Showing posts with label தகவல். Show all posts
Showing posts with label தகவல். Show all posts

Jan 7, 2008

கக்கூஸ் டெக்னாலஜி

நம்மூர்ல இருக்கற கட்டணக் கழிப்பறைகள்ல மூக்க மூடிக்கிட்டு எதையும் கண்டுக்காம ஒன்னுக்கு அடிக்கவோ இல்ல மலம் கழிக்கவோ செஞ்சிட்டு வந்துடறோம். ஒரு சில இடங்கள்ல தவிர்க்கவே முடியாம உபயோகப்படுத்திட்டு வாழ்க்கையே வெறுப்பானதும் உண்டு. இங்க எல்லா இடங்கள்லயும் நல்லா சுத்தமாவே வைச்சிருக்காங்க. இருந்தாலும் இங்க இருக்கற வெஸ்டர்ன் டாய்லட்னு நம்மூர்ல சொல்ற கக்கூஸ்கள்ல மலம் கழிக்கணும்னா ஒரு தட்டு மேல உக்காந்து தான் இருக்கணும். பரபரப்பா இயங்குற விமானநிலையம் மாதிரி இடங்கள்ல ஏற்கனவே ஒருத்தர் உக்காந்த இடத்துமேல உக்காந்து மலம் கழிக்கறதுக்கு கொஞ்சம் நெருடலாவே இருக்கும். அதுக்காக புதுசா ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைச்சிருக்காங்க. இந்த வடிவமைப்பு படி நாம உக்கார்ற கோப்பை மேல ஒரு சிறப்பு பூச்சை கொடுத்துட்டா, சமீபத்தில அந்த கழிப்பறைய யாரும் உபயோகப்படுத்தியிருக்காங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம். இந்த சிறப்பு பூச்சு தெர்மோகுரோமிக்(thermochromic)ன்ற பொருளால ஆனது. இந்த பொருளோட சிறப்பு, வெப்பத்துக்கு தகுந்தமாதிரி தன்னோட நிறத்தை மாத்தறது தான். இந்த வடிவமைப்போட படம் தான் கீழ இருக்கறது.


மூலம்: Canadiandesingresource

Dec 30, 2007

விடைபெற்றது நெட்ஸ்கேப்

நெட்ஸ்கேப்ன்ற பேரை எங்கயாவது கேள்வி பட்டிருக்கீங்களா. சமீப காலங்கள்ல கணினியை உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருந்தீங்கன்னா கேள்வி பட்டிருக்கறதுக்கு வாய்ப்புகள் கம்மி. ஆனா கணினியை 90கள்ல, இல்லாட்டி 2000த்தோட ஆரம்பங்கள்ல பயன்படுத்துனவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்.



இன்னைக்கு இண்டெர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஓபரா, சபாரின்னு ஏகப்பட்ட இணைய உலாவிகள் இருந்தாலும், 90கள்ல நெட்ஸ்கேப் தான் முன்னணி உலாவியா இருந்தது. இன்னைக்கு யோசிக்கற உலாவி இயங்கு தளத்தோட ஆரம்பகட்ட விதை நெட்ஸ்கேப் தான். நெட்ஸ்கேப் நேவிகேட்டர் ன்ற பேர்ல வந்த இயங்குதளம் தன்னோட 4வது பதிப்பு வரைக்கும் உலாவிச் சந்தையில முன்னணியில இருந்தது. இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் 4வது பதிப்பும் 5வது பதிப்பும் சிறப்பான அம்சங்களை வைச்சிருந்ததால இதை எளிதா கீழ தள்ளிருச்சி. அது மட்டுமே காரணம் கிடையாது. விண்டோஸ் தன்னோட இயங்குதளத்தோட சேத்தே இண்டெர்நெட் எக்ஸ்புளோரரையும் சேத்து கொடுக்க ஆரம்பிச்சதும் ஒரு காரணம். இதுக்காக விண்டோஸ், நெட்ஸ்கேப் கம்பெனிக்கு ஒரு பெரிய தொகைய தண்டமா பின்னாடி கட்ட வேண்டியதிருந்தது. அதோட பின்னாடி வந்த பதிப்புகள் அளவில பெருசாவும், வேகம் குறைவாகவும் இயங்க ஆரம்பிச்சது. அதனாலயே மக்கள் வேகமா எக்ஸ்புளோரருக்கு மாறிட்டாங்க.



