Mar 3, 2007

இந்திய ஹை-கமிஷனரும் நம்மூரு கரிசக் காடும்.

போன வாரம் இந்திய ஹை-கமிஷனர் (பொறுப்பு) நானிருக்கற இந்த ஊருப் பக்கமா வந்திருந்தாரு. வந்தவரு "இந்திய பொருளாதார முன்னேற்றமும் இந்திய-கனேடிய உறவும்" ன்ற தலைப்புல ஒரு மணி நேரம் பேசினாரு. ரொம்ப பொதுவான பேச்சா இருந்தாலும் சில புள்ளி விபரங்கள் குடுத்தாரு. ஏற்கனவே சிலது தெரிஞ்சிருந்தாலும், சிலது ஆச்சரியமாவும் சிலது அதிர்ச்சியாவும் இருந்தது. அதுல

ஆச்சரியங்கள்:

1. இந்தியாவுல மாசத்துக்கு 6 மில்லியன் செல் போன் விற்பனையாகுதாம்

2. இந்தியாவோட வளர்ச்சி 8% த் தொட்டு போய்கிட்டு இருக்கு. அடுத்த இருபது வருசங்களுக்கான எதிர் கூறல்லயும் இது 7-8 சதவீதம் வரைக்கும் இருக்கும்ன்னு கணிச்சிருக்காங்க

3. இந்தியாவோட சந்தை 65% உள்நாட்டை சார்ந்திருக்கு. அதனால தொடர்ந்த வளர்ச்சியில பெரிய பிரச்சனை இல்லை.

4. வறுமைக் கோட்டு எல்லை வந்து கணிசமா குறைஞ்சிருக்கு( 35ல இருந்து 25ன்னு ஞாபகம்)


அதிர்ச்சிகள்:

1. இந்தியாவோட மத்திய தர வர்க்கம் 30 மில்லியன். ( ஒரு 10 மில்லியன் பணக்காரங்கன்னு வச்சிக்கிட்டாலும் மீதி இருக்கற 60-70 மில்லியன் ஏழைகளா? )

2. தொழில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுறதினால நிறைய விவசாயிங்களால (விவசாயத்தை விட்டதால) இப்ப வறுமைக் கோட்டு எல்லைய தாண்ட முடிஞ்சிருக்கு. அரசாங்கத்தோட விருப்பமும் அதுதான். இங்க என்னனா அரசாங்கமே விவசாயத்த வேணாம்னு விடச் சொல்லுது!!!



இவரோட இந்த பேச்சுக்கப்புறமா அங்க இருந்தவங்கள்ல ஒருத்தரு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாரு.

எல்லாரும் விவசாயத்தை விட்டுட்டு வேற வேலைக்கும் போய்ட்டா உங்களோட சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க. அதுக்குி இவரு வழவழா பதில் ஒண்ணு எடுத்து விட்டாரு. இந்தியாவோட மக்கள் தொகை வளர்ச்சி கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கறதால நிறைய பேரு விவசாயத்தை விட்டாலும் எந்த பிரச்சனையுமில்ல. எங்களுக்கு இப்போதைய தேவையும் முக்கியமும் தொழில் துறை முன்னேற்றமும் வளர்ச்சியும் தான், விவசாயமில்ல.





விவசாயக் குடும்பத்தில பிறந்த எனக்கு பெரிய அதிர்ச்சியா இருந்தது. ஏற்கனவேெ எங்க கிராமத்தில என்னோட தலைமுறைல விவசாயத்துக்கு போனவங்க யாருமில்ல. எல்லாம் ஊரை விட்டு வெளியேறிட்டோம். இதுல அரசாங்கமும் அதை ஆதரிக்குதுங்கும் போது ஒண்ணும் சொல்ல வரலை.

ஆனா இதுலயும் ஒரு நன்மை இருக்குன்னு நான் நினைக்கிறேன். இப்போதைய விவசாயம் அதிகமான நவீன தொழில் நுட்பங்களை (டிராக்டரையும், பூச்சி மருந்தயும் தவிர்த்து) பயன் படுத்தலை. இதுக்கான முக்கிய காரணின்னு பார்த்தா விவசாயம் பண்ணப் படுற இடத்தோட அளவு. ஒவ்வொருத்தரும் விவசாயம் பண்றது சில ஏக்கர்ல தான்; அதுவும் ஒரே எடத்தில இல்லாம பிரிஞ்சி பிரிஞ்சி இருக்கும். இதனால மத்த நாடுகள்ல உபயோகப்படுத்தற எந்த உபகரணங்களும் நமக்கு லாபகரமா இருக்காது.
நமக்குன்னு சிலதை நம்ம மக்களே இப்பப்ப வடிவமைச்சி உபயோகப்படுத்திக்கிட்டு இருக்காங்க. ஆனாலும் அதினால வர்ற பயன்னு பாக்கும்போது ரொம்ப கம்மியா தான் இருக்கு. "உழுதவன் கணக்கு பாத்தா உழக்கு கூட மிஞ்சாது" இன்னும் உண்மையாதான் இருக்கு. இந்த சூழ்நிலையில நிறைய பேரு விவசாயத்தை விடும்போது பண்ணை முறை விவசாயத்துக்கு நிறைய வாய்ப்புகள் இருக்குன்னு நினைக்கிறேன். அது ஒரு வேளை லாபகரமாவும் தன்னிறைவ தக்க வைச்சிருக்கற வாய்ப்புகளையும் தரலாம்.

