Feb 7, 2006

முனியாண்டியும் சில மாடுகளும் - 2

இப்ப ரெண்டாவது.

கிராமத்தில இருக்கும் போது கிராமத்தோட ஒட்டாம, டவுனுல இருக்கும்போது கிராமத்தை நினைச்சிக்கிட்டே ஓட்டுன அமர்க்களமான வாழ்க்கை முனியாண்டியோடது. சில வருசங்கள், தாத்தா வீட்ல குப்ப கொட்டுனப்ப தான் முனியாண்டிக்கு மாடுங்களோட பரிச்சயம் ஆச்சி. கிராமத்தில தாத்தா வீட்ல மாடும் வண்டியும் இருந்தது. வீட்ல இருக்கறப்ப, கூளம் வெட்றதும், குழுதாடியில(மாடு தண்ணி குடிக்கிற தொட்டி) புண்ணாக்கு, தவுடு கலக்குறதும் முனியாண்டியோட டூட்டி. வீட்ல இருந்த ரெண்டு மாடும் ரொம்ப அமைதியான மாடுங்க. நாம உண்டு நம்மளோட புண்ணாக்கு உண்டுன்னு இருக்கும் (கிழட்டு மாடுகன்னு யாருங்க சவுண்டு விடுறது). தாத்தா மாடு வாங்குறதே ஒரு அலாதியான விசயம். ஊர்ல அவனவன் எளவட்ட மாடுக வாங்குறதுக்கு போட்டி போட்டுக்கிட்டு இருக்கிறப்ப இவரு மட்டும் ரொம்ப நிதானமான மாடா வாங்கிட்டு வருவாரு. ஒரு தடவை வாங்கிட்டு வந்த மாடு கொஞ்சம் தலையாட்டுதுன்னு (மத்தவங்களை முட்ட வர்றது) போய் வேற மாடு வாங்கிட்டு வந்துட்டாரு. அவருக்கு மாடுகளும் ஒன்னுதான் தன்னோட பிள்ளைகளும் ஒன்னு தான். சாட்டைக்கம்பு வச்சிருந்தாலும் அவரு மாட்டை அடிச்சி முனியாண்டி பாத்ததில்லை. மாடுகளும் இத தெரிஞ்சிகிட்டு வம்பு பண்ணதில்லை.

முனியாண்டி கைலி கட்ட (கிராமத்தில இது ஒரு முக்கியமான கிராஸ்ஓவர்) ஆரம்பிச்ச வயசில மாட்டு வண்டியும் ஓட்ட ஆரம்பிச்சிட்டான்(ஆனாலும் இது ரொம்ப நாளைக்கி நிலைக்கல). பருத்திக் காட்ல வேலையாளுக பருத்திய எடுத்து மூட்டை கட்டி வச்சிட்டு வந்துருவாங்க வீட்ல யாராவது ஒக்காந்து தூங்கிட்டு இருப்பாங்கன்ற எரிச்சல் தான்). ஒரு மூட்டை மட்டும் இருந்ததுன்னா சைக்கிள்ல போய் எடுத்துட்டு வரணும். அதிகமா இருந்ததுன்னா வண்டி கட்டிட்டு போகணும். முனியாண்டியோட முறை வர்றப்ப எவ்வளவு பருத்தி இருந்தாலும் வண்டி தான்.(அப்ப வண்டியோட்றதுக்கு ஆரம்பிச்ச ஆர்வம் இப்பவும் குறையலன்றது தனி). விளைச்சல் சமயத்தில மாட்டுக்கு பயிரு பச்சை நிறைய கிடைக்கும். அதனால படு ஊட்டமா இருக்கும். காட்டுக்கு போறப்ப ஊருக்கு வெளியில ஒரு பாதையோட ஆரம்பத்தை தொட்டுட்டம்னா போதும் அதுக்கப்புறம் அவங்களா போய் சேர வேண்டிய காட்டுக்கு கொண்டு போய் சேத்துருவாங்க. பாதைய பத்தி யோசிக்க வேண்டிய தேவையே இல்ல.(தாத்தா ஒருதடவை டவுனுக்கு போய்ட்டு நைட்டு திரும்ப வரும்போது எப்பயும் போல தூங்கிட்டே வந்திருக்காரு. இடையில வண்டி நின்னு போயிருக்கு. சரி வீடு வந்திருச்சின்னு எந்திருச்சி பாத்தா வண்டி நின்ன இடம் அந்த சைடுல இருக்கிற எங்க காடு).