இந்த பிரச்சனைகளோட நடுவில நெட்ஸ்கேப் தங்களொட நிரல்களை பொதுவில வெளியிட்டாங்க. அதிலருந்து மோசில்லா இணைய உலாவி வெளிவந்தது. என்ன தான் பேர் வேறய இருந்தாலும் ரெண்டும் ஒரேமாதிரி தான் இருந்தது. இந்த நிரல்கள்ல ஒட்டு வேலை செய்றதில எந்தா உபயோகமும் இல்லைன்னு சொல்லிட்டு ஒரு புது உலாவிய மோசில்லா நிறுவனம் ஆரம்பத்திலருந்து கட்ட ஆரம்பிச்சது. இன்னைக்கு மறுபடியும் எக்ச்புளோரர்கூட போட்டி போட்டுக்கிட்டு இருக்கற பயர்பாக்ஸ் தான் அது. ரெண்டுமே வெவ்வேற கட்டமைப்புகளை சார்ந்தது.

என்னதான் இன்னொரு உலாவிய கட்டியெழுப்பியிருந்தாலும் நெட்ஸ்கேப்பும் தொடர்ந்து சந்தையில இருந்துக்கிட்டே தான் இருந்தது. அக்டோபர் 2007ல கூட தங்களோட நேவிகேட்டர் 9 பதிப்பை வெளியிட்டிருந்தாங்க. இருந்தும் இந்த வாரத்திலருந்து அடுத்த கட்ட மேம்பாடுகளையும், உதவிகளையும் நிறுத்தறதா அறிவிச்சிருக்காங்க. ஒரு காலத்தில இணையத்தை ஆட்சி செஞ்ச இந்த உலாவி, இந்த வருசத்தோட விடைபெறுது.

பை பை நெட்ஸ்கேப்.


நெட்ஸ்கேப் விக்கிப்பீடியாவுக்கான சுட்டி


பிகு: வாசிக்கற எல்லாருக்கும் முனியாண்டியோட புத்தாண்டு வாழ்த்துக்கள்

BSNL, MTNL இணைய இணைப்பு உள்ளவங்களுக்கு மட்டும் !!

இந்தியாவில அகலப்பாட்டை இணைப்பு இப்ப கிராமங்களுக்கு கூட சுலபமா கிடைக்குதுன்னு நினைக்கிறேன். இடத்தைப் பொருத்து அகலப்பாட்டை வேகம் 256 Kbps லருந்து 2 Mbps வரைக்கும் கிடைக்குது. இதுக்கான குறைஞ்ச பட்ச கட்டணம் 250 ரூபாய். இதுக்கடுத்து 500, 900 ம்னு வெவ்வேற திட்டங்கள் இருக்கு. இதுல 900 ரூபாய் திட்டத்தை தவிர மற்ற எல்லா திட்டத்துக்கும் உபயோகிக்கறதுக்கு ஒரு எல்லை வைச்சிருக்காங்க. உதாரணமா 250 ரூபாய் திட்டத்தில நீங்க மாசத்துக்கு 1 GB அளவு மட்டும் தான் உபயோகிக்க முடியும். இதுக்கு மேல போச்சின்னா 1 MB க்கு 90 பைசா அளவுக்கு நாம கட்ட வேண்டியதிருக்கும். இதுல அளவுன்னு பாத்தீங்கன்னா தமிழ்மணத்தோட முகப்பை திறக்கறதுக்கு 100 KB ஆகும். இதே இது ஒரு வலைப்பக்கத்தை திறக்கணும்னா அந்தப் பக்கத்த்தோட உள்ளடக்கத்தைப் பொருத்து வேறுபடும். அந்தப் பக்கத்தில எதாவது படம் இருந்ததுன்னா படத்தோட அளவைப் பொருத்து இதுவும் மாறும். ஒரு படம்ன்றது 100 KB லருந்து 2-3 MB வரைக்கும் கூட போகும். இதை விட அதிகமா போறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி ஒரு சினிமாப் பாட்டு இறக்கறீங்கனா அது தோராயமா 5 MB இருக்கும். வீடியோ கிளிப்பிங்க் போய் பார்க்கறீங்கன்னா 1 நிமிடத்துண்டுக்கு 1 MB ன்ற அளவில இருக்கும். வித்தியாசப் படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அப்புறம் யாரவது நண்பர்களோட கம்ப்யூட்டர்லருந்து பேசுறீங்கன்னா ஒரு மணி நேரத்துக்கு தோராயமா 100-150 MB வரைக்கும் ஆகும்.

