Feb 26, 2006

ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை......

நான் தாவரமாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்
- வண்ணதாசன்


முனியாண்டிக்கு பெருசா புத்தகம் படிக்கற பழக்கமெல்லாம் கிடையாது. பொழுது போகலைன்னா பரபரப்பான, சூடான செய்திகளை மேயிறதோட (மாட்டு வாசனை) சரி. இலக்கியம்னா கிலோ எவ்வளவுன்ற வகையில தான் முனியாண்டியோட அறிவு. புவ்வாவுக்காக் அப்பப்ப இங்கிலீசுல இருக்கிற புத்தகத்தோட சில பக்கங்களை தவிர்க்க முடியறதில்லை. மக்க துணைக்கு ஆள் சேக்குறதுக்காக பெரிய பெரிய புத்தகமெல்லாம் குடுத்து படிக்க சொல்லுச்சி. எதாவது காரணம் சொல்லி ஓடிப் போயிருவேன். காரணத்தையெல்லாம் நினைச்சா இப்ப கூட சிரிப்பு வருது. நேரமில்லை(ஊர்மேஞ்சா), காண்சண்ட்ரேசன் போயிரும் (யார் மேல இருக்கிற காண்சண்ட்ரேசன்), நீங்கல்லாம் தீவிரவாதிங்க(உண்மைதான!)..இந்த ரேஞ்சுல போச்சி நம்ம காரணமெல்லாம். அப்ப சுத்தி சுத்தி புத்தகங்களோட சுத்துன மனுசங்க ஏராளம். சில நண்பர்களோட ரூம்ல புத்தகங்களா குவிச்சு கிடக்கும். எனக்கு புத்தக வாசனை அலர்ஜின்னு சொல்லிட்டு அந்த ரூம் பக்கமே போறதில்லை. தங்கமணியோட ரூம்ல கூட(!) நிறைய நல்ல புத்தகங்கள்லாம் இருந்துச்சி(எனக்கு தெரியாது, இது பாலாஜி-பாரி சொன்னது). நான் நல்ல பையனா போய் க்ரீன் டீ போடச் சொல்லி இம்சையை கட்டி அதைக் குடிச்சிட்டு ஓடி வந்துருவேன். அதுவும் இல்லைன்னா ஊர் சுத்தறதுக்கு ஆள் இல்லைன்னு இழுத்துக்கிட்டு போயிருவேன். (ஊரு சுத்துன போட்டோ எல்லாம் பாத்துட்டு வயிறெரிஞ்சவங்க ஏராளம்!!!!!). ஒவ்வொருத்த்ரும் ஒருத்தரை ஒவ்வொரு மாதிரி பாக்கிறோமில்ல. இப்டி புத்தகங்கன்னாலே யாருகிட்டயும் மாட்டாம தப்பிச்சிருக்கேன். ஆனா விதி வலியது. எங்க போனாலும் விடாதுன்ற மாதிரி, இங்க கனடாலயும் வந்து பாலாஜி பாரி சில நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் வந்து அவர்கிட்ட இருந்த சில புத்தகங்களை கையில திணிச்சிட்டு போயிட்டாரு(இதுக்கு பேரு தான் தொல்லைய கட்டுறது). அதுல ஒரு புத்தகம் "நடுகை" - 96ல வந்த வண்ணதாசனோட சிறு கதை தொகுப்பு. இவரோட முழு சிறுகதை தொகுப்பும் தங்கமணி கிட்ட இருந்தது. (அப்ப கட்டில்ல ஒக்கார்ரதுக்கு இடமில்லைன்னு தூக்கி கட்டிலுக்கு அடியில தள்ளி விட்டுட்டேன்). இப்ப ஊர் சுத்தறதுக்கு துணைக்கு ஆள் இல்லாததனால அதை படிச்சுகிட்டே இருக்கேன்(150 பக்கமுல்ல). இந்த வாரம் வேற எதுவும் எழுதறதுக்கு இல்லாததனால எனக்கு ரொமப பிடிச்சிப்போன இந்த தொகுப்போட முன்னுரையில இருந்து சில வரிகள்.


==========வண்ணதாசனின் நடுகை முன்னுரையிலிருந்து================

தண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.
எதிர்பார்த்ததை விட குறைந்த நெரிசல் உடைய பயணங்கள் தான். நெரிசல்களை ஊடுருவிச்செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி அடுத்த வண்டி என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.

