Jan 29, 2006

பட்டா படி

"பட்டா படி" -ன்ற இந்த வார்த்தைகள பத்தி இங்க எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல. பட்டான்னா நிலத்துக்கு குடுக்கிற டாகுமெண்டு; படின்னா படிக்கிறது அப்டின்றது தாண்டிப் பாத்தா இந்த வார்த்தைகளோட வீச்ச யோசிச்சு பாக்குறதுக்கே மலைப்பா இருக்கு.

" சந்திரன் மேல கால வச்ச காலம்; இன்னும் கைநாட்டு போடுறது அலங்கோலம்" அப்டின்ற குத்துப்பாட்டோட பாமர மக்களோட மொழியை அங்கீகரிச்சு, இந்த வார்த்தைகள் சுத்தி வந்த தூரமும், உழுது போட்ட நிலங்களும் அதிகம். கடைக்கோடில ஆடு மேய்ச்சிக்கிட்டு இருக்கிற அலமேலுல ஆரம்பிச்சு, காலேஜ் புரொபசருங்கள தாண்டி, நான் பொறந்த மண்ணுக்கு எதாவது செய்யணும்னு நினைச்ச பலரை உள்ளடக்கி, Don't try to teach me ன்னு எதுத்து நின்ன கலெக்டரு, வாழ்க்கையில எனக்கு கிடைச்ச வெகுமதின்னு அழுத கலெக்டரு, எனக்கும் என் கட்சிக்காரனுக்கும் என்ன லாபம்னு வந்து குடைஞ்சு பாத்த மந்திரின்னு இந்த சுனாமி தாக்குன மக்களோட எண்ணிக்கை நிஜமாவே அதிகம். ரமணா ஸ்டைல்ல இல்லாட்னாலும், தோராயமா சொல்லணும்னா, 10 மாவட்டம் (மத்த மாவட்டங்கள்ல நடைமுறைப் படுத்தப் பட்டுச்சான்னு தெரியல), 25 லட்சம் மக்கள், 2.5 லட்சம் தன்னார்வலர்கள், 10,000 கலைஞர்கள்ன்னு பரந்து நின்ன ஒரு இயக்கத்தோட முதல் வார்த்தைகள் தான் இந்த "பட்டா படி".


நினைவாய், பழங்கனவாய்ன்னு எல்லாருமே (இதுல இருந்தவங்க எத்தனை பேரு இன்னும் துடிப்பா இருக்காங்கன்னு தெரியல) மறந்து போன இந்த இயக்கத்தோட பேரு "அறிவொளி இயக்கம்". தொண்னூறுகளடோ ஆரம்பத்தில National Literacy Mission டோட ஒரு பகுதியா தமிழ்நாட்டுல புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்(நம்ம மாவட்டங்கோ), வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வெலி, ம்துரை, தஞ்சாவூர் அப்புறம் பாண்டிச்சேரின்னு சில மாசங்களுக்கு( அப்புறம் வருசங்களுக்கு) ஒரு பெரிய திருவிழாவையே நடத்திக் காட்டுனாங்க.

இப்ப என்ன எழவுக்கு இதெல்லாம்ன்னு நீங்க கேக்குறது ஞாயந்தான். சில வருசங்களுக்கு தங்களோட நேரம், காலம், பதவி, பணம்னு தூக்கிப் போட்டுட்டு தலையில சிலேட்டையும் புத்தகத்தையும் தூக்கிக்கிட்டு பஸ் போகாத ஊருக்கெல்லாம் போய் என்னத்தையாவது இந்த மக்களுக்கு பண்ணனும்னு சுத்துனவுங்க இந்த தமிழ்நாட்டுல சமீபத்தில கூட ஆயிரக்கணக்கில இருந்திருக்காங்கன்னு சொல்றதுக்காகத் தான் இந்த வெளக்கம் எல்லாம்.

என்னளவுல நான் வருத்தப் பட்ட, படுற விசயங்களல, அறிவொளி இயக்கத்தில சேர முடியல, எதுவும் பண்ண முடியலன்றதுன்றதும் ஒன்னு. அப்ப பன்னெண்டாப்பு படிச்சிக்கிட்டு இருந்ததா ஞாபகம்.

எங்க போனாலும் விடாது கருப்புன்ற ரேஞ்சுல, கனடா வந்ததுக்கப்புறமும் ஒருத்தர் கையில ஒரு புத்தகததை திணிச்சிட்டு போனாரு. எல்லாம் அதனால வந்த வினை.

புத்தகத்தோட பேரு

"இருளும் ஒளியும்" - அறிவொளி இயக்க அனுபவங்கள்
அப்டின்னு ச.தமிழ்செல்வன் எழுதுன புத்தகம்.

இவரு திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளரா இருந்திருக்காரு. தான் அறிவொளிய எதிர்கொண்ட விதத்தையும், கத்துக் கொடுக்கப் போய்ட்டு, கத்துக்கிட்டு வந்த விதத்தையும் சொல்லிருக்காரு. என்னோட குற்ற உணர்ச்சியை இன்னும் கொஞ்சம் கிளறி விட்டுட்டாரு.