அப்ப நீங்க அதிகமான கட்டணம் (அதாவது உங்களோட வரம்புக்கு அதிகமா உபயோகிக்கும் போது) கட்ட விரும்பலைன்னா, நீங்க எந்தளவுக்கு உபயோகிச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கறது நல்லது. இதை அடிக்கடி நீங்க பார்த்துக்கறது உங்க பர்ஸைப் பதம்பாக்கம இருக்கறதுக்கு உதவும். எனக்கு தெரிஞ்ச ஒரு கம்ப்யூட்டர்ல வைரஸ் ஒன்னு ஏறி அது பாட்டுக்கு இணைப்பை உபயோகிச்சிக்கிட்டு இருந்திருக்கு. கடைசியில 250 ரூபாய்க்கு பதிலா 1500 ரூபாய் வரைக்கும் கட்டவேண்டியதாயிருச்சி.

சரி இதை எப்படி நீங்க கண்காணிக்கறது. அதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒரு வழி BSNLலோட பக்கத்துப் போய் உங்களோட பயனர்பெயரும் கடவுச் சொல்லும் கொடுத்தா அங்கருந்து தெரிஞ்சிக்க முடியும். அதை விட எளிமையான இன்னொரு வழியும் இருக்கு.

இந்த ரெண்டாவது வழிக்கு நீங்க பயர்பாக்ஸ் உபயோகிக்க வேண்டியதிருக்கும். பயர்பாக்ஸ் இல்லாதவங்க இந்தப் பக்கத்திலருந்து இறக்கி நிறுவிக்கலாம். தமிழ்ல வேணுங்கறவங்க தமிழா.காமோட இந்தப்பக்கத்திலருந்து இறக்கிக்கலாம்.(இது கொஞ்சம் பழைய பதிப்பு).

இதுக்கு அடுத்து இந்த பயர்பாக்ஸுக்கு ஒரு நீட்சிய(extension) நிறுவணும். இந்த நீட்சிக்கு பேரு டேட்டாபாக்ஸ்(Datafox).
அங்க போய் அந்த நீட்சியைப்பத்தின விபரங்களை தெரிஞ்சிக்கலாம். அவ்வளவு பொறுமை இல்லாதவங்க இந்த சுட்டியில நேரடியா தரவிறக்கிக்கலாம். இதை கிளிக் பண்ணவுடனே இந்த நீட்சியை நிறுவவான்னு கேக்கறதுக்கு ஆமாம்னு பதில் சொன்னா அதுவே நிறுவிரும். இப்ப பயர்பாக்ஸை மூடிட்டு மறுபடியும் திறங்க. உங்களோட பயர்பாக்ஸ் அடிப்பட்டையில ஒரு சின்ன படம் இருக்கும். அதை கிளிக் பண்ணி உங்களோட BSNL பயனர், கடவுச் சொல்லையும் கொடுங்க. இப்ப நீங்க உபயோகிச்ச அளவு தெரிய ஆரம்பிக்கும். இந்த அளவு உடனே உடனே கிடைக்கறது கிடையாது. ஒவ்வொரு முறையும் இந்த நீட்சி BSNL பக்கத்துக்குப் போய் நீங்க எவ்வளவு உபயோகிச்சிருக்கீ்ங்கன்னு சொல்லும்.