பிணங்களுடன் பயணம் செய்வது போல பூக்களுடனும் பயணம் உண்டு. வாய் பேச முடியாத ஒரு பெண் பூக்கட்டிக் கொண்டே அவளுடைய பூக்காரச் சிநேகிதனோடு சைகைகளில் பேசிக் கொண்டும் பேச்சை விட அதிகம் சிரித்துக் கொண்டும் இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.

நான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும் தானே பேசவும் எழுதவும் இருக்கவும் சிரிக்கவும் கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகிற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாளரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில் அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டு தானே.

வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது, எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன? இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில் எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக் கொண்டு தானே இருக்கின்றன.

நான் கீரிப் பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது.

நான் பூவெனில் எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது

நான் தாவரமாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்

அப்படி அக்கறை கொண்டிருப்பதால் தான் ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா! என்ற கிழவரின் குரலைப் பதிவு செய்ய முடிகிறது.

ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.

ஒருவர் தன் கைவிரல்களை உருவிக் கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் கைவிரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.

யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லோர்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கின்றேன்.

இந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும் எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருகிறேன்

ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

எஸ். கல்யாணசுந்தரம்
15.8.96

9 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

நீங்கள் காட்டியிருக்கிற வண்ணதாசனின் எழுத்து அழகாக இருக்கிறது. நன்றி. எப்போதாவது படிக்க வேண்டிய பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். நானும் அதிகமாகப் படிப்பதில்லை இப்போது.

உங்களது எழுத்தும் எளிமையாக அழகாக இருக்கிறது. அதிகம் படிப்பவரில்லை என்று நீங்கள் சொன்னாலும் எப்போதாவது முன்பு நிறையப் படித்திருப்பீர்கள்; இல்லை உட்கார இடமின்றிப் புத்தகங்களை நிறைத்து வைத்திருப்பவர்களின் சகவாசமே இதற்குக் காரணம் என்கிறீர்களா? :-)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நீங்க சொன்னதெல்லாம் நம்பிட்டேன் முனியாண்டி!!!

நீங்கள் தட்டச்சியிருக்கும் பத்தி பற்றிப் பிறகு..

இப்ப தைரியமாக ஒரு அழைப்பிதழ் வைக்கலாம்..

எப்ப மொன்ரியல் & டொராண்டோ வர்ரீங்க?

ஜூலைல டொராண்டோ பக்கம் வர்ரீங்களா? இயல் விருது விழாவுக்கு வந்தமாதிரியும் இருக்கும். கனேடிய வலைப்பதிவர்களைப்பார்த்த மாதிரியும் இருக்கும்..

முக்கியமா டீஜே, உங்களை வீட்டுக்கு வாங்கன்னு வற்புறுத்தி அழைச்சுட்டுப் போவார்.(கூட என்னையும் கூட்டிட்டுப் போங்க. கொஞ்சம் புத்தகம் சுடணும் எனக்கு.. :P )

-மதி

- உடுக்கை முனியாண்டி said...

நன்றி செல்வராஜ். வண்ணதாசனோட முழுத் தொகுப்புமே இப்ப கிடைக்குது.

இல்லைங்க நான் சொன்னதெல்லாம் உண்மைங்க. எனக்கும் புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லைங்க

Thangamani said...

முனியாண்டி,

(ஏய் முனியாண்டி சின்னத்தொரைன்னு ஒரு சின்ன வீடியோ படம் பார்த்தீங்களா?)

அந்தத் தொகுப்பு இப்பமறுபடியும் என் அறைக்கு வந்துவிட்டது. நாம் விரும்புகிற விதயங்கள் எப்படியாவது நம்மைச் சேர்ந்துவிடுகிற அதிசயத்தை (அல்லது தினப்படி நிகழ்வை) இன்னொருமுறை நிரூபிக்கிறது. [வாழ்வை அதிசயங்களால் நிறைக்க எண்ணுகிறது மனம்; ஆனால் வாழ்வு அதிசயங்களால் ஆனது :}]

சில சமயம் காலில் இடறிறிவிடாத பொழுதுகளில் இங்கும் அதைத் திறந்து சில வரிகளைப் படிக்கிறேன். இது மாதிரி சில வரிகளை எடுத்துப்போட விழைந்து சோம்பல் குறுக்கே விழுந்து தடுத்தத்தில் எழுத்துகள் உள்ளேயே தங்கிவிட்டன.

