Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Dec 19, 2008

அம்மாக்களின் கதை

நம்ம வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு சின்ன விசயம் நடந்து போச்சி....

நம்ம சுமதியக்கா வீடு, அதான் ரவி வீட்டுக்கு எதிர்த்த வீடு, அவங்க வீட்ல பிரச்சனை ஆனதுக்கப்புறமா அந்த வீட்டையும் வித்துட்டு எல்லாம் தனித்தனியா போயிட்டாங்க.

அதை ஒரு டீச்சர், ரிடையர் ஆனவங்கதான், வாங்கி குடிவந்து அதாச்சி ஒரு ஆறேழு மாசம். வீட்டுக்காரர் ரொம்ப நாளைக்கு முன்னாடியே விட்டுட்டு போயிட்டாராம். இவங்களும் பையனும் தான். பையனை இங்க பாலிடெக்னிக்ல படிக்கப்போட்டு அவ்வளவு சிக்கல்லயும் இஞ்சினியரிங்கும் படிக்க வைச்சிருக்காங்க. அந்தப் பையன் இப்ப மெட்ராஸ்ல வேலை பாத்துக்கிட்டு இருக்கான்.

சாயங்காலம் வாசல்ல உக்காந்திருந்தா வருவாங்க நல்லா பேசுவாங்க. என்னவோ தெருவுல வேற யாருகிட்டயும் அவ்வளவா வைச்சிக்கிறது இல்ல.

போன ஒருவாரமா புலம்பிக்கிட்டே இருந்தாங்க. அந்தப் பொலப்பத்துனாலயா இல்ல என்னன்னு தெரியலை அவங்களுக்கு உடம்பும் சரியில்லாமா போச்சி. நான் கூட ரெண்டு தடவை கூழு காச்சி குடுத்தேன். அடுத்த தடவை எடுத்துட்டு போனப்ப அவங்க வீட்ல இல்ல. ஆஸ்பத்திருக்கு போயிட்டாங்க. செல்வியக்கா தான் அதைக் காலி பண்ணினாங்க.

எல்லாம் பையனைப்பத்தின புலம்பல் தான். போன இடத்திலயா இல்ல படிக்கும்போதான்னு தெரியலை அந்தப் பையனுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்திருக்கு. போன வாரம் கல்யாணமும் முடிச்சிட்டான். இவங்களுக்கு சொல்லவும் இல்லை. பக்கத்துத் தெரு முக்குல இருக்கற ப்ரெண்ட்ஸுக்கெல்லாம் பத்திரிக்கை வைச்சிருக்கான்.

இவங்களுக்கு இந்த விசயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே பொண்ணோட வீட்லருந்து அவங்க அப்பாவும் அம்மாவுக்கு விசயம் தெரிஞ்சி அவங்களே வந்திருக்காங்க. அவங்க வீட்ல மொதப்பொண்ணு ஓடிப்போனதினால ரெண்டாவது பொண்ணுக்கும் அதே மாதிரி ஆகிறக்கூடாதுன்னுதான் கல்யாணத்தைப் பத்தி பேசறதுக்கு வந்திருக்காங்க. இந்தம்மாதான் பிடி கொடுக்கலை.

அதுக்கப்புறமா அந்தப் பையனா கல்யாணம் முடிச்சிட்டான். கல்யாணம் நல்லா பெருசாவே பண்ணியிருக்காங்க. எல்லாம் போயிட்டு வந்தவங்க சொன்னது தான். இவங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதிலருந்தே மனசு கேக்கலை. எவ்வளவு பண்ணியிருக்கேன். அவனை முன்னாடி கொண்டு வர்றதுக்கு தனியா எவ்வளவு கஷ்டப்பட்டேன். பெத்தவளுக்கு என்ன மரியாதை. இப்படிப் பண்ணிட்டானேன்னு புலம்பிக்கிட்டே இருந்தாங்க. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மூணு நாள்லயே இவங்களுக்கும் உடம்பு முடியாம போயிருச்சி.

