Feb 5, 2006

தோற்றுப் போக நமக்கு அனுமதியில்லை.....அறிவொளி இயக்கம் -2

"மேல் தட்டு மக்கள் கல்வி பெறுவதும் ஒடுக்கப் பட்ட மக்கள் கல்வி பெறுவதும் ஒன்றல்ல.அவர்களின் கல்வி அவர்களுக்கே பயன்படும். ஆனால் பாட்டாளிகள் கற்பது சமூகத்தை மாற்றும்." --பாவ்லோ ப்ரையர்.

ஊர் கூடி தேர் இழுக்கறதில, சாமியக் கொண்டு போய் கரை சேக்கலன்னா நைட்டு வந்து கண்ணைக் குத்திருவாருன்ற பயத்தில எப்டியாவது எவனையாவது உள்ள தள்ளியாவது தேர உருட்டி கொண்டு நிலை சேத்துருவாங்க.

இத எதுக்கு சொல்றன்னா, சாதாரணமா நாலு அஞ்சி பேரு சேந்து செய்ற வேலையிலயே ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக்கிட்டு கடைசியில ஏண்டா இந்த வேலைய ஆரம்பிச்சோம்ன்ற நிலமைக்கு வந்திருவோம்

ஆனா இங்க(அறிவொளி இயக்கம்) சில லட்சம் பேரு சேர்ந்து, அதுவும் கலெக்டர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டம், ஒன்றியம், பகுதி, கிராமம், வார்டு அப்புறம் இடையில இந்த ஆபிஸ், அந்த ஆபிஸ் இது போதாதுன்னு கரை வேட்டிங்க கடைசியா திருவாளர் பொதுஜனம் அப்டிற ஏழெட்டு அடுக்கு அதிகார வரிசை தாண்டியும் இந்த இயக்கம் ஜெயிச்சிருக்கு. ஏகப்பட்ட பரிசோதனைகள், முயற்சிகள், தோல்விகள், வெற்றிகள் ன்னு கடந்து வந்திருக்கு. இதுக்கு பின்னாடி இருக்கறவங்களோட முயற்சியையும் அர்ப்பணிப்பையும் யாரும் சாதாரணமா எடுத்துக்க முடியாது.

இதுல ஈடுபட்ட அரசு ஊழியர்களாகட்டும் இல்ல ஒரு பைசா வாங்காத தன்னார்வலர்களாகட்டும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம வேலை பாத்திருக்காங்க. என்ன பெரிய வேலை, போயி படிக்க தெரியாதவங்களுக்கு கத்துக் குடுக்கணும அவ்வளவுதான அப்டின்னு ஈசியா சொல்லிரலாம் (சொல்றதுக்கு காசா பணமா). சரி அத ஈசின்னே எடுத்துக்கிட்டாலும், இங்க பிரச்சனை என்னன்னா படிக்கத் தெரியாதவங்கள படிக்க கூட்டிட்டு வர்றது. நாலு கழுத வயசாயிருச்சு (இவங்க குறி வச்சது 15-35 வயசை) எனக்கு, இனிமே படிச்சு என்ன கிழிக்க போறேன்னு இழுத்து போர்த்திட்டு தூங்குறவன நைட்டு படிக்கிறதுக்கு வான்னு எப்டி கூப்பிடறது. ஏனுங்க நான் நல்ல வாத்தியாரு, நல்லா பாடம் எடுப்பேன் அப்டின்ற பூச்சாண்டியெல்லாம் பலிக்காது. (இதயெல்லாம் பாத்து சுணங்குறவங்கள அப்டியே விட்டுறாம, இந்த என்ஜினை இழுத்துட்டு போனவங்கள்ல முக்கியமான டாக்டர். ஆத்ரேயா சொன்ன வார்த்தைகள் தான் " தோற்றுப் போக நமக்கு அனுமதி இல்லை" )

ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் குடுத்த, இவங்களோட ஆரம்பமே மெகா அமர்க்களமா இருந்திருக்கு. எத்தன பேரு படிக்காதவங்க, மத்தபடி யார் யாரு எந்த எத்தன பேருக்கு சொல்லிக் குடுக்கணும் அப்டின்ற கணக்கெடுப்பு எல்லாம் "ஒரே" நாள்ல முடிச்சிருக்காங்க. இது நிச்சயமா ஒரு பெரிய சாதனைதான்.

சரி இவங்க எப்டி மக்களை ஒன்னு திரட்டுனாங்க? ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் அப்டினின்னு ஒரு சொலவடை கிராமத்தில சொல்லுவாங்க. அத மனசில வாங்கிட்டாங்களா என்னன்னு தெரியல. "புத்தகம் கையில் எடுத்து விடு, புத்தொரு ஆயுதம் ஆகிடும் உனக்கது" அப்டின்னு ஆட்டம் பாட்டம் போட்டு தான் இவங்க தூங்குறவன எழுப்பி படிக்க வச்சிருக்காங்க. உனக்கு பாட்டு புடிக்குமா, இந்தா பாடுறோம். உனக்கு பாடத் தெரியுமா, உன்னோட பாட்ட நீ பாடு நாங்க கேக்குறோம். கத சொல்ல தெரியுமா சொல்லு. விடுகத தெரியுமா, போடு. டான்ஸ் புடிக்குமா, இந்தா அதுவும் இருக்கு அப்டின்னு தான் மக்களை நெருங்கிருக்காங்க. இதுக்காக சைடுல ஒரு பெரிய கலைஞர்கள் கூட்டமும் உருவாகி நின்னுருக்கு. மேடையில நின்னு பாடக்கூடியளவுக்கு தைரியம் உள்ள ஒரு லட்சம் பேரை இந்த இயக்கம் உருவாக்கிருக்குன்னா அது சாதாரணமான விசயமில்லை. நம்மல்ல எத்தனை பேரால இன்னைக்கு மேடையில நின்னு கூச்சப் படாம பேச முடியும் சொல்லுங்க.

