Showing posts with label வாசிப்பனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பனுபவம். Show all posts

Jan 7, 2008

டொட்டடொயிங் -2: கிழக்கு பதிப்பகத்தின் ஆளப்பிறந்தவர்கள்

அது பத்தாவதுக்கான வகுப்பறை. அன்னைக்கு ஆய்வு நாள். சாதரணமா ஆய்வு அன்னைக்கு ஆய்வாளர்கள் வந்து பசங்க எப்படி படிக்கறாங்கன்னு சோதனை பண்ணுவாங்க. இதுக்காக பள்ளிக்கூடம் முழுசுமே எதோ திருவிழா மாதிரி ஜே ஜேன்னு இருக்கும். எங்களுக்கு ஆய்வாளர் வந்த நேரம், சமூக அறிவியல் பாடம் நடந்துக்கிட்டிருந்தது. வந்தவரு ஆர்வமாகி, இந்தியாவின் முதல் ஜனாதிபதி யாருன்னு கேட்டுட்டாரு. என்னைக் கேட்டிருந்தா அது நான் இல்லைன்னு சொல்லியிருக்கலாம். கேக்கப்பட்ட பையன் அப்டியே எந்திரிச்சி நிக்கிறான். போனதுக்கப்புறம் வாத்தியாரு விட்டாரு டோசு. ஏண்டா உனக்கு முதல் ஜனாதிபதி தெரியலைன்னு இப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங்குன்னு சொல்ல வேண்டியது தான அப்டிங்கறாரு. இப்டித்தான் நான் வரலாறு படிச்சி வந்திருக்கேன்.

சரி அப்ப அப்படி இருந்துச்சி. அதுக்காக நம்ம வரலாற்று அறிவை அப்படியே வைச்சிக்கலாமா. கொஞ்சமாவது முன்னேத்தவேணாமான்னு தோணுனப்ப சிக்குனது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கற "ஆளப்பிறந்தவர் நீங்கள்" ன்ற புத்தகத்தோட அட்டை. யார் யாரையெல்லாம் கண்டு பிடிக்க முடியுதுன்னு முயற்சி பண்ணினேன். ஏதோ கொஞ்சம் முடிஞ்சது. ஒரு சிலது கண்டு பிடிக்க முடியலை. அட்டைப் படத்துக்குக் கீழ எந்த முகங்களையெல்லாம் கண்டுபிடிக்க முடியலைன்னு போட்டிருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

இதுல யாரோட படம் இல்லை, ஏன் இல்லைன்ற ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் இங்க வராதீங்க.




என்னால முடியாதது கீழ இங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

வரிசை 1- 5வது படம்
வரிசை 2- 2
வரிசை 5- 2 (ரஷ்புதின்?),3 (தாட்சர்?),5
வரிசை 7- 1,3

பொழுது போகாத இந்த விடுமுறையில இத விட நல்ல விளையாட்டு என்ன இருந்திருக்கும் சொல்லுங்க.

Dec 28, 2007

லிவிங்ஸ்மைலின் புத்தகம்

தமிழ் வலைப்பதிவுலகில எனக்குப் பிடிச்ச ஒரு சில பதிவர்கள்ல லிவிங்ஸ்மைல் வித்யாவும் ஒருத்தங்க. அதுக்கு பல காரணங்கள் சொல்லலாமுன்னாலும் ரெண்டு முக்கியமான விசயங்கள். ஒன்னு அவரை தன்னோட, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்குப் போராடுற போராளியா எனக்குப் பிடிக்கும். இன்னொன்னு வலைப்பதிவை சரியா உபயோகப்படுத்திக்கிட்டவங்கள்ல அவங்களும் ஒருத்தங்கன்னு நான் நினைக்கிறேன். திருநங்கைகள் அப்படின்னா ஏதோ ஒரு அழுகலான பார்வைன்ற தளத்தில இருந்து அவங்களும் சராசரியான மனிதர்கள்தான்ற ஒரு பார்வையை இன்னைக்கு குறைஞ்சது வலைப்பதிவர்கள் மத்தியில கொண்டு வந்ததுக்கு அவங்களோட எழுத்துக்களும் ஒரு காரணம். இது அவங்களுக்கு, அவங்களோட எழுத்துக்கு மட்டுமில்லாம வலைப்பதிவுகளுக்கும் கிடைச்ச ஒரு வெற்றியா தான் இதை பார்க்கறேன்.