நாளு நாளைக்கு முன்னாடி ஈஸ்வரியக்கா தான் வந்து கதவை தட்டுனாங்க. டீச்சர் வீட்ல முனிசிபாலிட்டி தண்ணி வெள்ளம் போயிட்டிருக்கு. வீட்டு கேட்டும் உள்ள பூட்டியிருக்கு. பக்கத்து வீட்டு பீட்டி மாஸ்டர் கேட்டு மேல ஏறி உள்ள போனாரு. கதவு பூட்டாம தான் கிடந்துச்சி. எப்ப நடந்ததுன்னு யாருக்கும் தெரியலை. நைட்டு தான் உயிர் போச்சா இல்லை முந்துன நாளே போயிருச்சான்னு தெரியலை.

என்ன சொல்றது. யாருக்கு சொல்றதுன்னு கூட புரியலை. மாமா கூட அவங்களுக்கு சொந்தக்காரங்க ஒருத்தரு வேலை பாக்கறாரு. அதனால மாமாவை கூப்புட்டு அவங்களுக்கு சொல்ல சொன்னேன். சுத்தி முத்தி நிறைய சொந்தக்காரங்க இருப்பாங்க போலருக்கு. நிறையப் பெரு. நல்ல கூட்டம்.

பையனுக்கும் தகவல் சொல்லிவிட்டு அந்தப் பொண்ணு அவங்க அம்மா அப்பா எல்லாம் வந்திருந்தாங்க. அழகு பட்ட பொண்ணு. இன்னும் கொஞ்ச நேரம் நின்னு பாக்கலாமோன்னு தோணும். அந்தப் பையன்தான் அப்படி அழுதுக்கிட்டு இருந்தான். என்னால தான, என்னால தானன்னு அந்தப் பையன் அழுததை பாக்கவே எப்படியோ இருந்தது. எப்ப நடந்ததுன்னு தெரியாததால ரொம்ப நேரம் வைச்சிருக்கலை.

பையன் இன்னும் இங்க தான் இருக்கான். நான் அந்தப் பையன்கிட்ட எதுவும் பேசலை. பக்கத்து வீட்டுக்காரங்க, கீரை விக்கிறம்மான்னு போனவங்ககிட்டயெல்லாம் அப்படி அழுதானாம். என்ன அழுது என்ன பண்ண, போனது போனது தான.

நீயும் இந்த மாதிரி எதையாவது பண்ணித் தொலைச்சிராத. பாத்து இருந்துக்கோ.

Sep 30, 2008

கடைக்கு வந்த பேய்கள்



கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பேய்கள்.

Feb 16, 2008

மண்ணைத் தின்று உயிர் வாழும் மக்கள்

சின்னக் குழந்தைக மண்ணைத் திங்கிறதும் கர்ப்பமா இருக்கறவங்க திங்கிறதும் கேள்விப்பட்டது தான். ஆனா உயிர் வாழ்றதுக்கே மண்ணைத் தான் திங்க வேண்டியதிருக்குன்னு கேக்கும் போது பயங்கர அதிர்ச்சியா இருக்கு. இந்த மாதிரி நடக்கிறது ஹைய்தின்ற நாட்டில.





தொடர்பு பட்ட செய்திகள்

1.
2.

Mar 13, 2007

இந்த சமூகம் உன்னை(ப்) பொறுப்பேற்கும்/வழிநடத்தும்..

வாரக் கடைசியில பனிச்சறுக்கு போயி பல்டி அடிச்ச கதையை இங்க ஆபிஸ்ல அளந்துகிட்டு இருந்தேன். அதை சொல்லிக்கிட்டு இருக்கும் போது பல்டி அடிக்கிறதுல எனக்கு இருந்த பயத்தையும் இதே இது ஊர்ல இருந்தா எனக்கு இந்தளவுக்கு பயம் இருந்திருக்காதுன்னு அதுல இருக்கற வித்தியாசத்தையும் சொன்னேன். அதாவது இந்த மாதிரி குத்து கரணம் போடுறதால எதாவது கால்ல சுளுக்கோ இல்லை வேற எதாவது சின்ன விபத்தோ நடந்தா இங்க இருக்கறதினால எனக்கு அது கொடுமையா இருக்கும்ன்ற தொனியில சொன்னேன். கேட்டுக்கிட்டு இருந்த நண்பர் சிரிச்சிக்கிட்டே, நான் சொல்றது தப்புன்னும் இங்கதான் நான் எந்த வித பயமும் இல்லாம இருக்கமுடியும்ன்ற வித்தியாசத்தையும் சொன்னாரு. இங்க ஒருத்தருக்கு எதாவது ஒன்னுன்னா அதுக்கு இந்த சமூகம் பொறுப்பெடுத்துக்கும் அப்படின்னாரு.






