போறதெல்லாம் உடைசல்ன்னு சொல்லிருவாங்க. ரொம்ப பெருசா போயி சதுரமா அடிச்சிட்டாங்கன்னா அதை கல்லு கணக்குல சேத்துரலாம்.

இந்த ஜல்லி வகையில கால் இஞ்சும் அரை இஞ்சும் நம்ம வீடுகள்ல காங்க்ரீட் போடுறதுக்கு பயன்படுத்தறது. ஒன்னேகாலும், ஒன்னரையும் ரோடு போடுறதுக்கு பயன்படுத்தறது. நான் சொல்றது மெட்டல் ரோடுன்னு கிராமங்களுக்கு போயிக்கிட்டிருந்த ரோடுங்களை. (இதுவே தார் ரோடுன்னா, மெட்டல் போட்டுட்டு அதுக்கு மேல தாரோட சேத்து போடுறதுக்கு இந்த கால் இஞ்ச் ஜல்லி தேவைப்படும்). ஒவ்வொரு கிராமமும் உருப்படியான மெட்டல் ரோடாவது கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்த நேரமும் இருந்திச்சி. இன்னும் ஒரு சில இடங்கள்ல இப்பயும் மெட்டல் ரோடுதான் இருக்கு. இந்த ரோடுங்க போடுறதுக்காக சில நேரங்கள்ல ரோடு ஓரத்தில எல்லாம் இந்த ஜல்லியை கொட்டி வைச்சி சில மாசங்களுக்கு எதுவுமே பண்ண மாட்டாங்க. அது ஒரு பெரிய இம்சையா இருக்கும். அனேகமா எல்லாருக்குமே அதைப்பத்தின அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். ரொடு ஓரத்தில கொட்டி வைக்கிற ஜல்லி குவியலை 'தாக்கு' அப்டின்னு சொல்லுவாங்க. சாதாரண கிராமத்து ரோட்டுக்கு கிமீ க்கு இத்தனை தாக்குன்னு கணக்கு இருக்கு. இதுல ஆறு தாக்குக்கு ஒரு தாக்குதான் செம்மண் தாக்கு இருக்கணும். ஆனா காண்ட்ராக்டர் மக்க இங்க தான் விளையாடும். ஏன்னா ஜல்லி கொஞ்சம் விலை கூட. அதனால மண்ணைக் கொட்டி ரோட்டை போட்டுட்டு சந்தோசமா போயிரும். சனங்களும் ஆகா புது ரோடுன்னு சைக்கிளை குறுக்க மறுக்க ஓட்டி சந்தோசப் பட்டுக்கும். ஒரு ரெண்டு மாசங்கழிச்சி சின்னதா ஒரு மழை வந்துச்சின்னா அப்ப இளிக்க ஆரம்பிக்கும் அந்த ரோடு. அதுக்கப்புறம் தான் உலகத்தில இல்லாத இம்சை எல்லாம் ஆரம்பிக்கும்.

மெயின் ரோட்டுல இருக்கற கிராமங்களுக்கு பிரச்சனையில்லை. ரோடே இல்லாம போனாலும் பஸ்ஸு வந்துரும். மெயின் ரோட்டுல இருந்து பிரிஞ்சி போற கிளை ரோட்டுல ஒரு கிளை ரோடு, அதுவும் அந்த கிராமத்துக்குன்னு தனியா ரெண்டு கிமீ உள்ள போய்ட்டு வரணும்னா கொஞ்சம் யோசிச்சி பாருங்க. பாதி நாளு பஸ்சுக்காரன் எதாவது காரணம் சொல்லிட்டு நேரா போயிருவான். அப்புறம் பஸ்சு பிடிக்கனும்னா சில கிமீ நடக்கணும் இல்லை இன்னும் கூடுதலா சில கிமீ நடந்தா டவுனு. எல்லாருகிட்டயும் சைக்கிள் இருக்காதில்ல அதனால இருக்கற எல்லா வகையிலயும் ஊர்க்காரங்க டவுனுக்கு போவாங்க. நம்ம கிராமமும் இந்த வகை தான். மொத்தம் ஒரு 150 வீடு இருக்கும் சனத்தொகை 450-500ன்னு நினைக்கிறேன்.