இப்ப சந்தோசமான விசயம் என்னன்னா அவங்களோட வாழ்க்கை புத்தகமா வருது. தமிழ்ல மட்டுமில்லாம ஆங்கிலம், மலையாளம் மொழிகள்லயும் மொழிபெயர்க்கப்பட்டு வருது. இந்தப் புத்தகத்தைப் பத்தி பத்ரி எழுதியிருக்கற முன்னோட்டம்
திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.
இந்தப் புத்தகம் சென்னை புத்தக காட்சியில வெளியாகுது.

வலைப்பதிவுகள்ல அவங்க அடைஞ்ச வெற்றியை எழுத்துலகத்திலயும் அடைஞ்சி தன்னோட இலட்சியத்தை எட்டுறதுக்கு அவங்களுக்கு இந்த முனியாண்டியோட வாழ்த்துக்கள்


புத்தக அட்டைப்படங்கள்.


Feb 26, 2006

ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை......

நான் தாவரமாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்
- வண்ணதாசன்


முனியாண்டிக்கு பெருசா புத்தகம் படிக்கற பழக்கமெல்லாம் கிடையாது. பொழுது போகலைன்னா பரபரப்பான, சூடான செய்திகளை மேயிறதோட (மாட்டு வாசனை) சரி. இலக்கியம்னா கிலோ எவ்வளவுன்ற வகையில தான் முனியாண்டியோட அறிவு. புவ்வாவுக்காக் அப்பப்ப இங்கிலீசுல இருக்கிற புத்தகத்தோட சில பக்கங்களை தவிர்க்க முடியறதில்லை. மக்க துணைக்கு ஆள் சேக்குறதுக்காக பெரிய பெரிய புத்தகமெல்லாம் குடுத்து படிக்க சொல்லுச்சி. எதாவது காரணம் சொல்லி ஓடிப் போயிருவேன். காரணத்தையெல்லாம் நினைச்சா இப்ப கூட சிரிப்பு வருது. நேரமில்லை(ஊர்மேஞ்சா), காண்சண்ட்ரேசன் போயிரும் (யார் மேல இருக்கிற காண்சண்ட்ரேசன்), நீங்கல்லாம் தீவிரவாதிங்க(உண்மைதான!)..இந்த ரேஞ்சுல போச்சி நம்ம காரணமெல்லாம். அப்ப சுத்தி சுத்தி புத்தகங்களோட சுத்துன மனுசங்க ஏராளம். சில நண்பர்களோட ரூம்ல புத்தகங்களா குவிச்சு கிடக்கும். எனக்கு புத்தக வாசனை அலர்ஜின்னு சொல்லிட்டு அந்த ரூம் பக்கமே போறதில்லை. தங்கமணியோட ரூம்ல கூட(!) நிறைய நல்ல புத்தகங்கள்லாம் இருந்துச்சி(எனக்கு தெரியாது, இது பாலாஜி-பாரி சொன்னது). நான் நல்ல பையனா போய் க்ரீன் டீ போடச் சொல்லி இம்சையை கட்டி அதைக் குடிச்சிட்டு ஓடி வந்துருவேன். அதுவும் இல்லைன்னா ஊர் சுத்தறதுக்கு ஆள் இல்லைன்னு இழுத்துக்கிட்டு போயிருவேன். (ஊரு சுத்துன போட்டோ எல்லாம் பாத்துட்டு வயிறெரிஞ்சவங்க ஏராளம்!!!!!). ஒவ்வொருத்த்ரும் ஒருத்தரை ஒவ்வொரு மாதிரி பாக்கிறோமில்ல. இப்டி புத்தகங்கன்னாலே யாருகிட்டயும் மாட்டாம தப்பிச்சிருக்கேன். ஆனா விதி வலியது. எங்க போனாலும் விடாதுன்ற மாதிரி, இங்க கனடாலயும் வந்து பாலாஜி பாரி சில நூறு கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் வந்து அவர்கிட்ட இருந்த சில புத்தகங்களை கையில திணிச்சிட்டு போயிட்டாரு(இதுக்கு பேரு தான் தொல்லைய கட்டுறது). அதுல ஒரு புத்தகம் "நடுகை" - 96ல வந்த வண்ணதாசனோட சிறு கதை தொகுப்பு. இவரோட முழு சிறுகதை தொகுப்பும் தங்கமணி கிட்ட இருந்தது. (அப்ப கட்டில்ல ஒக்கார்ரதுக்கு இடமில்லைன்னு தூக்கி கட்டிலுக்கு அடியில தள்ளி விட்டுட்டேன்). இப்ப ஊர் சுத்தறதுக்கு துணைக்கு ஆள் இல்லாததனால அதை படிச்சுகிட்டே இருக்கேன்(150 பக்கமுல்ல). இந்த வாரம் வேற எதுவும் எழுதறதுக்கு இல்லாததனால எனக்கு ரொமப பிடிச்சிப்போன இந்த தொகுப்போட முன்னுரையில இருந்து சில வரிகள்.