விளக்கமா சொல்றதுன்னா, யாருக்காவது உடம்புக்கு முடியாமலோ இல்ல ஒரு விபத்தோ நடந்தா அவங்களுக்கு தேவையான உதவி உடனடியா தேடி வந்திரும். குறைஞ்சது ஒரு அஞ்சு நிமிசத்திலருந்து கூடுனது அரைமணி நேரத்துக்குள்ள உங்களை கவனிக்கறதுக்கு பக்கத்தில ஆள் இருப்பாங்க. இந்த உதவி அரசாங்கத்துகிட்ட இருந்தோ இல்ல யாரவது தனி மனிதர்கிட்ட இருந்தோ இருக்கலாம். அதுக்கு மேல நீங்க மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டுட்டீங்கன்னா, மருத்துவமனை உங்களை பொறுப்பெடுத்துக்கும். நீங்க முழுமையா குணம் ஆகுற வரைக்கும் அங்க இருக்கலாம். அதுக்கு மேலயும் உங்களுக்கு வீட்லயும் உதவி தேவைப்பட்டதுன்னா செவிலியர்கள் அப்பப்ப வந்து பாத்துப்பாங்க. கனடாவோட மருத்துவகாப்பீட்டுத்திட்டம் உண்மையிலயே ஒரு நல்ல திட்டம். என்ன மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கறதால எப்பவும் ஒரு பெரிய வரிசை இருக்கும்.

மருத்துவ வசதி இந்த மாதிரின்னா, உங்களுக்கு வேலைக்கும் போக முடியாததால சம்பளம் எதுவும் கிடைக்கலைன்னா அதுவும் அரசாங்கமே குடுத்துரும். அதனால இங்க நம்மளைப் பத்தி எதுவும் நாம கவலைப்பட வேண்டிய தேவையில்ல. இதைத்தான் நண்பர் இந்த சமூகம் உன்னை பொறுப்பெடுத்துக்கும்னு சொன்னாரு.

நண்பர் சொன்னதெல்லாம் உண்மை. எல்லாமே தெளிவான வரைமுறைகள். எங்கயும் எதப் பத்தியும் யோசிக்கவேண்டியதில்லை. நமக்கு ஒரு சான்றிதழ் வேணும்னா அது எப்படி வாங்கனும்ற விதிமுறைகளை பின்பற்றினா வீடு தேடி வந்திரும். எதுவும் அலைய வேண்டியதில்லை, லஞ்சம் குடுக்கவேண்டியதில்லை. பல்லிளிக்கவோ, கூனிக் குறுகவோ வேண்டியதில்லை. ஒருவகையில பார்த்தா எல்லா நாடுகளும் தங்களோட பொது மக்களை இந்த மாதிரி நடத்தினா நல்லாருக்கும்ன்ற எண்ணம் வரும்.


இதைப் பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது, இதுக்கு நாம கொடுக்கற விலை என்னவா இருக்கும்ன்ற கேள்வியும் வந்தது. எல்லாத்துக்குமே ஒரு விலை உண்டு இல்லையா. இந்த விசயத்தை போன பதிவுக்கப்புறமா நடந்த மெயிலாடல்ல என்னோட தோழி ஒருத்தங்க விளக்கமா எழுதியிருந்தாங்க. அது கீழ இருக்கு. அவங்க சொல்றது, நீ குடுக்க வேண்டிய விலை "இந்த சமூகம் உன்னை வழிநடத்தும்" ங்கறதை ஒத்துக்கணும். நீ ஒன்னோட வழியில போக முடியாது. இது உண்மையிலேயே கொஞ்சம் சிக்கலானது. யாரவது ஒருத்தரு உங்களோட வாழ்க்கைய நீங்க எப்படி வாழணும்னு முடிவு பண்ணினா உங்களால ஏத்துக்க முடியுமா ? ஏற்கனவே இங்க குழந்தைகள் வளர்க்கப்படுற விதத்தைப் பாத்து பயந்து போயிருக்கற எனக்கு இவங்க சொல்ற வித்தியாசம் ரொம்ப முக்கியமானதா இருக்கு. .

