Feb 7, 2006

முனியாண்டியும் சில மாடுகளும் - 1

"ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக் கொள்கிறோம்" --வண்ணதாசன்


ஊரை விட்டு தாண்டி வந்து, எல்லாத்தையும் கஷ்டப்பட்டு மறந்துட்டு ஒக்காந்து வேலையப் பாத்தாலும்(என்ன வேலைன்றது வேற விசயம்) , இமெயில்ல எதையாவது அனுப்பி மக்க மனுசன காலி பண்ணிடுறாங்க. இப்பிடித்தான் சமீபத்தில Amazing Madurai அப்டின்னு மதுரையோட முக்கியமான சில போட்டால்லாம் அனுப்பியிருந்தான் நண்பன். அதுல இருந்த ஒரு போட்டாதான் இங்க.(இதுல காப்பிரைட்டு வில்லங்கம் எதுவும் இருக்கான்னு தெரியலை).



இந்த படம் முனியாண்டிக்கு நிறைய விசயங்களை முன்னாடி கொண்டு வந்துடுச்சி. மாடு மாதிரி வளர்ந்திருக்க அதுக்கு இருக்கிற அறிவு கூட ஒனக்கு இல்ல; உன்னை வளர்த்ததுக்கு ஆடு மாடு வாங்கி வளத்திருக்கலாம்ன்னு வாங்குன திட்டை எல்லாம் மறந்தாலும், காளை மாடு, பசுமாடு, எருமை மாடு, அந்த மாடு, இந்த மாடுன்னு சில மாடுங்க முனியாண்டிய பீல் அடிக்க வச்சிருச்சி.

இதுல முனியாண்டியும் மாடும் சேர்ந்த மாதிரியான ரெண்டு விசயங்க மட்டும் இங்க. ஒன்னு முனியாண்டி சமீபத்தில படிச்ச மாடு பத்தின புத்தகம், இன்னொன்னு மாட்டு வண்டி டிரைவரா முனியாண்டி வேலை பாத்தது பத்தி.

முதல்ல புத்தகம்.
எந்த புத்தகம்னு பாதிப் பேருக்கு இன்னேரம் தெரிஞ்சிருக்கும். பெங்களூரை விட்டு மூட்டை கட்றதுக்கு முன்னாடி தேவைப் பட்டாலும் படும்னு புத்தகக் கண்காட்சியை மொத்தமா போயி ரவுண்டு கட்டி வாங்கினப்ப ( வாங்குனதுல ஒன்ன கூட எடுத்துட்டு வர முடியலைன்ற சோகத்தை யாரு கிட்ட போய் சொல்ல) நண்பன் ஒருத்தன் ஒரு 50-60 பக்கம் மட்டும் இருக்குற ஒரு சின்ன புத்தகத்தை வாங்கினான். முனியாண்டி அப்ப புத்தகம் படிக்கிறதில்லைன்ற முடிவோட இருந்தாலும் சின்ன புத்தகந்தான்னு ஆசைய காட்டி விட்டுட்டான். காலையில ஆரம்பிச்சு சாயங்காலம் வரைக்கும் நடக்குறத சொல்ற கதை. முதப்பக்கத்தில ஏற ஆரம்பிக்கற விறுவிறுப்பு கடைசி பக்கம் வரைக்கும் ஏறுமுகமாத்தான் இருந்தது. அந்த புத்தகத்தோட பேரு "வாடி வாசல்". இந்த புத்தகம் வந்து கிட்டத்தட்ட ஒரு 50 வருசம் இருக்கும். சி.சு. செல்லப்பா, தேனிப்பக்கம் நடக்கிற மாடு பிடிக்கிற விளையாட்டப் பத்தி எழுதுனது. மாடு பிடிக்கிறத அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துது. இன்னும் சொல்லணும்னா கதையோட பாதியில நீங்களும் அந்த பொட்டல்ல காரிக்காளை, வாடிவாசல் தாண்டி வரப்போறதை ஆர்வத்தோட பாத்துக்கிட்டு நிப்பீங்க. அட்லீஸ்ட் முனியாண்டி அப்டி தான் நின்னான். ஒருவேளை நீங்க படிக்கும்போது மன்னிக்கனும் பாக்கும்போது சைடுல முனியாண்டிய பாக்க முடிஞ்சாலும் முடியலாம்.

3 comments:

Thangamani said...

வாங்கி படிக்காமலேயே வந்துவிட்ட புத்தகங்களில் அதுவும் ஒன்று, முனியாண்டி!

மு. சுந்தரமூர்த்தி said...

முனியாண்டி,
தமிழிலக்கியத்திற்கு சி.சு.செல்லப்பாவின் கொடைகள் இரண்டு: 'எழுத்து' பத்திரிகை, வாடிவாசல். போன ஆண்டும், இந்த ஆண்டும் பொங்கலன்று படித்து மீண்டும் அசைபோட்டது. புதிய பதிப்பில் பெருமாள் முருகனின் முன்னுரை இன்னுமொரு சிறப்பு. எனக்கு கிடைத்த சில மாடுகளின் படங்களையும் போட்டிருக்கிறேன். எங்க ஊர்ப் பக்க எருதுக்கட்டு (மாடு விடும் திருவிழாவில்) மாடுகளை இவ்வளவு கொடுமைப்படுத்துவதில்லை. சி.சு.செ. குறிப்பிடுவதுபோல ("தான் போராடுவது மனிதனுடன் அல்ல. ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன்") ஜல்லிக்கட்டு என்பது மனிதனுக்கும் மிருகத்துக்குமான போட்டி. எருதுக்கட்டு மாடுகளுக்கான ஓட்டப்பந்தயம். எப்போதேனும் நேரம் வாய்த்தால் எங்கள் ஊரில் பிரபலமாக விளங்கிய ஒரு மாட்டைப் பற்றி எழுதவேண்டும்.

- உடுக்கை முனியாண்டி said...

தங்கமணி
எப்டியும் கொஞ்சமாவது எடுத்துட்டு வரமுடியும்னு நினைச்சேன். ஆனா...

சுந்தரமூர்த்தி
நன்றி, மறுபடியும் //"தான் போராடுவது மனிதனுடன் அல்ல. ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன்"// ஞாபகப்படுத்தியதற்கு. எங்களூர் பக்கம் மாட்டுப் பொங்கலன்று மாடுகளை அழகு படுத்து பொங்கலிடுவதோடு சரி. எங்களுக்கு வீர விளையாட்டு என்பது சிலம்பு மட்டும் தான். அதைப் பற்றியும் ஒயிலாட்டத்தை பற்றியும் பின்னொரு பதிவில்.

சாரா
அடுத்தது வந்து கிட்டே இருக்கு.