எங்க ஊருக்கு வரணும்னா பஸ்சுக்காரன் ஒரு ரெண்டு(மொத்தம் நாலு கிமீ) கிமீ உள்ளே வரணும். ரோடு கொஞ்சம் மோசமாயிருச்சின்னா உள்ள வரமாட்டாங்க. கஷ்டம் தான். ஒரு தடவை ரோடு போட்டாச்சின்னா கவர்மெண்டு சில பல வருசங்களுக்கு அந்த பக்கமே திரும்பி பாக்காது. மழை பேஞ்சி ரொடு மோசமாயிருச்சின்னு அப்டியே விட்டுட்டா பஸ்சு வராது. என்ன பண்றது. கவர்மெண்டு மோசம், பஸ்சுக்காரன் மோசம், , மழையைக் கொண்டு வந்த கடவுளு மோசம், ரோடு போட்டவன் சுருட்டிட்டான் அப்டின்ற புலம்பல்கள் எல்லாம் இருக்கும். புலம்பிக்கிட்டே இருந்தா மட்டும் பஸ்சு ரோடும் திரும்பி வந்துறாதுன்னு மக்களுக்கு நல்லா தெரியும். ஒன்னு எலக்சன் வரணும் இல்லை கிராமத்துக்குன்னு சொந்த பஸ்சு இருக்கணும். 500 பேருல 50 பேரு கூட டவுனுக்கு போக மாட்டாங்க. அதனால சொந்த பஸ்சு கதையெல்லாம் புவ்வாவுக்காகது. எலக்சனும் அடிக்கடி வர்றதில்லயில்ல. ஒரு ரெண்டு வாரம் பாப்பாங்க. மூணாவது வாரம் என்ன பண்றதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. அவன் குத்தம், இவன் குத்தம்னு அடுத்தவனை கையைக் காட்டிக்கிட்டிருந்தாலும், கதைக்காகுறது எதுன்னு ரொம்ப சுளுவா முடிவு பண்ணிருவாங்க. ரோடு போடுறதுக்கும் வசதி பத்தாது. அதனால ஒரே வழி ஜல்லியடிக்கறது தான். காங்க்ரீட் ஜல்லி எல்லாம் அடிக்க முடியாது. அதனால ஓடையில இருந்து, சரளையை கொட்டுறதுன்னு முடிவு பண்ணிருவாங்க. வீட்டுக்கு இவ்வளவு, கவர்மெண்டு சம்பளக்காரங்க இவ்வளவு, ஊரு இவ்வளவு, விருப்பப் படுறவங்க அதுக்கு மேலன்னு ஊர்ல ஒக்காந்து புரணி பேச்சோட இதையும் பேசி பெருசுங்க முடிவு பண்ணி இளவட்டங்களுக்கு தகவல் போகும். அப்புறம் எப்டியும் ஒரு ரெண்டு நாள்ல ஜல்லியடிக்கற திருவிழா நடக்கும். ஊர்ல பாதிப்பேரு அங்க தான் இருப்பாங்க. இதே மாதிரி
வருசத்துக்கு ரெண்டு மூணு ஜல்லியடிப்பு திருவிழா இருக்கும்.


இந்த மாதிரி தேவையான விசயங்களை எப்டியாவது சாதிச்சிக்கறதினால, எங்க ஊர்க்காரங்க அடுத்த ஊர்க்காரங்க கிட்ட விடற பந்தா சொல்லி மாளாது. நானும் அந்த ஊர்க்காரன் தான. இங்க நான் படம் போடலைன்னு வேற யாரு எங்க ஊருக்காக படம் போடுறது. அதனால ஒன்னு ரெண்டு (எல்லாம் பத்து வருசத்துக்கு முந்துன கணக்கு)

1. 150 வீட்டுக்கு, 55-60 தெரு விளக்கு. இது போக ஒவ்வொரு வீட்லயும் சாயங்காலம் அடுத்த வீட்ல போடுறதுக்கு முன்னாடி நம்ம வீட்ல போட்றணும்னு வைச்சிருக்கிற வெளி லைட்டு, அங்கங்க இருக்கற கோயில் லைட்டுன்னு ஊரே பளிச்சுன்னு இருக்கும். ஊரை விட்டு வெளிய நின்னு பாத்த என்னமோ டவுனுக்கு பக்கத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