இப்ப மெயிலாடல்லருந்து


//எனக்கு இங்க குழந்தை வளர்க்கிறதை பாத்தா என்னவோ ஒரு ஆர்மி ட்ரெயினிங் மாதிரி தான் பாக்க முடியுது.//

ஆமாம் முனியாண்டி.

இதுனாலும்தான் நாங்கள் இந்தியா போகவேண்டும் என்ற காரணம் எங்களுக்கு ரொம்பவும் வலுப்பெற்றுவிட்டது. ஒருவகையில், பண,வாழ்க்கை முறை, சமுதாயம், படிப்பிற்கேத்த வேலை இப்படியான தளங்களில், அமெரிக்கா போன்ற நாடுகள் மிக உயர்நிலை அடைந்துவிட்டாலும், தனிமனித அறிவில், ஆன்மீக வாழ்க்கைக்கு இந்தியா ஒரு சிறந்த நாடு என்பது எங்கள் இருவரின் எண்ணம்.

அதனாலுமேகூடத்தான், ஒரு வகையான சமூகக் குளறுபடிக்கு குழந்தை வருமுன்னர் இந்தியாபோய்விட நாங்கள் நினைப்பதை இந்தக் காரணமும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது ( பெற்றோருடன் இருக்கவேண்டும்என்ற விருப்பமும்ஒரு காரணம்) நிறைய முறை நாங்கள் சிந்தித்தோம். இந்த ஒரு காரணத்தை எங்களால் புறந்தள்ள முடிந்ததில்லை. அதாவது, ஒரு தனி மனிதன் சார்ந்த சிந்தனையை இந்த வளர்ந்த நாடுகளில் வளரும் குழந்தைகள் தொலைக்கின்றன என்ற எங்களது கணிப்பு நாளுக்கு நாள் உறுதிசெய்யப்படுகிறதே ஒழிய, தவறாகவில்லை. இதுதான் இந்த சமுக வாழ்க்கைக்கு மக்கள் கொடுக்கும் விலையோ என்ற எண்ணம் வலுப்படுகிறது.

இந்தியாவிலும், நாம் இந்த தனி மனித வாழ்க்கையை அடைவதினால் நிறய விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், என்னளவில், ஒரு மனிதனை எப்பொழுதும், பணக்காரனாக, சமூக அந்தஸ்த்து பெற்றவானாக நாம் (பெற்றோர்) மனது வைத்தால் முடியும். ஆனால், அவனது ஆன்மீகத் தேடலில் அந்த அளவுக்கு மேலைநாடுகளில் வளர்த்தால் முடியுமா என்பது எங்கள் இருவரின் கேள்விக்குறியே.

சரி. அதுதான், இந்த புற, அக வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் விலை. இதை எங்கிருந்தாலும் நாம் கொடுத்தேயாகவேண்டும். அதனால் எது வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டால் பின் கவலையில்லை. ஆதலால் எங்களது பிள்ளைகட்கு, சமூக வாழ்க்கைமுறையைவிட அவனது/அவளது தனிப்பட்ட வாழ்க்கைமுறையே (அதாவது, for his values in life, he has to take incharge, not the society) நல்லது என் நாங்கள் இருவரும் உறுதியாக நம்புவதாலும்தான், சீக்கிரம் இந்தியா போய்விடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்




(இதை பதிப்பிக்க அனுமதித்த தோழிக்கு நன்றி)

May 2, 2006

வாழத்தானே வாழ்க்கை....

ஊர் சுத்துறது, விளையாடுறது, கதை பேசுறதுன்னு எல்லா வேலையும் முடிச்சிட்டு ஒரு குளியலையும் போட்டுட்டு மணி எட்டே முக்கால் ஆச்சா, ஆச்சான்னு (இது தேவதைகளோட நேரம்!!!) கடிகாரத்தோட கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டு மெஸ்ஸுக்கு போறதுக்காக ரூமை விட்டு வெளிய வரும்போது, போன் வரும். என்ன ஜெண்டில்மேன் (என்னையும் ஜென்டில்மேன் ஆக்குனதுக்கு நன்றி ஜென்டில்மேன்) என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. சாப்பாடு ஆச்சா..

