Jan 26, 2006

எல்லாம் வல்ல முனீஸ்வரன்......

எல்லாம் வல்ல முனீஸ்வரன் என்னையும் காப்பாத்தட்டும்....


ரொம்ப நாளைக்கு அப்புறம், ரொம்ப யோசனை பண்ணி வலைப்பூ ஆரம்பிச்சிருக்க, இப்டி 'உ' போடாம, சாமி கும்பிடாம பண்ணினா தெய்வ குத்தம் வந்துறப் போகுதுன்னு ஒரு சிலர் வருத்தப் பட்டுகிட்டாங்க.. ஏற்கனவே நீ இந்த மாதிரி ரொம்ப தெய்வ குத்தம் பண்ணுனதால தான் சீ பட்டு லோல் பட்டு இப்டி தனியா போய் அல்லாடிக்கிட்டு இருக்கன்னு கொஞ்சம் பயமுறுத்தல் வேற. எங்கப்பா வேற ஒனக்கு சனி உச்சியில நின்னு ஆடுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.

மத்தவங்க மனசை நோகடிக்கிறதுல முனியாண்டிக்கு எப்பவுமே சம்மதம் கிடையாது.. அதனால நடந்த, நடக்கிற, நடக்கபோற தெய்வ குத்தத்தை எல்லாம் டீல்ல விட்டுறதுக்காக அண்ணன் முனீஸ்வரன வேண்டிக்கிறேன்.



இந்த படம் மறக்க முடியாத ஒரு தருணத்தில எடுத்தது. ரொம்ப நாளா புல்லட் வாங்கவா, யெஸ்டி வாங்கவான்னு ரொம்ப யோசனை பண்ணி(யோசனை பண்ணிக்கிட்டு இருக்கிறதே ஒனக்கு பொழப்பா போச்சின்னு மத்தவங்க சத்தம் போட்டதுக்கப்புறம்) ஒரு ஓட்டை யமாகா RX 100 வாங்குனேன். ஒழுங்கா ஓடுமா, ஓடாதன்னு தெரியாத, ஹார்ன் இல்லாத அந்த வண்டியில, two wheeler ன்னாலே அலறி அடிச்சு ஓடுற ஒருத்தரை இழுத்துப் போட்டுகிட்டு பெங்களூர்லருந்து, ஒகேனக்கலுக்கு பறந்து போய்ட்டு (ஓட்டை வண்டின்னாலும் விட்டுக் குடுக்க முடியுமா) வரும்போது எடுத்தது தான் இந்தப்படம்.

ஸ்பீடாமீட்டர்ல முள்ளு எவ்வளவு தூரம் போகும்னு ஒரு ஒருத்தன், முள்ளு 40 தொட்டாலே அலறுற ஒருத்தன், புத்தம் புது வண்டியோட ஒருத்தன், அப்புறம் எங்கேயாவது வண்டி நின்னுறப் போகுதேன்ற பயத்துலயும் வண்டி எவ்வளவு ஸ்பீடா போகும்னு நானு, அப்டின்னு ஒரு 7 பேரு (4 வண்டி) போனோம். போற வழியில ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் (தமிழ்ப் படத்தில வர்ற ஹீரோக்கள், வில்லன் எங்க போனாலும் முன்னாடி வர்றது மாதிரி) நம்ம அண்ணன் காட்சி கொடுத்துக்கிட்டு பயமுறுத்திக்கிட்டு இருந்தாரு. ஒரு எடத்துல எளனி வித்துக்கிட்டு இருக்கறதை பாத்த மக்க அங்கயே வண்டிய நிப்பாட்ட்டிருச்சி.