2. ஊரைச்சுத்தி 100-200 மீட்டருக்கு ஒரு அடிகுழாயி. ஊரை விட்டு ஒரு ரெண்டு கிமீ தாண்டி காட்டுக்குள்ள ஒரு அடிகுழாயி(காட்டுக்கு போனா குடிக்கறதுக்கு வேணுமாம்)

3. பக்கத்து டவுனுல இருந்து பஸ் அப் அண்டு டவுன் 12 டிரிப்(பெரிய பெரிய கிராமங்கள் எல்லாம் ஒன்னு ரெண்டுக்கே அல்லாடிக்கிட்டு இருப்பாங்க). இதனால மக்க அலம்புன அலம்பு கொஞ்சம் நஞ்சமில்லை. டவுனுக்கு போயி டீக்குடிச்சிட்டு வரேன்னு, ஊர்ல இருந்து போற பஸ்சுல டவுனு ஆரம்பத்திலயே எறங்கி டீக்குடிச்சிட்டு அந்த பஸ் திரும்பி வரும்போது ஏறி வந்துர்றது. ஒரே காமெடி தான். அப்பப்ப பஸ்சுக்காரன் ஊருக்குள்ள வராம கட் அடிச்சா, பஸ்சைக் கட்டி போட்டுட்டு வரச்சொல்லு உன்னோட அதிகாரிய அப்டின்னு உதார் விட்டது எல்லாம் உண்டு.

4. பக்கத்து ஊர்க்காரங்க கையால அடிக்கற ஸ்பிரேயர்ல காட்டுல மருந்தடிச்சா இங்க மக்க, பவர் ஸ்பிரேயர்ல படம் போட்டுக்கிட்டு இருக்கும். அதனாலயே சுத்தி இருக்கற கிராமங்களுக்கெல்லாம் விவசாயத்தில முன்னொடியா இருக்க முடிஞ்சது.

5. அப்புறம் டீவி பொட்டி. பஞ்சாயத்து பொட்டி எப்ப படுத்தாலும் மிஞ்சி போச்சின்னா ரெண்டு வாரம் தான். இது போக வாரத்துக்கு ஒரு தடவை டீவி டெக்குன்னு விடிய விடிய படம் ஓடும். கலர் டீவின்னு ரூல் வந்தப்ப, ஆளுக்கு மொதலா போயி தூக்கிட்டு வந்துட்டாங்க.

6. இப்பயும் எங்க ஊரு பெருமையா பேமஸா சொல்லிக்கறது தண்ணித்தொட்டிய தான். மோட்டார் போட்டு ஓவர் டேங்க் கட்டி முதல்ல பொதுக்குழாய், பின்னாடி வீட்டுக்கு வீடு கனெக்சன், இப்ப இன்னொரு ஓவர்டேங்க்ன்னு பட்டைய கிளப்பிக்கிட்டிருக்காங்க. சுத்தி இருக்கற ஊருங்கள்ல ஆரம்பிச்ச ஆறு மாசத்தில ஊத்தி மூடுனப்ப, எனக்கு தெரிஞ்சி எங்க ஊருல 10-20 நாளைக்கு மேல நிப்பாட்டுனது கிடையாது.

7. ரொம்ப நாளா குறைன்னு இருந்த கக்கூசு பிரச்சனையையும் இப்ப சரி படுத்திட்டதா கேள்வி பட்டேன்(ஊரை விட்டு வந்து ஆச்சி அது ஒரு 10-12 வருசம்)

இந்த வகையில எங்க கிராமத்தில தன்முனைப்பா செஞ்ச விசயங்கள் நிறைய. எந்த விதமான தகவல்களோ இல்லை உதவியோ இல்லாதப்பயும் தேவையை முன்னிட்டு தங்களுக்கு தேவையானதை யாரோட உதவியையும் எதிர்பார்க்காம பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க/இருக்காங்க. சும்மா சும்மா நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்காம செயல்ல காட்டுறது அவ்வளவு சுலபமில்லை தான். ஆனா காட்ட முடிஞ்சிருக்கு. அந்த மாதிரி ஊர்ல இருந்து வந்ததனாலேயே, யாராவது, அவன் யோக்கியமா, இவன் யோக்கியமான்னு நொட்டனை மட்டுமே சொல்லிக்கிட்டு, இதெல்லாம் கவர்மெண்டு பண்ணனும் ரொம்ப ஈஸியா அடுத்தவங்களை நோக்கி கைய காமிச்சிட்டு நாம என்ன பண்ணியிருக்கோம், என்ன பண்ண முடியும்னு யோசிக்காம இருக்கறவங்களை பாத்தா கொஞ்சம் ஒதுங்கி போகத் தோணுது. சரி அதை விடுங்க.