கேக்குறவருக்கு புயல் பூகம்பம் வந்தாலும் எட்டே முக்காலுக்கு மேல தான் இவனுக (இதுலயும் கோஷ்டி) சாப்ட போவானுங்கன்னு தெரியும். தெரிஞ்சிக்கிட்டே நக்கலா சிரிச்சிக்கிட்டே (அந்த சிரிப்பு) கேப்பாரு. இந்த கேள்வியோட அர்த்தம் எங்க சாப்ட போகலாம். எங்க சாப்ட போகலாம்ன்றத விட இப்ப பரோட்டா பிளாசா போலாமன்றது தான் இதுக்கு அர்த்தம் (முடிவு பண்ணிட்டு கேக்குற ஆட்களை...). ஓட்டை யமாகாவை (Oh.. my love!!) கெளப்பிகிட்டு அவரு இடத்துப்பக்கமா போனம்னா, யா!!!! ன்னுட்டு வருவாரு. அப்டியே நியூ பெல் ரோட்ல இறங்கி வண்டியோட இஞ்சினை முழு ஸ்பீடுல சுத்த விடுறதுக்குள்ள(பின்னாடி இருக்கறவர் அலர்றது வண்டியோட சத்தத்தில அவருக்கே கேக்காது) ராமையா காலேஜ் வந்திரும். அப்புறம் சந்து பொந்துன்னு புகுந்து சஞ்சய் நகரை பிடிச்சா அங்க இருக்கற ஒரு ரோட்டுக் கடையோட பேரு தான் பரோட்டா பிளாசா. கடை தான் ரோட்டுக் கடையே தவிர பரோட்டா( நார்த் இந்தியன்- பஞ்சாபி) நல்லாருக்கும். தொட்டுக்கறதுக்கு தயிர் மட்டும் தான். ஆனா சூப்பரா இருக்கும். ருசியோட சேத்து விலையும் அதிகம் தான். ஒரு ஆறு மாசம் வாரத்துக்கு ரெண்டு மூணு நாளுன்னு நினைச்சப்பல்லாம் போய் இந்த மாதிரி தின்னுக்கிட்டு இருந்தோம். இது போக வாரத்தில (கோட்டா) ஒரு நாள் வாழ்க்கை வாழ்வதற்கேன்னு MG ரோடு, சபீனா பிளாசான்னு பொறுக்க முடிஞ்சது. அந்த நண்பர் டாட்டா காமிச்சிட்டு போனதுக்கப்புறம்.....

அடுத்து இன்னொரு குரூப் சேந்துச்சி. சந்தோசத்தை கொண்டாடுறதை பாத்திருப்பீங்க, சோகத்தை சந்தோசமா கொண்டாடுனதை பாத்திருக்கீங்களா. இந்த குரூப் எல்லாம்(தறுதலைங்க) இந்த வகை. வாழ்க்கையோட ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கொண்டாட்டம்னு, ஒவ்வொரு நாளும் கொண்டாடுறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருந்திச்சி. காரணம் எதுவும் கிடைக்கலன்னா அதே ஒரு காரணமா சொல்லிக்கிட்டு அதுக்கும் ஒரு பார்ட்டி. சுத்தி இருக்கறவனுங்க சாபமா விட்டாலும் யாரும் திருந்தக் கிடையாது.

