Jan 28, 2006

எழுத்தாளர் முனியாண்டி......

சும்மா இருந்த முனியாண்டிய எழுத்தாளர் ஆக்கியே தீர்றதுன்னு ஒரு குரூப் கங்கணம் கட்டிக்கிட்டு சுத்திச்சு. இவங்க பண்ண இம்சையில முனியாண்டி கனவுல எல்லாம் தலயண, தலயணயா புத்தகம் எழுதிட்டு மாலையும்(யாரு போட்டதுன்னு கேக்காதீங்க), செருப்படியும் மாறி மாறி வாங்கிட்டு இருந்தான். அந்த இம்சையோட ஆரம்பம் இப்படித்தான் நடந்தது.


இந்த பொங்கல் இதழுக்கு ஏதாவது எழுதிக் கொடுத்தே ஆகனும் அப்டின்னு "தலை" (மன்ற தலைவர்) உத்தரவு போட்டுட்டாரு. அவருக்கு என்னாச்சுன்னு தெரியலை. சம்பந்தமில்லாம, சம்பந்தமில்லாத ஆளுக கிட்ட சம்பந்தமில்லாத வேலைய சொல்றாரு. நானும் பரவாயில்ல, இதென்ன பெரிய விசயம் ஒரு கை பாத்துறலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

ஆனா எழுதுறதுன்னா என்னன்னே தெரியாது. என்ன பண்றதுன்னு யோசிக்கவே தேவையில்லாம பெருமாள் ஞாபகத்துக்கு வந்தாரு. ஆனாலும் ஒரு சின்ன பயம். ஏன்னா குரூப்ல அவரை பாத்தாலே சின்னதா ஒரு பயம். அவரு சாதரணமா என்ன பண்ணுவாருன்றதுக்கு ஒரு சின்ன உதாரணம். ஒரு மூலையில நாய் தூங்கிட்டு இருந்துச்சுன்னா, ஆகா இந்த நாய்க்கு எவ்வளவு அருமையான முடி (இவர் இப்டி சொன்னதால தான் ஏரியால இருக்கற நாய்க்கெல்லாம் சொரி வந்து கேவலமா போயிடுச்ன்னு யாராவது நினைச்சா நான் பொறுப்பில்லை). கொஞ்சம் பிஸ்கட்டும் வொயினும் கலந்த மாதிரி நிறம். முடின்னா இப்டி இல்ல இருக்கனும். (மேற்படி பார்ட்டி சொட்டைன்றது வேற விசயம்) அதுக்கு வால் கூட இருக்கு(!) அப்டினு ஆரம்பிப்பாரு. அதுக்கு மேல என்ன பேசுவாருன்னு எனக்கு தெரியாது (அதுக்கு மேல அங்க நிக்க எனக்கு என்ன பைத்தியமா). எங்க எப்ப எதைப்பாத்தாலும் ஆகா! ஓகோன்னு ஆரம்பிச்சிருவாரு. இன்னும் சொல்லனும்னா டீக்கடையில சுடுதண்ணிய (அதாங்க தண்ணியில லைட்டா பால் பவுடர கலக்கி சூடு பண்ணிக் குடுப்பாங்கல்ல) குடிச்சுப்புட்டு ஆகா இந்த மாதிரி டேஸ்ட்டா இதுவரைக்கும் நான் குடிச்சதே இல்லே. வாழ்க்கையில நான் பொறந்ததோட அர்த்தத்தை இன்னைக்குத்தான் முழுமையா அனுபவிக்க முடிஞ்சிருக்கு அப்டின்னாரு. இப்டி பல வால்யூமுக்கு அவரோட அதிசயங்களை அடுக்கிக்கிட்டே போகலாம். என்ன பண்றது இப்டி ஒரு ஆளு கிடைக்க கொடுத்துல்ல வச்சிருக்கனும்.

சரி பிரச்சனைக்கு வருவோம். இந்த விசயத்துல அவரோட கருத்து எதுக்குன்னு தோணும். அதுக்கு ஒரு காரணம் இருக்கு. இப்ப கொஞ்ச நாளா, வலைப்பூ, கதை, கவிதை அப்டின்னு பினாத்தல் கொஞ்சம் அதிகம். அதனால என்ன சொல்றாருன்னு பாக்கலாம்ன்னு போய் அவர் முன்னாடி நின்னேன். நின்ன நேரம் ரொம்ப நல்ல நேரம். ஹை என்ட் பிசியில உக்காந்து cric—info கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு. இது சூப்பரான shot ஆ இருக்கும் போல. ஆனாலும் இவன் போன பாலை ஆடிருக்கணும் அப்டின்ற ரேஞ்சுல மானிட்டர் கூட பேசிக்கிட்டு இருந்தாரு. பதினோரு மடையனுங்க விளையாட, பதினோறாயிரம் மடையனுங்க அதை வேளை வெட்டி இல்லாம பாக்குறாங்கன்னு சொன்னவன், பதினோரு கோடி (ரொம்ப கம்மில்ல!) மடையனுங்க அதைப் பத்தி பேசியே சந்தோசப்படுறானுங்கன்னு சொல்ல மறந்துட்டான். அவனுக்கு என்ன பிரச்சனையோ. ஒரு வேளை அவனும் இந்த கும்பல்ல ஒருத்தனா இருக்கலாம்.