இப்ப ஜல்லிக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்.
ஒரு நாலஞ்சி பேரு ஊர்ல மண்டையா திரிஞ்சிக்கிட்டு இருந்தாங்க. டெலிபோன் ஆபிஸ்ல எங்கூருக்கு போனு குடுக்க முடியுமா முடியாதாங்குறது, பஸ் டிப்போவுல பஸ்சு கரெக்டா வரணும் வரலைன்னா நடக்கிறதே வேறன்னு சட்டம் பேசுறது, கரண்டாபீஸ்ல போயி எங்கூரு முன்னேறிருச்சி, முதல்ல அந்த ஓட்டை டிரான்ஸ்பார்மரை மாத்துன்னு சவுண்டு விடுறது, ரோட்டைச் சுத்தி காட்டுக் கருவேலை வளர்ந்து போச்சு, அவங்க அவங்க எடத்துல இருக்கறதை வெட்டிருங்க; நாங்க வெட்டுனா கட்டைய நாங்களே வித்துருவோம்னு பயமுறுத்தறதுன்னு அலம்பிக்கிட்டு திரிஞ்சாங்க. அந்த சமயத்தில ஊர்ல இருக்கற ரோடு காணாது, இன்னொரு ரோடு வேணும்னு சண்டை போட்டு புது ரோட்டுக்கு பெர்மிசன் வாங்கி வைச்சிருந்தாங்க. ரோடு போட ஆரம்பிச்சப்ப, காண்ட்ராக்டரை இம்சை பண்றதுக்காக இன்னொரு காண்ட்ராக்டரை தொந்தரவு பண்ணி தெரிஞ்சிக்கிட்ட விசயங்கள் தான் இந்த ஜல்லி விசயங்கள் எல்லாம். மேல சொல்லியிருக்கற விசயங்கள் எல்லாம் மண்டக்காரங்க சொன்ன ஞாபகத்தில இருந்து எழுதுனது. அதனால சரியா இருக்குமான்னு தெரியலை. அப்ப மண்டையா சுத்திக்கிட்டு இருந்ததில ஒருத்தரு இன்னைக்கு ஊர் பஞ்சாயத்து தலைவரு. இப்ப ஊரெல்லாம் சிமெண்டு ரோடு, கலையரங்கம், அங்கங்க கக்கூசு, ரெண்டாவது தண்ணித்தொட்டி, இன்னொரு புது ரோடுன்னு என்னன்ன பண்ண முடியுமோ பண்ணிக்கிட்டு இருக்காங்க.

Feb 10, 2006

தெகப்பூடு/திசைபூண்டு

கதைகள், கற்பனைகள், எதார்த்தங்கள்ன்னு போற கிராமத்து வாழ்க்கை எப்பவுமே சுகமானது தான். ஆனா இன்னும் இந்த கிராமங்கள் இருக்கான்னு கேட்டா, அதுக்கு பதில் சொல்றது கஷ்டம் தான். ஏன்னா கிராமத்து மக்கள் தலைமுறை தலைமுறையா பேனா பேப்பர்ல எழுதாம கடத்தி வந்த விசயங்கள் (பட்டறிவு) எல்லாம் இந்த தலைமுறையோட காணம போய்கிட்டு இருக்கு. இப்ப எல்லா கிராமங்களும் தங்களை நகர்ப்புற கலாச்சாரத்தோட ஒட்டுன மாதிரியான கலாச்சாரத்துக்கு மாறிக்கிட்டு இருக்காங்க. இத தப்புன்னு சொல்ல முடியாது. ஆனாலும் பட்டறிவை இழந்துகிட்டு இருக்கோம்ன்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியலை. என்ன மாதிரியான விசயங்களை இழந்துகிட்டு இருக்கோம்ன்றதுக்கு ஒரு சின்ன உதாரணம் இங்க.

சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம். எங்க ஊரு சிலம்பு வாத்தியாரு. கொஞ்சம் வயசானாலும் கட்டுக்குள்ள இருக்குற உடம்பு. காட்ல எங்கயோ வழி தவறி நடக்ககூட முடியாம கிடந்தாருன்னு, ஒருநாளு அவரை வண்டி கட்டி தூக்கிட்டு வந்தாங்க. பாக்கப்போனவுங்க வந்து அதைப்பத்தி கதை கதையா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா யாருக்கும் ஏன் அந்த மாதிரியாச்சின்னு தெரியல. ஒருத்தங்க மட்டும், அவரு எங்கயாவது தெகப்பூடு மிதிச்சிருப்பாரு. அதனால தான் இந்த மாதிரி ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்தில இது சரியாயிரும், அப்டின்னாங்க(சில மணி நேரங்கள்ல அவரு சரியாயிட்டாரு). அந்த வார்த்தையை முதலும் கடைசியுமா அப்ப தான் கேட்டேன். தெகப்பூடுன்னா என்னன்ற கேள்விக்கு எந்த சரியான பதிலும் இல்ல. ஒருசிலரு, அது ஒரு சின்ன பூச்சி. நாம அதை மிதிச்சிட்டம்னா, அதோட உடம்பு எவ்வளவு கஷ்டப்படுமோ அதே மாதிரி மிதிச்சவங்களோட உடம்பும் கஷ்டப்படும், அப்டின்ற ரேஞ்சுல சொல்லிக்கிட்டு போனாங்க. அதுக்கு மேல கேட்டு பிரயோசனமில்லை. அட்லீஸ்ட் அப்பயாவது தெகப்பூடுன்னு சொல்றதுக்கு ஒரு சிலர் இருந்தாங்க. இப்ப யாராவது இருப்பாங்களான்னு தெரியல. நானு அதுக்கப்புறம் அதைப் பத்தி எங்கயுமே நான் கேள்விப் படவேயில்ல. சரி, எதோ ஒரு கதை விட்ருப்பாங்கன்னு நான் அதை மறந்தே போயிருந்தேன்.

ஆனா இந்த வார நக்கீரன்ல அதைப் பத்தின ஒரு சின்ன குறிப்பு மட்டும் வந்திருக்கு. அதோட பேரு திசைபூண்டு. இது ஒரு ஒரு வகையான செடி. இது மனுச உடம்புல குத்திருச்சின்னா, சிறுமூளை போதையுண்டது மாதிரி ஆகிருமாம்.(குடிமகன்கள் கவனிக்க). சில மணி நேரங்கள் திசை தெரியாம சுத்திக்கிட்டு இருக்க நேரிடுமாம். இதுக்கு மேல இதைப் பத்தி எதுவும் குறிப்பிடப்படலை.

இதைப் பத்தின மேலதிக விபரம் இங்க யாருக்காவது தெரியுமா ??

Feb 7, 2006

முனியாண்டியும் சில மாடுகளும் - 2

இப்ப ரெண்டாவது.

கிராமத்தில இருக்கும் போது கிராமத்தோட ஒட்டாம, டவுனுல இருக்கும்போது கிராமத்தை நினைச்சிக்கிட்டே ஓட்டுன அமர்க்களமான வாழ்க்கை முனியாண்டியோடது. சில வருசங்கள், தாத்தா வீட்ல குப்ப கொட்டுனப்ப தான் முனியாண்டிக்கு மாடுங்களோட பரிச்சயம் ஆச்சி. கிராமத்தில தாத்தா வீட்ல மாடும் வண்டியும் இருந்தது. வீட்ல இருக்கறப்ப, கூளம் வெட்றதும், குழுதாடியில(மாடு தண்ணி குடிக்கிற தொட்டி) புண்ணாக்கு, தவுடு கலக்குறதும் முனியாண்டியோட டூட்டி. வீட்ல இருந்த ரெண்டு மாடும் ரொம்ப அமைதியான மாடுங்க. நாம உண்டு நம்மளோட புண்ணாக்கு உண்டுன்னு இருக்கும் (கிழட்டு மாடுகன்னு யாருங்க சவுண்டு விடுறது). தாத்தா மாடு வாங்குறதே ஒரு அலாதியான விசயம். ஊர்ல அவனவன் எளவட்ட மாடுக வாங்குறதுக்கு போட்டி போட்டுக்கிட்டு இருக்கிறப்ப இவரு மட்டும் ரொம்ப நிதானமான மாடா வாங்கிட்டு வருவாரு. ஒரு தடவை வாங்கிட்டு வந்த மாடு கொஞ்சம் தலையாட்டுதுன்னு (மத்தவங்களை முட்ட வர்றது) போய் வேற மாடு வாங்கிட்டு வந்துட்டாரு. அவருக்கு மாடுகளும் ஒன்னுதான் தன்னோட பிள்ளைகளும் ஒன்னு தான். சாட்டைக்கம்பு வச்சிருந்தாலும் அவரு மாட்டை அடிச்சி முனியாண்டி பாத்ததில்லை. மாடுகளும் இத தெரிஞ்சிகிட்டு வம்பு பண்ணதில்லை.