==========வண்ணதாசனின் நடுகை முன்னுரையிலிருந்து================

தண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன்.
எதிர்பார்த்ததை விட குறைந்த நெரிசல் உடைய பயணங்கள் தான். நெரிசல்களை ஊடுருவிச்செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி அடுத்த வண்டி என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன்.

பிணங்களுடன் பயணம் செய்வது போல பூக்களுடனும் பயணம் உண்டு. வாய் பேச முடியாத ஒரு பெண் பூக்கட்டிக் கொண்டே அவளுடைய பூக்காரச் சிநேகிதனோடு சைகைகளில் பேசிக் கொண்டும் பேச்சை விட அதிகம் சிரித்துக் கொண்டும் இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.

நான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும் தானே பேசவும் எழுதவும் இருக்கவும் சிரிக்கவும் கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகிற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாளரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில் அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டு தானே.

வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது, எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன? இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில் எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக் கொண்டு தானே இருக்கின்றன.

நான் கீரிப் பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது.

நான் பூவெனில் எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது

நான் தாவரமாகவும் மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்

அப்படி அக்கறை கொண்டிருப்பதால் தான் ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா! என்ற கிழவரின் குரலைப் பதிவு செய்ய முடிகிறது.

ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.

ஒருவர் தன் கைவிரல்களை உருவிக் கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் கைவிரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.

யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லோர்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கின்றேன்.

இந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும் எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருகிறேன்

ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

எஸ். கல்யாணசுந்தரம்
15.8.96

Feb 5, 2006

தோற்றுப் போக நமக்கு அனுமதியில்லை.....அறிவொளி இயக்கம் -2

"மேல் தட்டு மக்கள் கல்வி பெறுவதும் ஒடுக்கப் பட்ட மக்கள் கல்வி பெறுவதும் ஒன்றல்ல.அவர்களின் கல்வி அவர்களுக்கே பயன்படும். ஆனால் பாட்டாளிகள் கற்பது சமூகத்தை மாற்றும்." --பாவ்லோ ப்ரையர்.

ஊர் கூடி தேர் இழுக்கறதில, சாமியக் கொண்டு போய் கரை சேக்கலன்னா நைட்டு வந்து கண்ணைக் குத்திருவாருன்ற பயத்தில எப்டியாவது எவனையாவது உள்ள தள்ளியாவது தேர உருட்டி கொண்டு நிலை சேத்துருவாங்க.

