அறிவியல் பத்தி எழுதற வலைப்பதிவுகள்ல
scienceblogs.com முக்கியமான ஒரு தளம். இது ஒரு கூட்டு வலைப்பதிவுத் தளம். இந்தப்பதிவுல தான் இப்ப ரெண்டு நாளா பதிவுரிமைப் பிரச்சனை கொடி கட்டி ஆடிக்கிட்டு இருந்தது/இருக்கு.
செல்லின்ற பதிவர்
'சாராயம் பழங்களின் ஆரோக்கியத்தை கூட்டுதா' ன்றதை பத்தி ஒரு பதிவு போட்டிருந்தாங்க. இந்த பதிவுக்கு அடிப்படையா இருந்த மூலக் கட்டுரையில இருந்து ஒரு வரைபடத்தையும் அதில இணைச்சி தன்னோட பதிவை எழுதியிருந்தாங்க. வரைபடத்தை இணைச்சதில தான் பிரச்சனையே ஆரம்பிச்சது. அறிவியல் துறையில் இந்த மாதிரி தரவுகளை விளக்கறதுக்காக பயன்படுத்தறது வழக்கமான் ஒன்னு தான். 'நியாயமான உபயோகத்திற்கானதுன்னு' யாரும் அவ்வளவு பெருசா எடுத்துக்க மாட்டாங்க. எதாவது பண ஆதாயம் இருக்குன்னா எழுது அவங்களோட சம்மதம் வாங்கணும். சம்மதம் வாங்கி உபயோகப் படுத்தறது சாதரணமான ஒன்னு தான். முழுசா காப்பியடிக்கறது இந்த கணக்கில வராது அது தனிக் கிளை.
இங்க பிரச்சனை என்னன்னா, மூலக்கட்டுரைய வெளியிட்ட இதழ்க்குழுமத்திலருந்து இந்தப் பதிவருக்கு உடனடியா அந்த வரைபடத்த எடுக்க சொல்லி ஓலை வந்திருச்சி. இவங்க பிரச்சனைய பெருசு பண்ண வேணாமேன்னு அதை எடுத்துட்டு அவங்ககிட்ட அனுமதி வேண்டி மெயில் அனுப்பிட்டாங்க.
இடையில மற்ற பதிவர்கள், அறிவியல் துறையில, தரவுகளை மூலக் கட்டுரையில இருந்து எடுத்து கையாள்றது சட்டபூர்வமானதுதான், ஆனா படங்களையோ இல்லை வரைபடங்களையோ உபயோகிக்கமுடியாதுன்னு சொல்லவும் இவங்க அந்த வரைபடத்த தரவுகள்லருந்து எக்செல் மூலமா மீள் உருவாக்கி பதிவுல இணைச்சிட்டாங்க.
இதுக்கு நடுவுல மத்த பதிவர்கள் பிரச்சனைய அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. எப்படி தரவுகளை உபயோகப்படுத்தறதை மிரட்டலாம்னு ஏகப்பட்ட பேரு பதிவு எழுதிட்டாங்க. இதுல அந்த குழுமத்தில இருந்து வர்ற மத்த இதழ்களோட ஆசிரியர் குழுவில இருந்தவங்களும் அடக்கம். மூலக் கட்டுரைய வெளியிட்டிருந்த வெய்லி(Wiley) நிறுவனம் அறிவியல் துறையில புகழ் பெற்ற ஒரு நிறுவனம். பிரச்சனை பெருசாகறதை பாத்து அந்த நிறுவனம் இப்ப
மன்னிப்பு கேட்டிருக்கு. பதிவரும் சரின்னு விட்டுட்டாங்க.
ஆனா மன்னிப்புக்கடிதத்தில இருந்த சில வாசகங்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டுருச்சி. அந்த கடிதத்தில சம்மதம் கேட்டிருந்தா நாங்களே தந்திருப்போம்லன்ற மாதிரி எழுதியிருக்காங்க. 'நியாயமாக உபயோகப்படுத்தல்' அப்டிங்கற பட்சத்தில அவங்களோட சம்மதம் வாங்கணும்ன்ற விதயம்தான் இப்ப பிரச்சனையாகியிருக்கு. இவங்க இந்த மாதிரி கேக்கறதுக்கான காரணம் அறிவியல் துறைங்கறது ஒரு மாதிரி முழுசாவே மக்களோட வரிப்பணத்தில இயங்கறது. அப்படியிருக்கும்போது அந்த பணத்தினால வர்ற மூலக்கட்டுரைகளோட தரவுகளை நியாயமான காரணங்களுக்காக கூட உபயோகப்படுத்தக்கூடாதுன்றது தப்புன்னு எல்லாரும் நினைக்கிறாங்க. இப்ப மறுபடியும், கட்டற்ற மென்பொருள் மாதிரி, அறிவியல் துறையிலருந்த வர்ற கட்டுரைகளையும் கட்டற்ற தன்மையில வெளியிடணும்ற குரல்கள் அதிகமா கேக்க ஆரம்பிச்சிருக்கு.
இப்போதைக்கு 'நியாயமாக உபயோகப்படுத்தல்' ன்ற தலைப்புல ஏகப்பட்ட விவாதங்கள் போயிக்கிட்டு இருக்கு.
திஸ்கி இல்லாம கட்டுரையா!!!
திஸ்கி 1: பதிவர் அந்தப் படத்தை எடுத்திருக்க கூடாது. சட்டப்பூர்வமா இதை எதிர்கொண்டிருக்கணும்னு சில பேர் பின்னூட்டம் விட்டிருந்தாங்க. அதுக்கு அம்மணி, எல்லாம் கருத்து கந்தசாமிகளா இருக்கீங்க, யாரவது வழக்கை நடத்துறதுக்கு பைசா குடுக்கறேன்னு சொல்லிருந்தா நல்லாருந்திருக்கும்னு சொல்லிட்டாங்க. அதுவும் சரிதான.
திஸ்கி 2: தமிழ்ப்பதிவுலகத்தில எங்கருந்து சுட்டுப் போடுறோம்னு முறையான சுட்டி கூட குடுக்காம அதை சொந்தப்பதிவு மாதிரி நடத்துற ஆக்களும் இருக்காங்க. அவங்க சுட்டுப் போடுறது தெரிஞ்சும்(தெரிஞ்சிருக்கும்!!) கண்டுக்காம இருக்கற நம்ம நாளிதழ்கள், வார இதழ்கள் இணைய இதழ்கள் எல்லாத்தையும் பாத்து இவிங்கெல்லாம் எவ்வளவு நல்லவைங்களா இருக்காங்கன்னு சொல்லிக்க வேண்டியது தான்.