முனியாண்டி கைலி கட்ட (கிராமத்தில இது ஒரு முக்கியமான கிராஸ்ஓவர்) ஆரம்பிச்ச வயசில மாட்டு வண்டியும் ஓட்ட ஆரம்பிச்சிட்டான்(ஆனாலும் இது ரொம்ப நாளைக்கி நிலைக்கல). பருத்திக் காட்ல வேலையாளுக பருத்திய எடுத்து மூட்டை கட்டி வச்சிட்டு வந்துருவாங்க வீட்ல யாராவது ஒக்காந்து தூங்கிட்டு இருப்பாங்கன்ற எரிச்சல் தான்). ஒரு மூட்டை மட்டும் இருந்ததுன்னா சைக்கிள்ல போய் எடுத்துட்டு வரணும். அதிகமா இருந்ததுன்னா வண்டி கட்டிட்டு போகணும். முனியாண்டியோட முறை வர்றப்ப எவ்வளவு பருத்தி இருந்தாலும் வண்டி தான்.(அப்ப வண்டியோட்றதுக்கு ஆரம்பிச்ச ஆர்வம் இப்பவும் குறையலன்றது தனி). விளைச்சல் சமயத்தில மாட்டுக்கு பயிரு பச்சை நிறைய கிடைக்கும். அதனால படு ஊட்டமா இருக்கும். காட்டுக்கு போறப்ப ஊருக்கு வெளியில ஒரு பாதையோட ஆரம்பத்தை தொட்டுட்டம்னா போதும் அதுக்கப்புறம் அவங்களா போய் சேர வேண்டிய காட்டுக்கு கொண்டு போய் சேத்துருவாங்க. பாதைய பத்தி யோசிக்க வேண்டிய தேவையே இல்ல.(தாத்தா ஒருதடவை டவுனுக்கு போய்ட்டு நைட்டு திரும்ப வரும்போது எப்பயும் போல தூங்கிட்டே வந்திருக்காரு. இடையில வண்டி நின்னு போயிருக்கு. சரி வீடு வந்திருச்சின்னு எந்திருச்சி பாத்தா வண்டி நின்ன இடம் அந்த சைடுல இருக்கிற எங்க காடு).

காட்டுக்குப் போகும்போது வாக்கூடு (வாய்க்கூடு) கட்டி கூட்டிட்டுப் போனாலும் ஆடி அசைஞ்சு பக்கத்தில இருக்கிற செடிகளை பிடிச்சி இழுத்து தின்னு கிட்டே போவாங்க. ஆனா பருத்தி மூட்டைய ஏத்துன உடனே குஷியாகி( மொத்தமே 100 கிலோவுக்குள்ள தான் இருக்கும்) வீட்டை பாத்து ஓட ஆரம்பிச்சிருவாங்க. இழுத்து பிடிக்கிறது பெரிய விசயமாயிரும். இதுக ஓடுற ஓட்டத்தில மூட்டைங்க பறக்கிற கதையெல்லாம் தனி. என்ன தான் இதுக துடிப்பா ஓடுனாலும் முனியாண்டிக்கு இள மாடுங்களை பாக்கும் போதெல்லாம் தாத்தா மேல கொஞ்சம் கோவம் வரும். முனியாண்டி தன்னத்தானே சமாதானப் படுத்திக்கிறதும் ஒரு நேரம் வந்துச்சி.