பல சமுக அக்கறையுள்ளவுங்க பங்கெடுத்துக்கிட்ட இவ்வளவு முக்கியமான ஒரு இயக்கத்தை பத்தின வேர்களையும், காலடித்தடங்களையும் சாதரணமா நீங்க தேடுனீங்கன்ன, ஒங்களுக்கு பெரிய ஏமாத்தம் தான் மிஞ்சும். இத்தனைக்கும் சில பேர் போன எழுத்தாளர்களும் இந்த இயக்கத்தில பங்கெடுத்திருக்காங்க. அப்படி இருந்தும் ஏனோ இது அவ்வளவு முக்கியமில்லைன்னு விட்டுட்டாங்க போல.இந்த புத்தகம் கூட ஒரு ஆவணமா இல்லாம, அனுபவங்கள தான் பகிருது.


தமிழ்ச்செல்வன் சொல்றவகையில பாத்தா இந்த இயக்கத்த பத்தி மொத்தம் மூணு புத்தகமும் (இந்த புத்தகத்தையும் சேத்து) சில கட்டுரையும் தான் மிஞ்சும் போல. மீதி இருக்கிற ரெண்டு புத்தகத்தில ஒன்னு புதுக்கோட்டை கலெக்டரா இருந்த ஷீலா ராணி சுங்கத்தும், மாநில ஒருங்கிணைப்பாளரா இருந்த ஆத்ரேயாவும் சேந்து எழுதுன Literacy and Empowerment(இதப் பத்தின விமர்சனம்). இன்னொன்னு புதுக்கோட்டை அறிவொளியில இருந்த எழுத்தாளர் ஆர்.நீலா எழுதுன "பாமர தரிசனம்".


தமிழ்ச்செல்வனோட இந்த புத்தகத்தை விமர்சனம் பண்றதுக்கோ, இல்லை அதப் பத்தி எழுதற அளவுக்கோ எனக்கு அறிவில்லை. ஆனாலும் என்னைய அறஞ்ச சில வரிகள மட்டும் இன்னொரு பதிவுல போடறேன்.

6 comments:

Voice on Wings said...

பதிவுக்கு நன்றி. ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் மேலதிகத் தகவல்களை. இந்நூலின் பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளும் விவரங்களையும் தரமுடியுமா?

Thangamani said...

பதிவுக்கு நன்றி.

- உடுக்கை முனியாண்டி said...

VOW!

புத்தகத்தோட தலைப்பையே கொஞ்சம் மாத்தி குடுத்துட்டேன். இப்ப சரி பண்ணிட்டேன். பாத்துக்குங்க.

பதிப்பக விபரம் இங்க.

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூல் விநியோக விற்பனை மையம்
2, குயவர் வீதி, கிழக்கு ஜோன்ஸ் சாலை
சைதாப்பேட்டை, சென்னை - 600 015
மின்னஞ்சல்: info@thamizhbooks.com
தொலைபேசி : 44 2433 2424

Voice on Wings said...

தகவலுக்கு நன்றி. அஞ்சலில் அனுப்புவார்களா என்றுக் கேட்டுப் பார்க்கிறேன்.

//தமிழ்ச்செல்வனோட இந்த புத்தகத்தை விமர்சனம் பண்றதுக்கோ, இல்லை அதப் பத்தி எழுதற அளவுக்கோ எனக்கு அறிவில்லை. ஆனாலும் என்னைய அறஞ்ச சில வரிகள மட்டும் இன்னொரு பதிவுல போடறேன்.//

இதை உங்களிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். :)

பேச்சு வழக்கிலுள்ள உங்கள் நடை அருமையாகவுள்ளது. ஒரு சாமானியனை எளிதில் சென்றடையக்கூடிய தன்மையை அதில் காண முடிகிறது. உங்கள மாதிரி ஆளுங்க நிறைய எழுதினா, என்ன மாதிரி ஆளுங்க நிறைய தெரிஞ்சுக்குவோம். :)

முன்னேற்றம்ங்கறது கடைநிலைகளிலிருந்துதான் மேலெழும்ப முடியும்ங்கறது (i.e. trickle up) என்னோட நம்பிக்கை. ஒரு செடிக்கு எது நல்லது? அதோட வேருக்குத் தண்ணி ஊத்தறதா, இல்ல அதுல பூத்திருக்கற பூ மேல தண்ணி தெளிக்கறதா? இன்னிக்கி முன்னேற்றம்ங்கற பேர்ல எடுக்கபடற எல்லா நடவடிக்கையுமே இந்த இரண்டாம் வகையச் சேர்ந்ததாத்தான் இருக்குது. சேதுசமுத்திரமென்ன, தேசிய நெடுஞ்சாலையென்ன..... சம்மந்தமில்லாம புலம்பறதுக்கு மன்னிச்சிக்கோங்க.

அறிவொளி - இன்னமும் இயங்குகிறதா?

Unknown said...

என் திருமணத்திற்கு விஜய் டீ.வி புகழ்ன்னு ஒரு இசைக்குழுவக் கூட்டிவந்து பாட வைத்தால்., 'அறிவொளி' நாடகங்களில் வருகின்ற பாட்டுக்களை இசைத்தார்கள். தற்போது என்னவானது இந்த இயக்கம்?.

- உடுக்கை முனியாண்டி said...

அந்த இயக்கம் மட்டுமல்ல, அதுல மேடையேறுன பாடல்களையும் கதைகளையும் அதுக்கப்புறம் நான் எங்கயும் கேக்கலை. அதைப் பத்தி கேக்குறதுக்கு நானும் ஆர்வமா இருக்கேன்.