காட்டுக்குப் போகும்போது வாக்கூடு (வாய்க்கூடு) கட்டி கூட்டிட்டுப் போனாலும் ஆடி அசைஞ்சு பக்கத்தில இருக்கிற செடிகளை பிடிச்சி இழுத்து தின்னு கிட்டே போவாங்க. ஆனா பருத்தி மூட்டைய ஏத்துன உடனே குஷியாகி( மொத்தமே 100 கிலோவுக்குள்ள தான் இருக்கும்) வீட்டை பாத்து ஓட ஆரம்பிச்சிருவாங்க. இழுத்து பிடிக்கிறது பெரிய விசயமாயிரும். இதுக ஓடுற ஓட்டத்தில மூட்டைங்க பறக்கிற கதையெல்லாம் தனி. என்ன தான் இதுக துடிப்பா ஓடுனாலும் முனியாண்டிக்கு இள மாடுங்களை பாக்கும் போதெல்லாம் தாத்தா மேல கொஞ்சம் கோவம் வரும். முனியாண்டி தன்னத்தானே சமாதானப் படுத்திக்கிறதும் ஒரு நேரம் வந்துச்சி.

கிராமத்தில "நாளேரு" ன்னு ஒரு விழா கொண்டாடுவாங்க. வருசத்தோட மொத விதைப்பை ஊர்க்காரங்கல்லாம் சேர்ந்து ஒரு நிலத்தில உழுது, விதைச்சு ஆரம்பிப்பாங்க. இதுக்கப்புறம் தான் மத்த நிலங்கள்ல விதைப்பு ஆரம்பிப்பாங்க. நாளேரன்னிக்கு அத்தனை மாடுகளும் மொத்தமா போயி அந்த நிலத்தை உழுகணும். இந்த மாடுகளை கூட்டிடுப் போறதே ஒரு விதமாயிரு்க்கும். அன்னைக்கு மாடெல்லாம் குளிச்சி மேக்கப் போட்டு அப்டி ஒயிலா ஊருக்குள்ள நடை போட்டு ஊர் கோயிலுக்கு போகும். அங்க பூசை போட்டு அப்புறமா தான் அனுப்பு வைப்பாங்க. மாடில்லாதவங்க செடி வெட்றது, கொத்துறது அப்டின்னு எதாவது ஒரு விவசாய கருவிய வச்சி அந்த நிலத்தில எதாவது செய்வாங்க. அதுக்கப்புறம் விதைக்க (விதையும் அவங்க அவங்க கொண்டு வருவாங்க) ஆரம்பிப்பாங்க. இப்டி முடிச்சிட்டு வர்றவங்களுக்கு மறுபடியும் கோயில்ல வரவேற்பு இருக்கும். (முறைப்பொண்ணுங்க மஞ்சத்தண்ணி ஊத்துறது இதுல ஒரு கிளைக்கத). அதனால யாரு மொதல்ல வர்றதுன்னு ஒரு போட்டி இருக்கும். எப்பவுமே இள மாடுங்க தான் முதல்ல ஓடி வரும். நம்ம மாடுக நிதானமானதுன்றதுனால மெதுவாதான் வரும். அதோட தாத்தாவுக்கு மாடுங்கள விரட்றதும் பிடிக்காது. (அதனாலயே மாடுங்களுக்கு பழக்கமில்லாதவங்களுக்கு குடுக்க மாட்டாரு. ஆனா முனியாண்டி தான் தவுடு புண்ணாக்கு காட்டிரான்ல, அதனால பெர்மிசன் உண்டு) பருத்திக் காட்டுக்கு போறப்ப இந்த ஓட்டம் ஓடுதுகளே, சரி இந்த தடவை ஓட்டிப் பாப்போம்னு அந்த வருசம் ரெடியா இருந்தான். போட்டி வந்து ஒரு நாளஞ்சி (ஜோடி) மாடுகளுக்கு தான். மொத்த நிலமும் உழுது முடியற வரைக்கும் ஏர்க்கால கழட்ட விட மாட்டாங்க. உழவு முடிஞ்சவுடனே எல்லாம் பிச்சி பறக்கறாங்க. முதல்ல ஆடி அசைஞ்சி ஆரம்பிச்ச நம்மவுங்க ரெண்டு மாடுக முன்னாடி ஓடுறத பாத்தவுடனே பாய்ச்சல் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. குறுகலான பாதைன்றதால சைடு வாங்கறது பிரச்சனை. அப்டி இருந்தும் மாடுங்க ஓடுன ஓட்டத்தில பின்னாடி பிடிச்சிக்கிட்டு ஓட முடியல. ஏதோ தூரம் கம்மின்றதால கொஞ்சம் தம் பிடிக்க முடிஞ்சது. கடைசில ரெண்டாவதா வந்து நின்னாங்க. அன்னைக்கெல்லாம் முனியாண்டிய பிடிக்க முடியலை (யாரும் அவன கண்டுக்கலைன்றது பெரிய விசயமா என்ன).