அப்புறம் இங்க சொல்ல வேண்டிய முக்கியமான விசயம் அறிவொளி வாத்தியார்களப் பத்தினது. யண்ணே, யக்காவ் அறிவொளிக்கு வந்து சேருன்னு இழுத்து பிடிச்சி பாடம் நடத்துனது எல்லாம் 9-10 வரைக்கும் படிச்ச, பாஸான, பெயிலானவங்க தான்.(மொத்தத்திலயே 200 பேரு தான் இதுல காலேஜ் எட்டிப் பாத்தவங்க. படிச்சவங்கள்லாம் அவங்க அவங்க வேலையப் பாக்க போயிட்டாங்க போலருக்கு). இதுல இன்னும் முக்கியமானது பொம்பளைங்களோட பங்கு. அவங்க இத சமூகம் தங்களுக்கு தந்த கவுரவமா நினைச்சி ஒரு பெரிய தனி ஆவர்த்தனமே நடத்திருக்காங்க. கரெக்டா சொல்லணும்னா, இவங்க தான் என்ஜினா நின்னு இழுத்துகிட்டு போயிருக்காங்க.

"நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எரிவது மேல்" அப்டின்றத மனசில போட்டுக்கிட்டு சோர்வுக்கும் நம்பிக்கைக்கும் நடுவேயான ஒரு பெரிய போராட்டத்தோட அறிவொளி அடுத்த கட்டங்களையும் தொட்டிருக்கு. தொடர் கல்வி இயக்கம், வாசிப்பு இயக்கம் நூலக இயக்கம்,வாசகர் வட்டம்னு அடுத்தும் சாதனைகளை படச்சிருக்கு. இந்த கட்டத்தில முக்கியமா நிறைய புத்தகங்களை தயாரிச்சி வெளியிட்டிருக்காங்க. ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு வாசகன்றத குப்பையில தூக்கிப் போட்டுட்டு, ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு புத்தகம் அப்டின்னு பல புத்தகங்களை கொண்டு வந்ததும் இல்லாம அத லட்சக் கணக்கில(தோராயமா பத்து லட்சம்) வித்தும் காண்பிச்சிருக்காங்க. படிக்க வந்தவங்க சொன்ன கதைகள், பாட்டுகள், விடுகதைகள் எல்லாமே புத்தகத்தில ஏறிருக்கு.

இவ்வளவு நடந்தும் தொக்கி நிக்கிற விசயங்கள் இதுல நிறைய இருக்கு..

இன்னொரு அறிவொளி இயக்கம் இங்க தேவையில்லைன்ற ஒரு நிலை இருக்கா அப்டின்னா அது இல்ல.

எவ்வளவோ பரிசோதனைகள், எவ்வளவோ முயற்சிகள் அப்டியே நட்டாத்தில நின்னு போச்சி. அதெல்லாம் ஆவணப் படுத்தக் கூட இல்லை. ஒருக்கா மறுபடி இதே மாதிரி ஒரு திட்டம் வந்துச்சின்னா (ஒரு நப்பாசை), மறுபடியும் ஆரம்பத்தில இருந்து தான் தொடங்கணும்.

எவ்வளவோ கலைஞர்கள், இந்த இயக்கத்தோட தூண்களா நின்னவங்க, இயக்கம் இழுத்துக்கிட்டு கிடந்தப்ப எல்லாம் ஆக்ஸிஜன் குடுத்தவங்க அப்டியே காணாம போய்ட்டாங்க.

நிறைய பெண்கள், வீட்டை விட்டு வெளிய வந்து நிறைய பண்ணியிருக்காங்க. எவ்வளவோ பேர் கலைஞர்களா, ஆளுமை கொண்டவர்களா இந்த இயக்கத்தோட போக்க நிர்ணயியம் பண்றவங்களா இருந்திருக்காங்க. ஆனா அறிவொளிக்கப்புறம் மறுபடியும் அவங்களோட சிறக சுருக்கிக்கிட்டு வீடுகள்லயே முடங்கிட்டாங்க

இது மாதிரி இன்னும்.............


குறிப்பு: இன்னும் அறிவொளி மிச்சம் மீதி இருக்கான்னு கேக்குறவங்களுக்கு:
1. அறிவொளி இயக்கத்தில தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோழர்கள் முக்கியமான உந்து சக்தியா நின்னு வேலை பாத்திருக்காங்க. அவங்களோட முகவரி: தலைமை அலுவலகம், 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 14; 46 இரண்டாவது தெரு, க.கீ. கார்டன்ஸ், ரெட்டியார்பாளையம், பாண்டிச்சேரி-10
2. சில மாவட்டங்கள்ல (கடலூர், விழுப்புரம்..) சமீபகாலங்கள்ல நிறைய இரவுப் பள்ளிகள் தொடங்கி நடந்துகிட்டிருக்கு.(aidindia & DYFI சார்பான்னு நினைக்கிறேன்)

5 comments:

Muthu said...

நல்ல கட்டுரை.

Thangamani said...

நல்ல விவரமான பதிவு. பல நூற்றண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி தந்த அறிவொளி இயக்கம் ஒருவிதத்தில் புரட்சிதான். தொடர்ந்து எழுதவும்.

நன்றி.

சுந்தரவடிவேல் said...

நல்ல கட்டுரை!

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி முத்து, தங்கமணி, சுந்தர்.

Balaji-Paari said...

Nandrigal.