நண்பரோட குட்டிக்குழந்தைக்கு துணி எடுக்க போயிருந்தோம். குட்டீஸ் பிரிவுல இருந்த துணியெல்லாம் ரெண்டே ரெண்டு கலர்லதான் இருந்தது. ஒன்னு புளு இன்னொன்னு பிங்க். மீதிக் கலர்லாம் இல்லைன்னு கூட சொல்லலாம. அந்தளவுக்கு கம்மி. இதுவே எனக்கு அதிர்ச்சியாவும் ஆச்சரியமாவும் இருந்தது. நண்பர்ட்ட இதைப்பத்தி கேட்டா பையனுங்கன்னா புளு கலர், பொண்ணுங்கன்னா பிங்க் கலர் அப்டின்னாரு. கடையில எனக்கு பிடிச்ச டிசைன்லாம் புளு கலர்ல தான் இருக்கு. ஆனா நாம நினைச்ச மாதிரியெல்லாம் இங்க டிரெஸ் மாட்டி விடக்கூடாதுன்னுட்டாரு.
எனக்கு இன்னும் இந்த வித்தியாசம் விளங்கமாட்டேங்குது. ஒரு குழந்தைக்கு என்ன கலர் டிரெஸ் நல்லா இருக்கோ அதை மாட்டி விடலாம்ல. இல்லை கலருக்கு ஒன்னா போட்டு விடலாம்ல. அதை விட்டுட்டு இது என்ன திருகுதாளம்னு தெரியலை. குழந்தையை ஆண்/பெண்ணுன்னு வித்தியாசப் படுத்தி காட்டணும்ன்றதுக்காக இப்டியெல்லாம் பண்றது சரியா தெரியலை.

இந்தியாவுல இந்த மாதிரி வம்பெல்லாம இல்லைன்னு நினைக்கிறேன்.குறைஞ்ச பட்சம் எனக்கு அந்த மாதிரி அனுபவம்லாம் இல்லை. ஏன்னா நாலு வயசு வரைக்கும் "free bird" தான்.
சரி, எதுக்காக இந்த கூத்தெல்லாம் பண்றாங்கன்னு தேடுனா வர்ற விபரம் பெரிய கூத்தா இருக்கு. இந்த கலர் கண்ணாமூச்சியெல்லாம் இப்ப சமீபத்தில 20ம் நூற்றாண்டுலருந்து தான் ஆரம்பிச்சிருக்காங்க. அதுலயும் முதல்ல பையன்களுக்கு பிங்க் பொண்ணுங்களுக்கு புளுன்னு பிரிச்சிருக்காங்க. அவங்க அப்ப பிரிச்சதுக்கு ஒரு கதை வேற கட்டி வைச்சிருக்காங்க. . பிங்க் கலர், சிவப்பை வெளிற வைக்கிறதினால வருது. சிவப்புன்றது தெளிவு, வீரம், கோபம் இதைக் குறிக்குதாம். அதனால இது ஆணுக்காம். புளு கலர் அமைதியைக் குறிக்குதாம். அதனால இது பெண்ணுக்காம்.
இந்த நடைமுறைக்கு என்ன ஆச்சின்னு தெரியலை. திடீர்ன்னு பாத்தா இரண்டாம் உலகப் போருக்கப்புறமா இது அப்டியே உல்டாவாக்கிட்டாங்க. இப்ப வந்து ஆண்களுக்கு புளு, பெண்களுக்கு பிங்க்.
எவனுக்கோ என்னவோ ஆகி ஏடாகூடமா எதாவது பண்ணுனா அதை அப்டியே காப்பியடிக்கிறது நல்லாவா இருக்கு.
நம்மூர்ல மட்டும் தான் சுடலை மாடனும் அய்யனாரும் யாருக்குமே தெரியாம சிவனுக்கு சொந்தக்காரணாவங்கன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இந்த கலர் கலட்டாவைப் பாத்தா இந்த மாதிரி திருகுதாளம் எல்லா ஊருலயும் இருக்கும் போலருக்குது.
கலர் கலரா கலக்கவேண்டிய குழந்தைங்க தான் பாவம்!!!!