சரி இப்ப அதுவா பிரச்சனை. இந்த மேட்டரை இப்டி ஒருத்தன் சொல்லிஇருக்கான்னு நம்ம ஆளுகிட்ட சொன்னோம்னா சேலை கட்ன ஊர்ல(பாத்து ரொம்ப நாளாச்சி) வேட்டி கட்னவன் வெங்காயம்னு (இதுக்கு என்ன அர்த்தம்னு ஏங்கிட்ட கேக்காதீங்க), கிரிக்கெட் பத்தி தெரியாதவன மடையனாக்கிருவாரு. இப்டி எல்லாம் வாங்கிக்கட்டிக்காம கருமமே கண்ணாயிருன்னு, போன விசயத்தை சொன்னேன். என்னாச்சு ஏதாச்சுனு தெரியலை. சேர்ல உக்காந்து மானிட்டர் கூட பேசிக்கிட்டு இருந்தவரு அப்டியே ஜம்ப் பண்ணி கதவு மேல சாய்ஞ்சிக்கிட்டு (இடையில நான் எஸ்கேப் ஆயிரக் கூடாதில்ல) தரையில சவுரியமா உக்காந்தாரு. ஆளை அந்த போஸ்ல பாத்தா மைக் கிடைச்ச அரசியல்வாதி மாதிரி தெரிஞ்சாரு. செத்தேன் இன்னைக்கு எத்தனை மணி நேரமோ அப்டினு வாழ்க்கையை நொந்து போய்ட்டு மறுபடியும் விசயத்தை ஞாபகப் படுத்தினேன். இது இன்னொரு பெரிய பிரச்சனை இவருகிட்ட. ஏதாவது பேசும்போது திடீர்னு எதையோ சீரியசா நினைக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிருவாரு. இதுல விட்டத்தை வெறிக்கறது வேற. சரி தூங்குற மாதிரி நடிக்கறவனை எழுப்ப முடியாதுன்னுட்டு வேலையப் பாக்க போயிருவோம். இப்ப வேற வழியில்ல. மறுபடியும் அவரோட ஞான நிலையைக் கலைக்க வேண்டியதாயிருச்சி. உப்பைத்தின்னவன் தண்ணி குடிப்பான்னு சொல்றமாதிரி தவத்தை கலைச்ச பலனை கொஞ்ச நேரத்தில அனுபவிக்க வேண்டியதாயிருச்சி. அப்டியே நம்ம சாமியார்கள்லாம் ஆரம்பிகிறமாதிரி மெதுவா மெஸ்மரைசிங் வாய்ஸ்ல ஆரம்பிச்சாரு. அவரு இந்த லெவல்ல சப்ஜெக்டு பேசுனாருன்னா எதுவுமே புரியாது. சரி நமக்குத் தான் தலையில மேட்டர் எதுவும் இல்லையே அப்புறம் எப்டி புரியும்னு டீல்ல விட்டுருவேன். ஆனா இன்னைக்கு இலக்கியம் அது இதுன்னு ஆரம்பிச்சாரு. கொத்து மேல கொத்தா விழுந்துச்சி. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரிஞ்சுச்சு. மேற்படி பார்ட்டி கிட்ட எந்த காரணம் கொண்டும் தலையை நீட்டக் கூடாதுன்னு. நல்ல வேளை அடுத்த ரூம்ல இருந்து எதோ வேணும்னு ஒருத்தன் வந்தான். பொழச்சம்டா சாமினு அவன மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டேன். அது அவனோட விதி.

சரி அய்யனாரைப் போய் பார்க்கலாம்னு நினச்சேன். ஏன்னா அவருதான் இந்த இதழுக்கு ஆசிரியர் வேற. போனா எதோ தேறும்னு தோணுச்சி. ஆனாலும் மனசு (அது எங்கன்னு தான் தெரியல,யாராவது இல்லாதவங்க சுட்டுருப்பாங்களாக்கும். நான் பாவங்க திருப்பிக் கொடுத்துருன்ங்க) கேக்கலை. மனசை எலும்பாக்கிட்டு நாமளா ஏதாவது செய்யலாம்னு உக்காந்தேன்.