பிகு: இதை நிறுவறதைப் பத்தி ஒரு முழுமையான விளக்கம் தேவைப்படுறவங்க போக வேண்டிய சுட்டி.

Dec 25, 2007

மைக்ரோநாடுகள்

ஒரு தனி மனுசனுக்கு, இல்லை ஒரு குடும்பத்துக்கு, இல்லை ரெண்டு மூணு குடும்பத்துக்கு மட்டும் தனியா ஒரு நாடுன்னு கற்பனை பண்ணிப் பாக்கமுடியுதா உங்களால. கிட்டத்தட்ட 8 கோடிப் பேர் இருக்கோம், இருந்தும் ஈழம்னு ஒரு தனி நாட்டுக்காக எவ்வளவு சண்டை, எத்தனை உசுரு. இந்த இலட்சணத்தில குடும்பத்துக்கு ஒரு நாடெல்லாம் வாய்ப்பே இல்லைங்கற கும்பலா நீங்க. நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் மைக்ரோநாடுகள்ன்னு சொல்லப்படுற குட்டி நாடுகளும் இந்த உலகத்தில இருக்கு. ஏகப்பட்ட மைக்ரோநாடுகள் ஆரம்பத்தில (1970கள்ல) இருந்தாலும் இப்போதைக்கு மூணு நாடுகள் இருக்கு. இதெல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்களாவே அறிவிச்சிக்கறது. நாடுகள்னு சொல்லப்படுறதுக்கான வரைமுறைக்குள்ள இதுகள் அடங்கினாலும் உலக அமைப்புகள் இந்த நாடுகள் எதையும் அங்கீகரிக்கலை. ஆனாலும் இந்த நாடுகள் நாடுகள் செய்ற பாஸ்போர்ட் வெளியிடுறது, தபால் தலை, காசு வெளியிடுறது, தனியா கொடி வைச்சிக்கறது மாதிரி வேலையெல்லாம் செஞ்சிக்கிட்டு தான் இருக்காங்க. இதுல இப்போதைக்கு இருக்கற மூணு நாடுகளைப்பத்தி மட்டும் பாக்கலாம்.

1. சீலேண்ட் (Principality of Sealand)
மைக்ரோநாடுகள்ல அதிகமா வெளியுலகத்துக்கு தெரிஞ்சது இந்த நாடு தான். பேர்ல இருக்கற மாதிரியே இது ஒரு கடல்நாடு தான். இந்த நாட்டுக்குன்னு சொந்தமா தரை கிடையாது. இரண்டாம் உலகப்போரப்ப இங்கிலாந்து படைகள் வானூர்தி எதிர்ப்பு தளமா பயன்படுதின ஒரு சின்ன இடம் தான் இந்த நாடு. இது இங்கிலாந்துக்குப் பக்கத்திலயே இருக்கு. இருந்தும் போர் முடிஞ்சதுக்கப்புறமா படைகள் இந்த இடத்தை உபயோகப்படுத்தாம விட்டுட்டாங்க. அதை ஒருத்தர் ஆக்கிரமிச்சி தனி நாடா அறிவிச்சிட்டாரு.சமீபத்தில இதை விக்கப் போறதா கூட அறிவிச்சிருந்தாங்க. சிவாஜி ரஜினி மாதிரி கோடிகள் சம்பாதிச்சி வைச்சிருந்தீங்கன்னா நீங்ககூட முயற்சி பண்ணிப் பாக்கலாம். இந்த நாடு பரபரப்பா செய்திகள்ல அடி பட்டதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இந்த நாட்டுல நடத்தப்படுற டேட்டா சென்டர். காப்புரிமை பிரச்சனையிலருந்த தப்பிக்க இது நல்ல வழின்னு மியூசிக், வீடியோ கோப்புகளை சட்டத்துக்கு புறம்பா விநியோகம் செய்ற கம்பெனிக்காரங்க இந்த நாட்டை வாங்க முயற்சி செஞ்சாங்க. இன்னும் செஞ்சிக்கிட்டு தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.