இத எதுக்கு சொல்றன்னா, சாதாரணமா நாலு அஞ்சி பேரு சேந்து செய்ற வேலையிலயே ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்துக்கிட்டு கடைசியில ஏண்டா இந்த வேலைய ஆரம்பிச்சோம்ன்ற நிலமைக்கு வந்திருவோம்

ஆனா இங்க(அறிவொளி இயக்கம்) சில லட்சம் பேரு சேர்ந்து, அதுவும் கலெக்டர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டம், ஒன்றியம், பகுதி, கிராமம், வார்டு அப்புறம் இடையில இந்த ஆபிஸ், அந்த ஆபிஸ் இது போதாதுன்னு கரை வேட்டிங்க கடைசியா திருவாளர் பொதுஜனம் அப்டிற ஏழெட்டு அடுக்கு அதிகார வரிசை தாண்டியும் இந்த இயக்கம் ஜெயிச்சிருக்கு. ஏகப்பட்ட பரிசோதனைகள், முயற்சிகள், தோல்விகள், வெற்றிகள் ன்னு கடந்து வந்திருக்கு. இதுக்கு பின்னாடி இருக்கறவங்களோட முயற்சியையும் அர்ப்பணிப்பையும் யாரும் சாதாரணமா எடுத்துக்க முடியாது.

இதுல ஈடுபட்ட அரசு ஊழியர்களாகட்டும் இல்ல ஒரு பைசா வாங்காத தன்னார்வலர்களாகட்டும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம வேலை பாத்திருக்காங்க. என்ன பெரிய வேலை, போயி படிக்க தெரியாதவங்களுக்கு கத்துக் குடுக்கணும அவ்வளவுதான அப்டின்னு ஈசியா சொல்லிரலாம் (சொல்றதுக்கு காசா பணமா). சரி அத ஈசின்னே எடுத்துக்கிட்டாலும், இங்க பிரச்சனை என்னன்னா படிக்கத் தெரியாதவங்கள படிக்க கூட்டிட்டு வர்றது. நாலு கழுத வயசாயிருச்சு (இவங்க குறி வச்சது 15-35 வயசை) எனக்கு, இனிமே படிச்சு என்ன கிழிக்க போறேன்னு இழுத்து போர்த்திட்டு தூங்குறவன நைட்டு படிக்கிறதுக்கு வான்னு எப்டி கூப்பிடறது. ஏனுங்க நான் நல்ல வாத்தியாரு, நல்லா பாடம் எடுப்பேன் அப்டின்ற பூச்சாண்டியெல்லாம் பலிக்காது. (இதயெல்லாம் பாத்து சுணங்குறவங்கள அப்டியே விட்டுறாம, இந்த என்ஜினை இழுத்துட்டு போனவங்கள்ல முக்கியமான டாக்டர். ஆத்ரேயா சொன்ன வார்த்தைகள் தான் " தோற்றுப் போக நமக்கு அனுமதி இல்லை" )

ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் குடுத்த, இவங்களோட ஆரம்பமே மெகா அமர்க்களமா இருந்திருக்கு. எத்தன பேரு படிக்காதவங்க, மத்தபடி யார் யாரு எந்த எத்தன பேருக்கு சொல்லிக் குடுக்கணும் அப்டின்ற கணக்கெடுப்பு எல்லாம் "ஒரே" நாள்ல முடிச்சிருக்காங்க. இது நிச்சயமா ஒரு பெரிய சாதனைதான்.

சரி இவங்க எப்டி மக்களை ஒன்னு திரட்டுனாங்க? ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் அப்டினின்னு ஒரு சொலவடை கிராமத்தில சொல்லுவாங்க. அத மனசில வாங்கிட்டாங்களா என்னன்னு தெரியல. "புத்தகம் கையில் எடுத்து விடு, புத்தொரு ஆயுதம் ஆகிடும் உனக்கது" அப்டின்னு ஆட்டம் பாட்டம் போட்டு தான் இவங்க தூங்குறவன எழுப்பி படிக்க வச்சிருக்காங்க. உனக்கு பாட்டு புடிக்குமா, இந்தா பாடுறோம். உனக்கு பாடத் தெரியுமா, உன்னோட பாட்ட நீ பாடு நாங்க கேக்குறோம். கத சொல்ல தெரியுமா சொல்லு. விடுகத தெரியுமா, போடு. டான்ஸ் புடிக்குமா, இந்தா அதுவும் இருக்கு அப்டின்னு தான் மக்களை நெருங்கிருக்காங்க. இதுக்காக சைடுல ஒரு பெரிய கலைஞர்கள் கூட்டமும் உருவாகி நின்னுருக்கு. மேடையில நின்னு பாடக்கூடியளவுக்கு தைரியம் உள்ள ஒரு லட்சம் பேரை இந்த இயக்கம் உருவாக்கிருக்குன்னா அது சாதாரணமான விசயமில்லை. நம்மல்ல எத்தனை பேரால இன்னைக்கு மேடையில நின்னு கூச்சப் படாம பேச முடியும் சொல்லுங்க.