இந்த இடத்தில இன்னொரு விசயத்தையும் சொல்லனும். இந்த பொங்கலுக்கு தெரிஞ்சவுங்களுக்கு ஒரு வாழ்த்து அனுப்புனேன்.(எங்க நமக்கு ரொம்ப(!)பிடிச்சவங்களுக்கு அனுப்புனா செருப்படி தான் கிடைக்கும் போல)அந்த வாழ்த்தோட சுருக்கத்த சொல்லிட்டு சொன்னாத்தான் புரியும். அதாவது, எல்லாருக்குக் பொங்கல் வாழ்த்து. இந்த நாள்ல நமக்கு படியளக்கிற விவசாயிங்களுக்கு(என்ன இருந்தாலும் ஒரே இனமாச்சே விட்டுக் குடுக்க மனசு வருமா) நன்றிய சொல்லிருவோம். அவங்க நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்குவோம். அப்டின்னு இங்கிலிபிஸ்ல அடிச்சு அனுப்பினேன்.இதை ஒருத்தரு மொழி மாத்தி தன்னோட வலைப்பூவுல எனக்கு first authorship குடுத்து ஏத்திட்டாரு. (என்னோட வாழ்த்தும் எப்டியோ இன்டெர்னெட் ஏறிடுச்சி அப்டியே போய் சேர வேண்டியவகளுக்கும் போய் சேந்தா சந்தோசம் தான்). இதெல்லாம் பெரிய விசயமில்லை. இந்த வாழ்த்துக்கு ஒருத்தன் பதில் எழுதுறான், நீ என்ன அரசியல்வாதியகப்போரீயா அப்டின்னு. (எனக்கே கொஞ்சம் பயமாப் போச்சு எங்க பக்கத்தில இருக்கறவங்க வாடை நம்மளையும் தாக்கிருச்சோன்னு). இப்ப சொல்ல வர்றது என்னன்னா இந்த மாதிரிபிரச்சனை மறுபடியும் வந்துரக்கூடாதுன்றதுதான்.

எழுதுறதுன்னு முடிவாயிருச்சு. என்ன எழுதுறது. கதையா, கவிதையா, கட்டுரையா, நாடகமா. இது ஒரு குழப்பம். கவிதை எழுதலாம்னா, காதலிச்சவனுக்குதான் கவிதை வரும்னு தினத்தந்திக்காரங்க சொல்றாங்க. அதுக்கு எனக்கு இனிமேல கொடுப்பினை இருக்கான்னு மாரியம்மா, காளியம்மாகிட்ட யாராவது கேட்டு சொல்லுங்க.(இதுக்குப் போய் மாரியம்மா, காளியம்மாவா போய் புடிச்ச பொன்னுகிட்ட போய் கேளுன்னு சொல்றது கேட்குது). அதோட கவிதையில சொல்ல வர்றதை தெளிவா, அழகா சொல்லனுமாம். என்னைக்கு ராயல் குரூப்ல (இது பைசா குடுத்து வாங்குன பட்டம் கிடையாது. குரூப் மக்களோட இம்சை தாங்காம நாங்களா ஏத்துக்கிட்ட பட்டம்) சேர்ந்தேனோ அன்னையிலேர்ந்தெ ரொம்ப(?) தெளிவா பேச ஆரம்பிச்சுட்டேன். அதனால கவிதை நமக்கு சரிப்பட்டு வராது.