2. மொலாசிய குடியரசு:
சில ஹெக்டேர் நிலத்தில மட்டுமே அமைஞ்சிருக்கற ஒரு நாடு. இன்னும் ஆச்சரியமானது இது அமெரிக்கவுக்குள்ளயே நெவதா மாகாணத்தில இருக்கு. மொத்த மக்கள் தொகை 4 பேர். இதுல மூணு ஆண்கள், ஒரு பெண். இருக்கற நாலு பேர்ல இந்த நாட்டோட விதிப்படி நாட்டோட இராணுவத்தில சேர்றதுக்கு ஒரே ஒருத்தர் தான் தகுதியானவர். இப்போதைக்கு அவர் தான் இந்த நாட்டோட அதிபரும் கூட.



3.ரெடோண்டா:
ஒரு சதுர மைல் பரப்பளவே உள்ள ஒரு குட்டிப் பாறை தான் இந்த நாடு. இந்த நாட்டுக்காக பலபேர் உரிமை கொண்டாடிக்கிட்டு இருக்காங்களாம். இந்த நாடு அமெரிக்கா பக்கத்தில இருக்கற ஆண்டிகுவா வோட பராமரிப்புல இப்போதைக்கு இருக்கு. இந்த நாட்டோட முக்கிய வருமானம் கடற்பறவைகள் போடுற எச்சம். வருசத்துக்கு 7000 டன் அளவில பறவைகளோட எச்சம் இந்த இடத்திலருந்து கிடைச்சிருக்குது. தற்போதைக்கு இந்த நாட்டில யாரும் வசிக்கலை.



இதைத்தவிர பல மைக்ரோ நாடுகள் இருந்திருந்தாலும் தற்போதைக்கு அது எல்லாம் இணையத்தில மட்டுமோ இல்லை பக்கத்து நாடுகளால கபளீகரம் செய்யப்பட்டோ இருக்கு.

இணைப்புகள்

1. விக்கிப்பீடியா
2. Weburbanist

இணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்

வருசத்துக்கு எத்தனை புத்தகங்கள் வெளியாகுதுன்னு எப்பவாவது யோசிச்சி பார்த்திருக்கீங்களா? சரியான கணக்கு எனக்கு கிடைக்கலைன்னாலும் சுமாரா 10 இலட்சம் புத்தகத்துக்கு மேல வெளியாகுதுன்னு விக்கிபீடியா சொல்லுது. எண்ணிக்கைய பாக்கும் போதே தலைசுத்தல் வருது. வர்ற ஒவ்வொரு புத்தகத்தையும் த்லைமுறைக்கும் பாதுகாக்கணும்னா யோசிச்சி பாருங்க. நூலகங்கள்லயும் எவ்வளவு புத்தகங்களைத் தான் சேத்து வைக்கமுடியும். இப்ப வர்ற புத்தங்களாவது பரவாயில்லை, டிஜிட்டல் முறையில கிடைக்கறதால இன்னும் கொஞ்சம் காலத்துக்கு அதை பாதுகாக்கலாம். ஆனா ஏற்கனவே வந்த புத்தகங்களோட நிலைமை? பழைய புத்தகங்களை பாதுகாக்கறதுக்காக ஏற்கனவே குட்டென்பெர்க் திட்டம் செயல் பட்டுக்கிட்டிருக்கு. இதுல 100,000 புத்தகங்களை இலவசமா தர்றாங்க. தமிழ்லயும் மதுரைத்திட்டம் செயல் பட்டுக்கிட்டு இருக்கு. ஈழத்துமக்களும் தங்களோட படைப்புகளை நூலகம் திட்டம் மூலமா மாத்திக்கிட்டு இருக்காங்க. இது போக கூகுள் மாதிரி பெருந்தலைகளும் இந்த வேலையில இறங்கியிருக்காங்க.