அப்புறம் இங்க சொல்ல வேண்டிய முக்கியமான விசயம் அறிவொளி வாத்தியார்களப் பத்தினது. யண்ணே, யக்காவ் அறிவொளிக்கு வந்து சேருன்னு இழுத்து பிடிச்சி பாடம் நடத்துனது எல்லாம் 9-10 வரைக்கும் படிச்ச, பாஸான, பெயிலானவங்க தான்.(மொத்தத்திலயே 200 பேரு தான் இதுல காலேஜ் எட்டிப் பாத்தவங்க. படிச்சவங்கள்லாம் அவங்க அவங்க வேலையப் பாக்க போயிட்டாங்க போலருக்கு). இதுல இன்னும் முக்கியமானது பொம்பளைங்களோட பங்கு. அவங்க இத சமூகம் தங்களுக்கு தந்த கவுரவமா நினைச்சி ஒரு பெரிய தனி ஆவர்த்தனமே நடத்திருக்காங்க. கரெக்டா சொல்லணும்னா, இவங்க தான் என்ஜினா நின்னு இழுத்துகிட்டு போயிருக்காங்க.

"நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எரிவது மேல்" அப்டின்றத மனசில போட்டுக்கிட்டு சோர்வுக்கும் நம்பிக்கைக்கும் நடுவேயான ஒரு பெரிய போராட்டத்தோட அறிவொளி அடுத்த கட்டங்களையும் தொட்டிருக்கு. தொடர் கல்வி இயக்கம், வாசிப்பு இயக்கம் நூலக இயக்கம்,வாசகர் வட்டம்னு அடுத்தும் சாதனைகளை படச்சிருக்கு. இந்த கட்டத்தில முக்கியமா நிறைய புத்தகங்களை தயாரிச்சி வெளியிட்டிருக்காங்க. ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு வாசகன்றத குப்பையில தூக்கிப் போட்டுட்டு, ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு புத்தகம் அப்டின்னு பல புத்தகங்களை கொண்டு வந்ததும் இல்லாம அத லட்சக் கணக்கில(தோராயமா பத்து லட்சம்) வித்தும் காண்பிச்சிருக்காங்க. படிக்க வந்தவங்க சொன்ன கதைகள், பாட்டுகள், விடுகதைகள் எல்லாமே புத்தகத்தில ஏறிருக்கு.

இவ்வளவு நடந்தும் தொக்கி நிக்கிற விசயங்கள் இதுல நிறைய இருக்கு..

இன்னொரு அறிவொளி இயக்கம் இங்க தேவையில்லைன்ற ஒரு நிலை இருக்கா அப்டின்னா அது இல்ல.

எவ்வளவோ பரிசோதனைகள், எவ்வளவோ முயற்சிகள் அப்டியே நட்டாத்தில நின்னு போச்சி. அதெல்லாம் ஆவணப் படுத்தக் கூட இல்லை. ஒருக்கா மறுபடி இதே மாதிரி ஒரு திட்டம் வந்துச்சின்னா (ஒரு நப்பாசை), மறுபடியும் ஆரம்பத்தில இருந்து தான் தொடங்கணும்.

எவ்வளவோ கலைஞர்கள், இந்த இயக்கத்தோட தூண்களா நின்னவங்க, இயக்கம் இழுத்துக்கிட்டு கிடந்தப்ப எல்லாம் ஆக்ஸிஜன் குடுத்தவங்க அப்டியே காணாம போய்ட்டாங்க.

நிறைய பெண்கள், வீட்டை விட்டு வெளிய வந்து நிறைய பண்ணியிருக்காங்க. எவ்வளவோ பேர் கலைஞர்களா, ஆளுமை கொண்டவர்களா இந்த இயக்கத்தோட போக்க நிர்ணயியம் பண்றவங்களா இருந்திருக்காங்க. ஆனா அறிவொளிக்கப்புறம் மறுபடியும் அவங்களோட சிறக சுருக்கிக்கிட்டு வீடுகள்லயே முடங்கிட்டாங்க

இது மாதிரி இன்னும்.............