பட்டுப் போயிருந்த முனியாண்டியோட விவசாய கனவு கொஞ்சம் கொஞ்சம் துளிர்க்கற மாதிரி தெரியுது. பாக்கலாம்.

11 comments:

இளங்கோ-டிசே said...

/பட்டுப் போயிருந்த முனியாண்டியோட விவசாய கனவு கொஞ்சம் கொஞ்சம் துளிர்க்கற மாதிரி தெரியுது. பாக்கலாம்/
அப்படியே நீங்கள் விவசாயம் செய்யப் போனால் எனக்கும் பக்கத்தில் கொஞ்ச நிலம் ஒதுக்கி வைத்துக்கொள்ள்ங்கள். என்னுடைய சிறுவயதுக்கனவுகளில் இதுவுமொன்று.
.....
அதுசரி சும்மா முனியாண்டியாய் இருந்த நீங்கள் எப்போது 'உடுக்கை முனியாண்டி'யாக மாறினீர்கள்? எங்களுக்கெல்லாம் சொல்லவேயில்லையே :-).

- உடுக்கை முனியாண்டி said...

டிசே இந்தப் பக்கமா வந்ததுக்கு நன்றிங்க

உங்களுக்கும் இடம் ஒதுக்கீரலாம். உங்களுக்கு எத்தனை ஏக்கர் வேணும்னு இப்பவே சொல்லிருங்க

அனானி முனியாண்டிகளை தவிர்க்கறதுக்காக உடுக்கை முனியாண்டியாக வேண்டியதாகிடுச்சி

பத்மா அர்விந்த் said...

விவசாயம் துறையில் இருப்பவர்களுக்கு குறைந்த விலையில் அரசு காப்பீடு தர முயலவேண்டும். இதனால் ஒருவேளை விளைச்சல் சரியாக வராவிட்டால், மழை இல்லாமல் நட்டம் வந்தால் ஈடு செய்ய கைகூட வேண்டும்.
எந்த பகுதியில் வெள்ளம் வரும், எந்த பகுதி நல்ல பகுதியாக இருக்கும் என்று விவசாயத்தோடு நவீன தொழில் நுட்பங்கள் (GIS) போன்றவை சேர வேண்டும்.
பழங்களின் ஊடாக தடுப்பூசி ஆராய்வு மையங்கள் (பாம்பேயில் கூட இருக்கிறது) விவசாயிகளுக்கும் அதை தெரியப்படுத்தி, இயற்கை முறை விவசாயம் போன்றவற்றையும் ஊக்குவிக்க வேண்டு

Thangamani said...

அப்படியே நமக்கும்!

பத்மா அர்விந்த் said...

பூமியும் வானமும் சொந்தமாக இருக்கும் போது தனியே நிலம் தேவை இல்லைதானே:)

- உடுக்கை முனியாண்டி said...

கருத்துக்களை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி பத்மா.

விவசாயத்தில, விவசாயத்துக்குன்னு பண்றதுக்கு நிறைய இருக்கு பத்மா. ஆனா இப்ப நிலைமையில அரசாங்கம் விவசாயம்னு ஒன்னு இருக்குன்றதயே மறந்தது தான் பிரச்சனையே.அரசியல்வாதிகளுக்கு விவசாயிங்க கிட்ட இருந்து வருமானம் எதுவும் இல்லைன்றதும் ஒரு காரணமா இருக்கலாம்.

ஆனா நான் விவசாய உறவோட இருந்தப்ப(!!!!!) சில நல்ல அரசுத்திட்டங்கள்லாம் வந்தது. ஆனா ஏன் அதெல்லாம் முழுமூச்சோட நடைமுறைப்படுத்தப்படலைன்னு தான் தெரியலை. உதாரணமா இயற்கையோட சார்ந்த பூச்சி ஒழிப்பு முறைய அமல் படுத்தினாங்க. அதிலிருக்கற சில குறைகளை களைய முயற்சிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு அது ஒரு பெரிய வெற்றியாகியிருந்திருக்கும்.