இப்டி பழச எல்லாம் நினைச்சு பாக்கும்போது, ஊரை விட்டு தள்ளி வந்து புலம்பல்களோட சுத்திக்கிட்டு இருக்கிறது முனியாண்டிக்கு கொஞ்சம் உறுத்தலா தான் இருக்கு. புவ்வாவுக்கு என்ன பண்றதுன்னு சமாதானம் சொல்லிக்கிட்டு பனி மூடுன சுத்துப்புரத்தை சன்னல் வழியா பாத்துகிட்டே இன்னும் வேற சில மாடுகளோட நினைவ அசை போட்டுக்கிட்டு இருக்கான்....

13 comments:

- உடுக்கை முனியாண்டி said...

ஒருத்தன் பீல் அடிச்சு போய் எழுதுனா, கதை நல்லா இருக்குன்னு கிண்டி விடுறீங்க...

நல்லா இருங்க..

Thangamani said...

அப்ப ஆரம்பிச்சு இப்பவும் வண்டி ஓட்டுறத நிறுத்தல. பார்ப்போம். நல்லா இருக்கு மாடுவண்டி கதை.

- உடுக்கை முனியாண்டி said...

நடை, மாட்டுவண்டி, சைக்கிளு, மோட்டார் சைக்கிளு அப்டின்னு ஏறு முகமா இருந்திட்டு இப்ப மறுபடியும் நடக்க ஆரம்பிச்சாச்சி...

நடக்கிறது உடம்புக்கு நல்லதாமே...

- உடுக்கை முனியாண்டி said...

//ஆனால் .... பனியில்... நடக்கரது.... அதைப் பத்தி தெரியலை.//

ஒருத்தன இம்சையைக் கட்டுறதில அவ்வளவு சந்தோசமா. இப்ப தான் weather report பாத்துட்டு நொந்து போய் வந்திருக்கேன்.. நீங்க வேற.......

வசந்தன்(Vasanthan) said...

நல்லாயிருக்கு உங்கட கதை சொல்லிற பாணி.
இரசிச்சேன்.

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி வசந்தன்

Unknown said...

பருத்திக்காடா?., நீங்க எந்த ஊரு?. பதிவு படிக்க நல்லா இருந்தது. பருத்தின்னா நிச்சயம் நீங்க வெப்ப மண்டலத்துலதான் இருந்திருப்பிங்க... இப்பச் சுத்திப் பனி...ம்... அனுபவிங்க :-)).

- உடுக்கை முனியாண்டி said...

நமக்கு விருதுநகர் மாவட்டங்க. ஆனா என்ன வீட்டை விட்டு வந்து ஆச்சி அது ஒரு ஏழெட்டு வருசம். ரெண்டு வருசம் மெட்ராஸ்ல மிச்சம் பெங்களூருன்னு வாழ்க்கை வீட்டை விட்டு வெளிய தான் ஓடிக்கிட்டு இருக்கு.

இங்க பனி இருக்கறதினால வெளிய போய் சுத்த முடியலை. மத்தபடிக்கு எந்த பிரச்சனையுமில்லை..

Thangamani said...

//இங்க பனி இருக்கறதினால வெளிய போய் சுத்த முடியலை//

இங்க எம்.ஜி ரோடு இல்லாததாலும்தான்!

:)

- உடுக்கை முனியாண்டி said...

//இங்க எம்.ஜி ரோடு இல்லாததாலும்தான்!//

வேணும்னா துணைக்கு தங்கமணி இல்லைன்னு சொல்லுங்க.