இந்த வண்ணதாசனின் பதிவுக்கு நன்றி!

செல்வராஜ், நீங்கள் வண்ணதாசனின் தொகுப்பை வாங்கி (வாசித்து) இருக்காவிட்டால், அவசியம் வாங்க சிபாரிசு செய்வேன். வண்ணதாசன் என்னுடைய பிரியமான எழுத்தாளர்களில் ஒருவர். :)

Unknown said...

கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்,
சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, உயரப் பறத்தல்
கிருஷ்ணன் வைத்த வீடு.

இவை அவரது மற்ற சிறுகதைகளின் தொகுப்புகள். அனைத்தையும் வாசித்திருக்கிறேனா எனக் கேட்காதீர்கள் :(

//யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி//

எல்லாக் கட்டத்திலும் நம்பிக்கைதரும் வரிகள். இப்பதிவிற்கு நன்றி முனியாண்டி.,

சுந்தரவடிவேல் said...

இந்த பதிவு அருமை. உங்களுக்கும் புத்தகங்களுக்கும் இருக்கும் உறவுதான் எனக்கும் புத்தகங்களுக்கும் இடையே இருக்கு எண்டு சொல்லுறேன். தங்கமணி அறையில வச்சிருந்த புத்தகமெல்லாம் பெட்டி பெட்டியா வீட்டில இருந்திச்சு, அப்ப யோசிச்சன் இந்த ஆளோட மண்டைக்குள்ள இருக்கிற சரக்குகெல்லாம் காரணம் இதுதானா எண்டு. பதிவ வாசிச்சு சிரிச்சேன். thanks

jana

- உடுக்கை முனியாண்டி said...

மதி நன்றிங்க. புது மனுசங்க, புது எடம்னாலே கொஞ்சம் (இல்ல ரொம்பவே)கூச்சப் பட்டு ஒதுங்கிருவேன். ஆனாலும் நிச்சயமா அந்தப் பக்கமா வர்றதுக்கு முயற்சி பண்றேங்க.

தங்கமணி அந்த வீடியோவை பாத்திருக்கேன். ஏங்க முனியாண்டியைப் பாத்தா உங்களுக்கு இழுத்து விடத்தோணுது !!!!!!

அப்டிப்போடு, எத்தனையோ எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்ன்னு சந்திச்சாலும் இன்னும் ஒவ்வொரு உசுருக்குள்ளயும் ஈரம் காயலைன்ற நம்பிக்கை இன்னும் இருந்து கிட்டே இருக்கு.

மண்ணோட, மக்களோட ஈரத்தை பத்தி நான் படிச்ச முதல் எழுத்து மேலாண்மை பொன்னுச்சாமியோடது. காலேஜ் புத்தகத்தில அவரோட சில சிறுகதைகள் பாடத்திட்டத்தில (!) இருந்தது.

ஜானா, என்னோட ரூம்லயும் நீங்க சொல்ற அந்த பொட்டி, அப்புறம் தனியா அவரோட லெட்டர் எல்லாம் ரொம்ப நாளா இருந்தது. அவர் எந்த டப்பாவுல போட்டு குடுத்தாரோ அதுலயே போட்டு அனுப்பிச்சாச்சி. நாங்க அடுத்தவுங்க அனுமதியில்லாம தொட மாட்டோம்னு கதை சொன்னாலும், இதையெல்லாம் யாரு படிக்கறதுன்னு திறக்கவேயில்லை

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

தங்கமணி, உங்கள் பரிந்துரைக்கு நன்றி. நினைவில் வைத்துக் கொள்கிறேன். என்றாவது ஒருநாள் புத்தகங்களை அதிகம் வாசிக்க முடிகிற போது வண்ணதாசனையும் முதன்மைப் படுத்திக் கொள்கிறேன்.

பத்மா அர்விந்த் said...

ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.எனக்கும் கூட- நல்ல எளிமையான எழுத்து. நன்றி