கிராமத்தில "நாளேரு" ன்னு ஒரு விழா கொண்டாடுவாங்க. வருசத்தோட மொத விதைப்பை ஊர்க்காரங்கல்லாம் சேர்ந்து ஒரு நிலத்தில உழுது, விதைச்சு ஆரம்பிப்பாங்க. இதுக்கப்புறம் தான் மத்த நிலங்கள்ல விதைப்பு ஆரம்பிப்பாங்க. நாளேரன்னிக்கு அத்தனை மாடுகளும் மொத்தமா போயி அந்த நிலத்தை உழுகணும். இந்த மாடுகளை கூட்டிடுப் போறதே ஒரு விதமாயிரு்க்கும். அன்னைக்கு மாடெல்லாம் குளிச்சி மேக்கப் போட்டு அப்டி ஒயிலா ஊருக்குள்ள நடை போட்டு ஊர் கோயிலுக்கு போகும். அங்க பூசை போட்டு அப்புறமா தான் அனுப்பு வைப்பாங்க. மாடில்லாதவங்க செடி வெட்றது, கொத்துறது அப்டின்னு எதாவது ஒரு விவசாய கருவிய வச்சி அந்த நிலத்தில எதாவது செய்வாங்க. அதுக்கப்புறம் விதைக்க (விதையும் அவங்க அவங்க கொண்டு வருவாங்க) ஆரம்பிப்பாங்க. இப்டி முடிச்சிட்டு வர்றவங்களுக்கு மறுபடியும் கோயில்ல வரவேற்பு இருக்கும். (முறைப்பொண்ணுங்க மஞ்சத்தண்ணி ஊத்துறது இதுல ஒரு கிளைக்கத). அதனால யாரு மொதல்ல வர்றதுன்னு ஒரு போட்டி இருக்கும். எப்பவுமே இள மாடுங்க தான் முதல்ல ஓடி வரும். நம்ம மாடுக நிதானமானதுன்றதுனால மெதுவாதான் வரும். அதோட தாத்தாவுக்கு மாடுங்கள விரட்றதும் பிடிக்காது. (அதனாலயே மாடுங்களுக்கு பழக்கமில்லாதவங்களுக்கு குடுக்க மாட்டாரு. ஆனா முனியாண்டி தான் தவுடு புண்ணாக்கு காட்டிரான்ல, அதனால பெர்மிசன் உண்டு) பருத்திக் காட்டுக்கு போறப்ப இந்த ஓட்டம் ஓடுதுகளே, சரி இந்த தடவை ஓட்டிப் பாப்போம்னு அந்த வருசம் ரெடியா இருந்தான். போட்டி வந்து ஒரு நாளஞ்சி (ஜோடி) மாடுகளுக்கு தான். மொத்த நிலமும் உழுது முடியற வரைக்கும் ஏர்க்கால கழட்ட விட மாட்டாங்க. உழவு முடிஞ்சவுடனே எல்லாம் பிச்சி பறக்கறாங்க. முதல்ல ஆடி அசைஞ்சி ஆரம்பிச்ச நம்மவுங்க ரெண்டு மாடுக முன்னாடி ஓடுறத பாத்தவுடனே பாய்ச்சல் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. குறுகலான பாதைன்றதால சைடு வாங்கறது பிரச்சனை. அப்டி இருந்தும் மாடுங்க ஓடுன ஓட்டத்தில பின்னாடி பிடிச்சிக்கிட்டு ஓட முடியல. ஏதோ தூரம் கம்மின்றதால கொஞ்சம் தம் பிடிக்க முடிஞ்சது. கடைசில ரெண்டாவதா வந்து நின்னாங்க. அன்னைக்கெல்லாம் முனியாண்டிய பிடிக்க முடியலை (யாரும் அவன கண்டுக்கலைன்றது பெரிய விசயமா என்ன).

இப்டி பழச எல்லாம் நினைச்சு பாக்கும்போது, ஊரை விட்டு தள்ளி வந்து புலம்பல்களோட சுத்திக்கிட்டு இருக்கிறது முனியாண்டிக்கு கொஞ்சம் உறுத்தலா தான் இருக்கு. புவ்வாவுக்கு என்ன பண்றதுன்னு சமாதானம் சொல்லிக்கிட்டு பனி மூடுன சுத்துப்புரத்தை சன்னல் வழியா பாத்துகிட்டே இன்னும் வேற சில மாடுகளோட நினைவ அசை போட்டுக்கிட்டு இருக்கான்....