டீக்கடையில உக்காந்துக்கிட்டு, டீக்குடிக்க பிடிக்கலை எனக்கு ஐஸ்கிரீம் தான் வேணும்னு யாராவது நின்னா எதுவும் சொல்ல முடியாது. நேரா ஐஸ்கிரீம் பார்லர் தான். நாங்க இருந்த இடத்தில இருந்து ரெண்டு கிமீ ல மல்லேஸ்வரம் சர்க்கிள்ல புதுசா ஓவன்ஸ் னு ஒன்னு திறந்திருந்தாங்க. ஒரு ஐஸ்கிரீமுக்கு மூணு அல்லது நாலு ஸ்கூப் போட்டு டிரெஸ்ஸிங் பண்ணி தருவாங்க. நல்லா இருக்கும். குரூப்ல இருந்ததெல்லாம் அந்த மாதிரி ஐஸ்கிரீம் ரெண்டு சாப்டுட்டு இன்னொன்னு ஆர்டர் பண்ணலாமான்னு கேக்கிற ஆட்கள். அதனால, போரடிக்கறப்பெல்லாம் போய் பாத்துட்டு வர்ற எடமா ஓவன்ஸ் மாறி போச்சி. ஒரு வாரம் அந்த பக்கம் போகலைன்னா ஏதோ கொலைக்குத்தம் பண்ண மாதிரி பேச ஆரம்பிச்சிருவாங்க.

இது ஒரு வகைன்னா,உப்பும் இல்லாம உறைப்பும் இல்லாம மெஸ்ல சாப்டு சாப்டு நாக்கு மரத்துப் போச்சின்னு ஏதாவது காரணத்தை கண்டு பிடிச்சிட்டு, பரோட்டா சாப்டுறதுக்காக அப்பப்ப மல்லு(VK) மெஸ்ஸை(யஷ்வந்த்புரா ரெயில்வே ஸ்டேசன் எதிர்க்க) தனியாவோ இல்லை கூட்டமாவோ எட்டிப் பாக்குறது உண்டு. அப்புறம் சோப்பு வாங்கணும், ஷாம்பு வாங்கணுன்னு ஒரு காரணத்தை கண்டு பிடிச்சிக்கிட்டு பத்து ரூவா சோப்பு வாங்க நாலு பேரு போயி வந்தது வந்துட்டோம்னு அப்டியே கோபிகா பக்கமா போய், பட்டன் இட்லியும் மசால் இட்லியும் கட்டி முடிச்சுட்டு என்ன இருந்தாலும் மெஸ் மாதிரி வராதுன்னு கதை பேசிக்கிட்டே ரெண்டு கிமீ நடந்துகிட்டே வர்ற வழியில இருக்கறதெல்லாம் பொறுக்கி தின்னுக்கிட்டே வந்ததும் உண்டு. இதெல்லாம் ரெகுலரா நடக்கும். இதுல அப்பப்ப யாருக்காவது சாமி வந்திருச்சின்னா அப்ப நடக்கிறது தான் கூத்தே!!!

அந்த வகையில....
ஒரு சாயங்காலம் ஒருத்தன் வந்து எனக்கு வெளிய போய் குல்கந்து சாப்டணும்னு வந்து நிக்கிறான். கையில இருந்தது சில சின்ன காந்திகளும் சில காசுகளும் தான். சரி வா போகலாம்னு போனா அங்க போய்ட்டு வெறும் குல்கந்து டேஸ்டா இருக்காது, அதோட ஐஸ்கிரீமும் டிரை ஃப்ரூட்சும் போட்டு சாப்டாதான் நல்லா இருக்கும்ற வக்கணை வேற. அப்புறம் பாக்கெட்ல இருந்த எல்லா சில்லறையையும் கூட்டிப் பாத்து ஒரெ ஒரு கால் ரூவாய மட்டும் மீதி வைச்சிட்டு மீதி எல்லாத்தையும் கல்லாவுல கொட்டுனோம். கடைக்காரன் ஏற இறங்கப் பாத்துட்டு குல்கந்து ரெடி பண்ணி குடுத்தான். நல்ல வேலை அன்னைக்கு வேற யாரும் என்னைய விட்டுட்டுப் போய்ட்டு வந்துட்டாங்கன்னு எப்பயும் குடுக்கற இம்சைய குடுக்கலை. சாதரணமா யாரையாவது விட்டுட்டு போனது தெரிஞ்சி போச்சின்னா அதுக்காக மறுபடியும் போயாகணும். ஒரு சமாதானமும் எடுபடாது.

அப்புறம் நிறைய ஸ்பெசல் காரணங்கள் கண்டு பிடிச்சதுக்கப்புறம் எல்லை விரிவடைஞ்சி சுத்தி இருக்கற இடங்கள்ல எல்லாம் போய் கொட்டித்தீர்த்தோம்.