இங்க பெரிய ஷாப்பிங் மால் ஒன்னு இருக்கு. அது போக டவுந்டவுன ஏரியாவும் இன்னோரு ஷாப்பிங் ஏரியாவும் இருக்கு. அதனால நமக்கு எந்த பிரச்சனையுமில்லை. ஒரு இந்தியன் ரெஸ்டாரண்ட்(பேரு தாஜ்மகால்) கூட இருக்கு. இதுக்கு மேல மனுசனுக்கு என்ன வேணும்.

போதாக்குறைக்கு பக்கத்தில பீச் ஒன்னு இருக்கு. சம்மர் வரட்டும் அப்ப பேசிக்கறேன் உங்களை எல்லாம்.

சுந்தரவடிவேல் said...

எங்க ஊருல எல்லாம் இந்த மாட்டு வண்டி எல்லாம் இல்ல முனி, எல்லாம் காரு, பஸ்ஸு, வேனு இப்படித்தான். மாப்பிள்ள ஊரு அதுதான் கரம்பக்குடியிலும் அப்படி ஒரு நிலவரம்,அதனால கிராமம் எண்டா எப்படி இருக்கும் எண்டு ஒரு படம் மனசுல ஓடிச்சுது, நன்றி.

ஜானா

- உடுக்கை முனியாண்டி said...

ஜானா,நான் சொல்ற இந்த கதை நடந்தது long long ago, so long ago la. கிட்டத்தட்ட 15 வருசம் இருக்கும்னு நினைக்கிறேன். இப்ப எங்க ஊருலயும் மாடு பாக்குறது கஷ்டமான விசயம்.

இதுக்கு இன்னும் ஒரு 10 வருசம் பின்னாடி போனா, எங்க கிராமத்தில இருந்து சுமாரா ஒரு 30 கூடை பால், தயிர், நெய்யின்னு தலைச் சுமையா பக்கத்து டவுனுக்கு போகும். அதே ஊருல பச்சைக்குழந்தைக்கு பால் தேடி அலைய வேண்டிய நிலைமை இருந்தது/இருக்கு.

கொஞ்சம் படம் போடுறதுன்னா, நான் சவலைப் பிள்ளையா இருந்ததனால ஒரு தனி பசு மாடு எனக்கு மட்டுமே ஒதுக்கி வைச்சிருந்திருக்காங்க. அது இறந்ததுக்கப்புறம் எங்க நிலத்திலயே புதைச்சிட்டாங்க(இது அபூர்வம்).

ஒரு பின்னூட்டம் போட்டு என்னையும் கிண்டி விட்டுடீங்க. பரவாயில்லை. நன்றி

சுந்தரவடிவேல் said...

அய்யோ... நா கிண்டலுக்கு சொன்னேன். சுந்தர கேட்டா தெரிஞ்சிக்குவிங்க எங்க ஊரப்பத்தி.அதுக்காக எல்லாத்தையும் இங்க கேக்காதிங்க.இப்பத்தான் எல்லாரும் வெளிநாட்டுக் காசு புண்ணியத்தில van வாங்கி ஓட்டுறாங்க. நீங்க கரம்பக்குடி பத்தி கேள்விப்பட்டதே இல்லையா அல்லது போனதே இல்லையா. நா என்ன சொல்ல வந்தேனென்றா நானும் உங்க மாதிரி கிராமந்தான். உங்க பதிவு திரும்பவும் அந்த காலத்துக்கு கூட்டின்னு போச்சு. நன்றி.

///கொஞ்சம் படம் போடுறதுன்னா, நான் சவலைப் பிள்ளையா இருந்ததனால ஒரு தனி பசு மாடு எனக்கு மட்டுமே ஒதுக்கி வைச்சிருந்திருக்காங்க. அது இறந்ததுக்கப்புறம் எங்க நிலத்திலயே புதைச்சிட்டாங்க(இது அபூர்வம்).///

இந்த சவலப் பிள்ளைக்கு பால் கொடுத்து கொடுத்து அந்த மாடு உயிர மாச்சிக்கிட்டு.இருந்தாலும் அது செய்த உதவிய நன்றியோட நினைக்கிற உங்களுக்கு ஒரு நன்றி.எங்க வீட்டிலையும் நிறைய மாடுக்ள் இருந்துச்சு.அதுல ஒன்று பேரு கறுப்பி. கறுப்பியோட கடைசி காலம் இன்னும் கண்ணுக்குள்ள நிக்குது.

ஜானா