முனியாண்டியும் சில மாடுகளும் - 1

"ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக் கொள்கிறோம்" --வண்ணதாசன்


ஊரை விட்டு தாண்டி வந்து, எல்லாத்தையும் கஷ்டப்பட்டு மறந்துட்டு ஒக்காந்து வேலையப் பாத்தாலும்(என்ன வேலைன்றது வேற விசயம்) , இமெயில்ல எதையாவது அனுப்பி மக்க மனுசன காலி பண்ணிடுறாங்க. இப்பிடித்தான் சமீபத்தில Amazing Madurai அப்டின்னு மதுரையோட முக்கியமான சில போட்டால்லாம் அனுப்பியிருந்தான் நண்பன். அதுல இருந்த ஒரு போட்டாதான் இங்க.(இதுல காப்பிரைட்டு வில்லங்கம் எதுவும் இருக்கான்னு தெரியலை).



இந்த படம் முனியாண்டிக்கு நிறைய விசயங்களை முன்னாடி கொண்டு வந்துடுச்சி. மாடு மாதிரி வளர்ந்திருக்க அதுக்கு இருக்கிற அறிவு கூட ஒனக்கு இல்ல; உன்னை வளர்த்ததுக்கு ஆடு மாடு வாங்கி வளத்திருக்கலாம்ன்னு வாங்குன திட்டை எல்லாம் மறந்தாலும், காளை மாடு, பசுமாடு, எருமை மாடு, அந்த மாடு, இந்த மாடுன்னு சில மாடுங்க முனியாண்டிய பீல் அடிக்க வச்சிருச்சி.

இதுல முனியாண்டியும் மாடும் சேர்ந்த மாதிரியான ரெண்டு விசயங்க மட்டும் இங்க. ஒன்னு முனியாண்டி சமீபத்தில படிச்ச மாடு பத்தின புத்தகம், இன்னொன்னு மாட்டு வண்டி டிரைவரா முனியாண்டி வேலை பாத்தது பத்தி.

முதல்ல புத்தகம்.
எந்த புத்தகம்னு பாதிப் பேருக்கு இன்னேரம் தெரிஞ்சிருக்கும். பெங்களூரை விட்டு மூட்டை கட்றதுக்கு முன்னாடி தேவைப் பட்டாலும் படும்னு புத்தகக் கண்காட்சியை மொத்தமா போயி ரவுண்டு கட்டி வாங்கினப்ப ( வாங்குனதுல ஒன்ன கூட எடுத்துட்டு வர முடியலைன்ற சோகத்தை யாரு கிட்ட போய் சொல்ல) நண்பன் ஒருத்தன் ஒரு 50-60 பக்கம் மட்டும் இருக்குற ஒரு சின்ன புத்தகத்தை வாங்கினான். முனியாண்டி அப்ப புத்தகம் படிக்கிறதில்லைன்ற முடிவோட இருந்தாலும் சின்ன புத்தகந்தான்னு ஆசைய காட்டி விட்டுட்டான். காலையில ஆரம்பிச்சு சாயங்காலம் வரைக்கும் நடக்குறத சொல்ற கதை. முதப்பக்கத்தில ஏற ஆரம்பிக்கற விறுவிறுப்பு கடைசி பக்கம் வரைக்கும் ஏறுமுகமாத்தான் இருந்தது. அந்த புத்தகத்தோட பேரு "வாடி வாசல்". இந்த புத்தகம் வந்து கிட்டத்தட்ட ஒரு 50 வருசம் இருக்கும். சி.சு. செல்லப்பா, தேனிப்பக்கம் நடக்கிற மாடு பிடிக்கிற விளையாட்டப் பத்தி எழுதுனது. மாடு பிடிக்கிறத அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது. இன்னும் சொல்லணும்னா கதையோட பாதியில நீங்களும் அந்த பொட்டல்ல காரிக்காளை, வாடிவாசல் தாண்டி வரப்போறதை ஆர்வத்தோட பாத்துக்கிட்டு நிப்பீங்க. அட்லீஸ்ட் முனியாண்டி அப்டி தான் நின்னான். ஒருவேளை நீங்க படிக்கும்போது மன்னிக்கனும் பாக்கும்போது சைடுல முனியாண்டிய பாக்க முடிஞ்சாலும் முடியலாம்.