சரி கதை எழுதலாம்ல. எழுதலாந்தான். ஆனா மாமரங்களும் தென்னை மரங்களும் தங்கள் கிளைகளை காற்றில் காய விட்டுக் கொண்ட்டிருந்தனனு வெண்ணை போடுறது சுட்டுப் போட்டாலும் வராது. நல்லா தெரிஞ்சவுங்க எதிரே வந்தாலே இவுங்ககிட்ட என்ன பேசுறதுன்னு எப்டியோ எஸ்கேப் ஆகுற ஆளு நானு. யாரையாவது பாத்து பேசுறதுன்னா....(வேப்பங்காய் பரவாயில்லைன்னு தோணும்). அப்ப கொஞ்சம் தெரிஞ்ச ஆளுங்களைப் பத்தி யோசிச்சுப் பாருங்க. இப்டி மிஸ் பண்ணுன, பண்ணிக்கிட்டிருகிற ஆளுங்க (அதுவும் பொண்னுங்க) எண்ணிக்கை கொஞ்சம் அதிகம் தான்.எல்லாம் லட்சுமி(B.Sc கிளாஸ்மேட்) கொடுத்த சாபம் தான். B.Scல யார்ட்டயும் சரியா மூஞ்சி கொடுத்து பேசலன்னு(பொண்ணுங்ககிட்ட) உன்னோட திமிர்த்தனத்துக்கு(அவங்க புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தான்) பின்னாடி அனுபவிப்ப. நீ நெனைக்கிறப்ப தலைகீழா நின்னாலும் யாரும் ஒங்கிட்ட பேசமாட்டாங்கன்னு காலேஜ் கடைசி நாள்ல சாபம் கொடுத்துட்டா. ஆகா, நாம ரொம்ப மதிக்கிற பொண்னு இப்டி சாபம் கொடுத்துட்டாளேன்னு அப்புறமா மூணு வருச கதையெ மூணு மணி நேரத்தில ( இப்பவும் என்னால நம்ப முடியாத என்னோட ரிகார்டு) பேசி முடிச்சு சாப விமோசனம் வாங்க வேண்டியதாயிருச்சி. ஆனாலும் முழு மனசோட கொடுக்கலை போல இருக்கு. இன்னும் அனுபவிக்க வேண்டியதிருக்கு. ஆகக் கடைசியில சொல்ல வர்றது என்னன்னா வெண்ணை போடுறதுக்கு வழியில்லாததால கதை எழுதுறதுக்கு நோ சான்ஸ்.

அதனால என்ன கட்டுரை எழுதல்லாம்ல. ரொம்பப் பிடிச்ச விசயந்தான். பஸ் வராத மீனாட்சிபுரத்துல (அதாங்க நம்ம ஊரு) பக்கத்து வீட்டு தனுக்கோடித் தாத்தா வாங்குன தினகரன், தராசு, நக்கீரன் இது வழியா உலகத்தைப் பாக்க ஆரம்பிச்சவன் நானு. அதனால கட்டுரை எழுதுறது கொஞ்சம் ஈசியாத் தான் தோணுது. ஒரே பிரச்சனை என்னன்னா, பொங்கல் வாழ்த்துக்கே அரசியல் வாதியாகப்போறியான்னு கேக்குறவனுங்க நட்பு வட்டத்தில இருக்கும்போது உணர்ச்சி வேகத்தில எதாவது எழுதித் தொலைச்சா, எதாவது கட்சிக் கார்டைக் கையில கொடுத்துருவாங்களோன்னு ஒரு சின்ன பயம்.

ஒன்னும் புடிபடலை. இன்னும் கொஞ்ச நேரம் இப்டியே உக்காந்திருந்தா மூளை(இருக்கா என்ன) காய்ஞ்சி போய்ரும் போல இருந்தது. சரி போய் சுடு தண்ணி( தேத்தண்ணி, கோப்பித்தண்ணி உடலுக்கு நல்லது இல்லையாமே) குடிச்சா சரியாப்போயிரும்னு டீக்கடை பக்கம் ஒதுங்க வேண்டியதாயிருச்சி. அய்யனாரு அங்க இருந்தாரு. கொண்ட கொள்கையில சரியான பிடிப்பு இல்லாததினால (ராம்கோ சிமெண்ட் உபயோகப்படுத்தியிருக்கனும்) போய் விசயத்தை சொன்னேன். அவரு ஏற எறங்க பாத்துட்டு, ஆமா நீங்க எந்த இதழுக்கு எழுதறீங்க அப்டின்னு ஒரு குண்டை எறிஞ்சாரு. பொங்கல் இதழுக்குத்தான்னு பாதி முழுங்கிட்டே சொன்னேன். அவரு ஒரு நக்கல் பார்வையை விட்டுட்டு (ஆனாலும் மக்களுக்கு இது கொஞ்சம் அதிகந்தான்), ஹலோ அது பிரிண்ட் ஆகி வந்து ரூம்ல இருக்குன்னாரு. "தலை"(கிட்டருந்து) தப்பிச்சது நாம பண்ணுன புண்ணியம்னு நினைச்சிக்கிட்டு எஸ்கேப்.

1 comment:

Thangamani said...

நடை நீங்க வழக்கமா பேசுற மாதிரி இருக்கு (அடைப்புக்குள்ள உள்ளதையும் சேர்த்து). தொடர்ந்து எழுதுங்க. ஏன் தமிழ்மணத்துல பதியல?

சரி இந்தபொங்கலுக்கு எழுதினா அடுத்த பொங்கல் வராமலா போய்டும்?
டும்
டும்ம்
டும்ம்ம்ம்!!!