அதோட சின்ன சின்ன விவசாய பொருளாதார மண்டலங்களை உருவாக்குறதுக்கான திட்டம் கொண்டு வந்தாங்க. அது ஒரு நல்ல திட்டம். ஒவ்வொரு கிராமத்தையும் பொருளாதார தன்னிறைவைக் கொண்டு வர்றதுக்கான ஒரு முன்மாதிரி அது. ஆனா அதையும் அமல் படுத்த கொஞ்சம் கூட முயற்சி செய்யலை.

இப்ப இருக்கற நிலைமையில கொஞ்சமாவது விவசாயம் பத்தி யோசிப்பாங்களான்றது பெரிய கேள்வி தான்.



தங்கமணி,
வாங்கய்யா வாங்க.
இன்னைக்கு வீட்ல பேசிக்கிட்டு இருக்கும்போது இதைப்பத்தி கேட்டேன். ஊருக்கு மேற்கால படர்ந்து விரிஞ்சிருந்த நிலத்தையெல்லாம் மதுரைக்காரங்க (!!!) ஏற்கனவே வாரிட்டாங்கலாம். கிழக்க மட்டும் கொஞ்சம் பாக்கி இருக்காம். உங்களுக்கும் சேத்து வளைச்சி போட்டுறாலாம்.

Anonymous said...

முனியாண்டி

அப்பாடா, என்னடா தொழில் செய்யறதுன்னு நினைத்தேன். நன்றி.

நல்லா நிலத்தைப் பார்த்துப்பேன்.


அப்படியே நமக்கும் உமக்குப் பக்கத்துல, என்ன!!


சரியா.

சாரா

துளசி கோபால் said...

அப்படியே நமக்கும் ஒரு துண்டு போட்டு வச்சுருங்க. வீல்சேர்லே உக்கார்ந்து
பார்க்குற வேலை இருக்கும்தானே?

பத்மா,

//பூமியும் வானமும் சொந்தமாக இருக்கும் போது
தனியே நிலம் தேவை இல்லைதானே//

வானம் மட்டும்தான் சொந்தமா இருக்கு:-)))))

பூமி? முந்தியாவது ஒரு ஆறடி. இப்ப அதுவுமில்லை. மின்மயானம் வந்துருச்சு.

- உடுக்கை முனியாண்டி said...

சாரா உங்களுக்குமா!!!
சரி வந்து சேந்துக்கோங்க.

துளசி இந்தப் பக்கமா வந்ததுக்கு நன்றி.
எங்கூரு பெரியோடை, பெரிய கண்மாய் பக்கமா இருந்த நிலத்தையெல்லாம் யாரோ வலைச்சி போட்டுட்டாங்களாம். :( அதான் இப்ப வெற எங்க எடம் வாங்குறதுன்னு யோசிச்சி கிட்டு இருக்கேன்.

வாங்குற எடத்தில உங்களுக்கும் சேத்து துண்டு போட்டுடறேன். சரியா!!!

Unknown said...

Vanakam Thiru Muni avargaleee...
Good blog !
The recent news about the suicide of farmers in India, online trading of groceries, Relinace's venturing into vegetables/fruit sale (like walmart) in large scale are few of the depressing things to small scale farmers.
But in longturn, if these lands can be converted into big farms, with the modern technology, it is going to be a Big buisness. who know reliance may venture in agricultre also. But there are many problem like water resource, pesticides, quality, yield etc....
Hope in future with new technology large scale cultivation will happen.
some link reg these issues:
http://www.blonnet.com/2006/11/04/stories/2006110405820100.htm
http://video.google.ca/videoplay?docid=-6926416900837431282&q=india

மணியன் said...

பன்னாட்டு வணிகமையங்கள் (வால்மார்ட்) வரும்வேளையில் பரந்த அளவு கொள்முதலும் நவீன விவசாயமுறைகளும் உங்கள் பண்ணை விவசாயத்திற்கு துணைபோகும். இடைத் தரகர்கள் இல்லாமல் விவசாயி தனிநபர் வருமானமும் பெருகும்.கூட்டுறவு விவசாயம் நடைமுறைக்கு வரும்..
இந்த வளர்ச்சிமோகத்தில் இயற்கை மாசுபடுதலும் விளைநிலம் இல்லாத, மாற்றங்களுக்குத் தயாராகாத, விளிம்பு மனிதர் மேலும் வறுமையில் உழல்வதும் நிகழாமல் அரசு கவனித்துக் கொள்ள வேண்டும்.