குறிப்பு: இன்னும் அறிவொளி மிச்சம் மீதி இருக்கான்னு கேக்குறவங்களுக்கு:
1. அறிவொளி இயக்கத்தில தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தோழர்கள் முக்கியமான உந்து சக்தியா நின்னு வேலை பாத்திருக்காங்க. அவங்களோட முகவரி: தலைமை அலுவலகம், 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 14; 46 இரண்டாவது தெரு, க.கீ. கார்டன்ஸ், ரெட்டியார்பாளையம், பாண்டிச்சேரி-10
2. சில மாவட்டங்கள்ல (கடலூர், விழுப்புரம்..) சமீபகாலங்கள்ல நிறைய இரவுப் பள்ளிகள் தொடங்கி நடந்துகிட்டிருக்கு.(aidindia & DYFI சார்பான்னு நினைக்கிறேன்)

Jan 29, 2006

பட்டா படி

"பட்டா படி" -ன்ற இந்த வார்த்தைகள பத்தி இங்க எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல. பட்டான்னா நிலத்துக்கு குடுக்கிற டாகுமெண்டு; படின்னா படிக்கிறது அப்டின்றது தாண்டிப் பாத்தா இந்த வார்த்தைகளோட வீச்ச யோசிச்சு பாக்குறதுக்கே மலைப்பா இருக்கு.

" சந்திரன் மேல கால வச்ச காலம்; இன்னும் கைநாட்டு போடுறது அலங்கோலம்" அப்டின்ற குத்துப்பாட்டோட பாமர மக்களோட மொழியை அங்கீகரிச்சு, இந்த வார்த்தைகள் சுத்தி வந்த தூரமும், உழுது போட்ட நிலங்களும் அதிகம். கடைக்கோடில ஆடு மேய்ச்சிக்கிட்டு இருக்கிற அலமேலுல ஆரம்பிச்சு, காலேஜ் புரொபசருங்கள தாண்டி, நான் பொறந்த மண்ணுக்கு எதாவது செய்யணும்னு நினைச்ச பலரை உள்ளடக்கி, Don't try to teach me ன்னு எதுத்து நின்ன கலெக்டரு, வாழ்க்கையில எனக்கு கிடைச்ச வெகுமதின்னு அழுத கலெக்டரு, எனக்கும் என் கட்சிக்காரனுக்கும் என்ன லாபம்னு வந்து குடைஞ்சு பாத்த மந்திரின்னு இந்த சுனாமி தாக்குன மக்களோட எண்ணிக்கை நிஜமாவே அதிகம். ரமணா ஸ்டைல்ல இல்லாட்னாலும், தோராயமா சொல்லணும்னா, 10 மாவட்டம் (மத்த மாவட்டங்கள்ல நடைமுறைப் படுத்தப் பட்டுச்சான்னு தெரியல), 25 லட்சம் மக்கள், 2.5 லட்சம் தன்னார்வலர்கள், 10,000 கலைஞர்கள்ன்னு பரந்து நின்ன ஒரு இயக்கத்தோட முதல் வார்த்தைகள் தான் இந்த "பட்டா படி".


நினைவாய், பழங்கனவாய்ன்னு எல்லாருமே (இதுல இருந்தவங்க எத்தனை பேரு இன்னும் துடிப்பா இருக்காங்கன்னு தெரியல) மறந்து போன இந்த இயக்கத்தோட பேரு "அறிவொளி இயக்கம்". தொண்னூறுகளடோ ஆரம்பத்தில National Literacy Mission டோட ஒரு பகுதியா தமிழ்நாட்டுல புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர்(நம்ம மாவட்டங்கோ), வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வெலி, ம்துரை, தஞ்சாவூர் அப்புறம் பாண்டிச்சேரின்னு சில மாசங்களுக்கு( அப்புறம் வருசங்களுக்கு) ஒரு பெரிய திருவிழாவையே நடத்திக் காட்டுனாங்க.