சைடுல சுப்ரமணிய சிவா (எங்கயோ கேள்வி பட்ட பேரா இருக்கா ?) மணி மண்டபம் அப்டின்னு மங்கிப்போன ஒரு தோரணவாயில பாத்துட்டு மணி மண்டபம், மணி மண்டபம்னு சொல்றாங்களே எப்டி தான் இருக்கும்னு, பாக்குறதுக்காக, மக்களை கேட்டு பாத்தேன் (நீங்களும் எப்டி இருக்கும்னு மேல இருக்கிற போட்டால பாத்துக்கோங்க). நாங்க நின்ன அந்த எடத்தில இருந்து ஒரு 100மீ தள்ளி இருந்ததால மத்த மக்க முதல்ல வர முடியாதுன்னிருச்சி. அப்புறம் எப்டியோ எல்லாம் சேந்து போனோம். எதுக்கு அத்துவான காட்ல மணி மண்டபம்னு யாரையாவது கேக்கலாம்னு நினைச்ச்சி அங்க களை எடுத்துக்கிட்டு இருந்த ஒரு அம்மாகிட்ட கேட்டோம். அவங்க அதைப் பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. பக்கத்துல பாரத மாதா கோயில் ஒண்ணு அரகுறையா நிக்குது. சரி நம்மளை மாதிரி நிறைய பேரு இருக்காங்கன்னு சந்தோசமா திரும்பலாம்னு நினைச்சோம். பாத்தா மணிமண்டபம் சைடுல பத்தாப்பு படிக்கிற பையன், கருமமே கண்ணா படிச்சிக்கிட்டு இருந்தான். ஞாபகம் வருதே, ஞாபகம் வருதேன்னு... பாடிக்கிட்டே பையன் கிட்ட வெவரம் கேட்டேன். அதெல்லாம் எதுவும் தெரியாது, இங்க யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க அதனால இங்க ஒக்காந்து படிக்கிறேன்னு சொன்னான். சரி அதுக்கு மேல அவன தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லிட்டு ( ஒகேனக்கலுக்கு லேட்டாயிரும்னு சத்தம் வர ஆரம்ம்பிச்சிருச்சி) அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டோம்.

இதுல சொல்ல மறந்தது என்னன்னா, இங்க தான் சுப்ரமணிய சிவாவை அடக்கம் பண்ணியிருக்காங்க. (மணி மண்டபம்னாலே அதானா!! தெரியலை). அவர் தன்னோட கடைசி காலத்துல கட்ட முயற்சி பண்ணது தான் அரகுறையா நிக்கிற் பாரத மாதா கோயில்.

அண்ணன் முனீஸ்வரன் எல்லாரையும் காப்பாத்துவாராக.

இந்த ஊரு நாங்க போய்ட்டு வந்ததுக்கப்புறம் ரொம்ப பேமசாயிருச்சி. இந்த ஊரோட பேரு பாப்பாரப்பட்டி. வீரப்பனை சுட்டதா சொல்லப்படற இடம்.

5 comments:

சுந்தரவடிவேல் said...

//எங்கப்பா வேற ஒனக்கு சனி உச்சியில நின்னு ஆடுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.//
அப்படின்னா சீக்கிரமே கல்யாணம்னு சொல்லுங்க :)

இப்பதான் உங்க நடயப் பாக்குறேன். நல்லாருக்கு.

Thangamani said...

என்ன முனி அடிச்சுருச்சா. ஒரே கருப்பா இருக்கு.

போனோமய்யா ஒரு போக்குல. வண்டில ஏத்திக் கொல்லாம விடுறதுல்லேன்னு ஒரு ஆளும், ஸ்பீடாமீட்டரை பார்த்துக்கிட்டே இன்னொரு ஆளும். நல்லாத்தான் இருந்துச்சு.

Unknown said...

முனியப்பசாமி படம் நல்லா இருக்கு., சேமிச்சுக்கிட்டேன். இப்பதான் இங்க வந்தேன் தொடர்ந்து அடிச்சு கலக்குங்க!.

G.Ragavan said...

நல்ல தொடக்கம். இனிமே இங்க அடிக்கடி வந்து எட்டிப்பாக்கனும்.

பெங்களூருல இருந்து ஒகேனகல்லுக்கு பைக்குல போனீங்களா...நாங்க சங்கம், சிவன்னசமுத்ரம், காட்டி சுப்ரமண்யா..இந்த மாதிரி போயிருக்கோம். ஆனா இப்போ அந்த நட்பு வட்டம் பிரிஞ்சி ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஊருக்குப் போயிருச்சு.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி ராகவன். பைக்குல நான் சுத்துனது ரொம்ப கம்மி. இதுக்கு பழைய பைக் மட்டும்ன்றது காரணமில்லை. என்னோட மனநிலைக்கு தோதான ஆட்கள் கிடைக்கலைன்றதும் ஒரு காரணம். இடங்களுக்கு போய்ச் சேர்றதுன்றதை விட போறது மட்டும் தான் எனக்கு முக்கியமா பட்டுச்சி. ஏதோ தங்கமணி வந்து கடைசியில மாட்டுனாரு. ரெண்டு மூணு எடத்துக்கு இப்டி போய் கூத்தடிச்சிருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சி அதையும் முடிஞ்சா எழுதுறேன்.