சந்தோசமா சுத்திகிட்டு இருந்தப்ப ஒருநா மக்க பொட்டியக் கட்டி போய்த்தொலைன்னு நாடு கடத்தி விட்டுட்டாங்க. வந்த புதுசுல ஒன்னும் புரியாம யாரும் தெரியாம ஒரு மாதிரியா தான் இருந்தது. இப்ப இங்கயும் அதே மாதிரி ஒரு கும்பல்.

பனி சூப்பரா இருக்கு ஸ்கீயிங் போகலாம்.

வாழ்க்கை ரொம்ப டிரையா இருக்கு Bowling போகலாம்.

நாம இருக்கற எடம் tidal wavesக்கு பேமஸ். பக்கத்தில இருக்கற ஓடையிலயும் tidals இருக்கும். வா போய் பாக்கலாம்.

ஸ்பிரிங் ஆரம்பிச்சிருச்சி எங்கயாவது வெளிய போகலாம்.
ஒரு Barbeque மாதிரின்னா நல்லா இருக்கும்

சைக்கிள் இருந்தா இந்த நேரத்தில ஊர் சுத்துறதுக்கு நல்லா இருக்கும். இந்த வாரம் சைக்கிள் ஏலம் நடக்குது நீயும் வர்றியா....

இந்த பதிவை சைக்கிள் ஏலத்தில சைக்கிள் வாங்குனதுல ஆரம்பிச்சி barbeque ல போய் தின்னுட்டு நடக்க முடியாம நடந்து வந்ததில முடிக்கணும்னு நினைச்சேன். எங்கங்கயோ போயிருச்சி...

Apr 20, 2006

டைனிங் டேபிள் வாழ்க்கை

சிலரை வயிறெரிய வைக்கிறதுக்காக மட்டும் தான் இந்த பதிவு. மத்த படி இதுல விசேசம் ஒன்னுமில்லை.

போன வாரக் கடைசியில ஈஸ்டருக்காக வரிசையா நாலு நாள் லீவு. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு கடைசியில பக்கத்தில இருக்கிற நண்பரை போய் தொல்லை பண்ணலாம்ன்ற ஐடியா வந்துச்சி. ஆனா அவரு சில மாசங்களா இருக்கிற வேலைப் பளுவினால வனவாசம் போயி ஆளு இருக்காரா இல்லையான்னே தெரியாத அளவுக்கு ஆகிட்டாரு. இருக்கீங்களா இல்லையான்னு ஒரு மெயில் அனுப்புனதுக்கு வந்து சேருன்னு பதில் வந்துச்சி. சாதரணமா யாரு வீட்டுக்காவது போகணுன்னா யோசிக்கற நானு, இங்க போலாம்ணு முடிவு பண்ற அளவுக்கு வந்ததுக்கு ஒரே காரணம் நண்பரோட வீட்டுக்காரம்மாவும் ஒரு நல்ல தோழின்றதால மட்டும் தான்.

கார் இல்லாத கனடா வாழ்க்கை எப்டிப்பட்டதுன்னு இந்த பயணத்தில தெரிஞ்சிக்க முடிஞ்சது. எனக்கும் அவருக்குமான ஒரு 200-250கிமீ தூரத்தை கடக்கிறதுக்கு ஒரு 5 மணி நேரம்(கார் இருந்தா ரெண்டரை மணி நேரம்) ஆச்சி. ஏன்னா பஸ் வசதி இங்க அந்தளவுக்கு பேமஸ். போய் சேர முடிஞ்சதே பெரிய விசயம். நம்ம சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில போற மாதிரி ரோடு கடலை ஒட்டியே இருக்கு. என்ன இங்க கடல் கொஞ்ச நேரம் காடு கொஞ்ச நேரம்னு பாதை பாக்குறதுக்கு அழகா இருந்தது.