இப்ப என்ன எழவுக்கு இதெல்லாம்ன்னு நீங்க கேக்குறது ஞாயந்தான். சில வருசங்களுக்கு தங்களோட நேரம், காலம், பதவி, பணம்னு தூக்கிப் போட்டுட்டு தலையில சிலேட்டையும் புத்தகத்தையும் தூக்கிக்கிட்டு பஸ் போகாத ஊருக்கெல்லாம் போய் என்னத்தையாவது இந்த மக்களுக்கு பண்ணனும்னு சுத்துனவுங்க இந்த தமிழ்நாட்டுல சமீபத்தில கூட ஆயிரக்கணக்கில இருந்திருக்காங்கன்னு சொல்றதுக்காகத் தான் இந்த வெளக்கம் எல்லாம்.

என்னளவுல நான் வருத்தப் பட்ட, படுற விசயங்களல, அறிவொளி இயக்கத்தில சேர முடியல, எதுவும் பண்ண முடியலன்றதுன்றதும் ஒன்னு. அப்ப பன்னெண்டாப்பு படிச்சிக்கிட்டு இருந்ததா ஞாபகம்.

எங்க போனாலும் விடாது கருப்புன்ற ரேஞ்சுல, கனடா வந்ததுக்கப்புறமும் ஒருத்தர் கையில ஒரு புத்தகததை திணிச்சிட்டு போனாரு. எல்லாம் அதனால வந்த வினை.

புத்தகத்தோட பேரு

"இருளும் ஒளியும்" - அறிவொளி இயக்க அனுபவங்கள்
அப்டின்னு ச.தமிழ்செல்வன் எழுதுன புத்தகம்.

இவரு திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளரா இருந்திருக்காரு. தான் அறிவொளிய எதிர்கொண்ட விதத்தையும், கத்துக் கொடுக்கப் போய்ட்டு, கத்துக்கிட்டு வந்த விதத்தையும் சொல்லிருக்காரு. என்னோட குற்ற உணர்ச்சியை இன்னும் கொஞ்சம் கிளறி விட்டுட்டாரு.

பல சமுக அக்கறையுள்ளவுங்க பங்கெடுத்துக்கிட்ட இவ்வளவு முக்கியமான ஒரு இயக்கத்தை பத்தின வேர்களையும், காலடித்தடங்களையும் சாதரணமா நீங்க தேடுனீங்கன்ன, ஒங்களுக்கு பெரிய ஏமாத்தம் தான் மிஞ்சும். இத்தனைக்கும் சில பேர் போன எழுத்தாளர்களும் இந்த இயக்கத்தில பங்கெடுத்திருக்காங்க. அப்படி இருந்தும் ஏனோ இது அவ்வளவு முக்கியமில்லைன்னு விட்டுட்டாங்க போல.இந்த புத்தகம் கூட ஒரு ஆவணமா இல்லாம, அனுபவங்கள தான் பகிருது.


தமிழ்ச்செல்வன் சொல்றவகையில பாத்தா இந்த இயக்கத்த பத்தி மொத்தம் மூணு புத்தகமும் (இந்த புத்தகத்தையும் சேத்து) சில கட்டுரையும் தான் மிஞ்சும் போல. மீதி இருக்கிற ரெண்டு புத்தகத்தில ஒன்னு புதுக்கோட்டை கலெக்டரா இருந்த ஷீலா ராணி சுங்கத்தும், மாநில ஒருங்கிணைப்பாளரா இருந்த ஆத்ரேயாவும் சேந்து எழுதுன Literacy and Empowerment(இதப் பத்தின விமர்சனம்). இன்னொன்னு புதுக்கோட்டை அறிவொளியில இருந்த எழுத்தாளர் ஆர்.நீலா எழுதுன "பாமர தரிசனம்".


தமிழ்ச்செல்வனோட இந்த புத்தகத்தை விமர்சனம் பண்றதுக்கோ, இல்லை அதப் பத்தி எழுதற அளவுக்கோ எனக்கு அறிவில்லை. ஆனாலும் என்னைய அறஞ்ச சில வரிகள மட்டும் இன்னொரு பதிவுல போடறேன்.