நேரா அவங்க வேலை பாக்கிற ஆபிஸுக்கே போயிட்டேன். அங்க போய் வழிப்பயணத்தில சாப்பிடுறதுக்காக வைச்சிருந்த சப்பாத்திய (tortillos) ஆளுக்கு கொஞ்சமா காலி பண்ணுனோம். அப்புறமா வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சூப்பர்ஸ்டோர் போயி நிறைய திங்கிறதுக்கு அள்ளி போட்டுட்டு கதை பேசிக்கிட்டே அசைஞ்சாடிக்கிட்டு வீட்டுக்கு போனோம். சொந்தக் கதை, ஊர்க்கதை, உலகக்கதை, வலைப்பூக் கதைன்னு பேச வேண்டிய விசயங்கள் நிறையவே இருந்தது

ஒரு 10 நிமிசம் எனக்கு ரூம் ஒதுக்கி வைச்சிட்டு டைனிங் டேபிளுக்கு வந்துட்டோம். வந்த உடனே "this is equal oppurtunity kitchen" அப்டின்னாங்க. எனக்கு பயங்கர சந்தோசமாயிருச்சி. கொறிக்கறதுக்கு வைச்சிருந்ததெல்லாம் இழுத்து போட்டுட்டு என்ன சமையல் பண்ணலாம்னு யோசிச்சோம். எனக்கு சமையல் தெரியாதுன்றதால போனா போகுதுன்னு என்னைய அப்பெண்டிஸா! (வடிவேலு பாணியில) சேத்துக்கிட்டு காய் கறி வெட்றது மட்டும் பாத்துக்க சொன்னாங்க. அப்டியே சப்பாத்தி மாஸ்டர் வேலையையும் பாத்துக்க சொன்னாங்க.

எனக்கு சமையல் பண்ண தெரியாமலும், அவங்களுக்கு நேரம் இல்லாமலும் காய்ஞ்சி போயிருந்ததால கடைசியில இது ஒரு பெரிய சாப்பாட்டு விழாவா மாறி போயிருச்சி. நாலு நாளும் உக்காந்து கதை பேசிக்கிட்டே(பேச நினைச்சதில கால் வாசி கூட பேசலை) சமையல் பண்ணி சாப்டுக்கிட்டே இருந்ததால் எப்ப எதை சாப்டோம்ன்றது கூட மறந்து போச்சி. விதவிதமா சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சப்பாத்தி, பரோட்டா, இதுகளுக்கு ஏத்த மாதிரி சைட் டிஸ், கேசரி, உப்புமா, சூப், பால்கோவா, பாயாசம், ஐஸ்கிரீம்னு அந்த பட்டியல் நீளமாயிருச்சி. ஒரு குதியாட்டத்தோட பண்ணுனதாலயோ என்னவோ, பண்ணுன எல்லாமே அற்புதமா இருந்தது. இதுல நான் உருட்டிக்குடுத்த சப்பாத்தியும் அடங்கும்!!!!!!. எவ்வளவு தான் சமைச்சாலும் பாதி நேரம் சாப்பாடு பத்தாம தான் போச்சி!!!!!. போட்டி போட்டு சாப்டதால வந்த வினை. தின்னது செரிக்கறதுக்காக பீச்சாங்கரைப் பக்கம் சின்னதா வாக் போய் பக்கத்தில இருக்கற Tim Hortansல போய் ஒரு பெரிய கப்ல சாக்லேட் டிரிங் குடிச்சிட்டு தள்ளாட்டமா வர வேண்டியதாயிருச்சி.

இது போக "The Bridge on the River Kwai"ன்னு ஒரு அற்புதமான படத்தை பாத்தோம்.ஜெயா டிவி (அது மட்டும் தான் அங்க கிடைக்குது) அது ஒரு பக்கத்தில ஓடிக்கிட்டே இருந்தது. முடிச்சே ஆக வேண்டிய சில வேலைங்க அது பாட்டுக்கு ஒரு மூலையில தூக்கம் போட நாலு நாள் போனது தெரியாம போயிருச்சி. வெளியில குளிர் காத்து அடிச்சதும் தெரியாது மழை பேஞ்சதும் தெரியாது.

எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறமா, ரொம்ப நாளைக்கு நினைப்புல இருக்கற மாதிரியான ஒரு நிகழ்வு இது. கிளம்பி வர்றதுக்கு மனசில்ல. என்ன பண்றது கிளம்பித்தான ஆக வேண்டியதிருக்கு.

நன்றி நண்பர்களே.