இதுக்கு நடுவில சத்தமேயில்லாம் சில பல்கலைக்கழகங்களும் இந்த வேலையில இறங்கி இது வரைக்கும் 10 இலட்சம் புத்தகங்களை டிஜிட்டைஸ் பண்ணியிருக்காங்க. இவங்களோட இலக்கு 1 கோடி. தமிழ்ல இதுவரைக்கூம் 4000 புத்தகங்கள் முடிஞ்சிருக்கு. தெலுங்குல 50,000மும் கன்னடத்தில 20,000மும் முடிஞ்சிருக்கு. இந்த புத்தகங்கள் எல்லாரோட பார்வைக்கும் இணையத்தில கிடைக்குது.

இதைப்பற்றிய செய்திக் குறிப்பு

நூலகத்திற்கு செல்ல

முடிக்கப்பட்ட புத்தக எண்ணிக்கைகளோட விபரம்

பிகு: புத்தகங்களை தேடிப் படிக்கறது இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. போகப்போக சரியாகும்னு நம்புவோம்.

பிகு2: நூலகம் திட்டத்தை பின்னூட்டத்தில் நினைவு படுத்திய நண்பர் மயூரனுக்கு நன்றி

Mar 16, 2007

ப்ளாக்கர்(பீட்டா) உம் அதைச் சார்ந்த இணைய வாஸ்துவும் :))))))

எதோ ஆசையில எல்லாரும் பண்றாங்கன்னு ஒரு நடு ராத்திரியில ப்ளாக்கர் கணக்கு திறந்து 10-15 பதிவும் போட்டுட்டேன். அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல வலைப்பதிவுன்னு ஒன்னு வைச்சிருக்கறதே ஞாபகத்தில இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் எதோ ஒன்னப் பத்தி பதிவு போடுறதுக்காக ப்ளாக்கரை திறந்தா யூ ஓல்டு பெல்லோ ன்னு திட்டு வந்து விழுகுது. அதிர்ச்சியில பயந்து போய் இழுத்து மூடிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு நின்னேன். தமிழ்மணத்திலயும் அந்த சமயத்தில ஒரே களேபரமா இருந்தது. எனக்கு வேலை செய்யலை, ஒனக்கு வேலை செய்யலைன்னு ஒரே செய்யலை மயமா இருந்தது. பொட்டி தட்டுற அறிவு ஜீவிங்களுக்கே ப்ளாகர் ஆப்பு வைக்கும்போது நாமல்லாம எந்த மூலைக்குன்னு வலைப்பதிவையே மறந்து போயிட்ட்டேன். தமிழுக்கு ஆப்படிக்க சுத்தி சுத்தி ஆளுக வேலை பாத்தாலும், அதை காலி பண்றதுக்குன்னு சில பேரு வந்துகிட்டேதான் இருக்காங்க. அதனாலயே கொஞ்ச நாள்ல தமிழ்மணத்தில வேலைசெய்யுது சத்தம் நிறைய கேக்க ஆரம்பிச்சிருச்சி.



என்னன்னு வந்து எட்டிப் பாத்தா, பழைய ப்ளாக்கர்ல தமிழ்மணம் பட்டைய எளிமையா சேக்குறதுக்கு வசதி இருந்த மாதிரி புது ப்ளாக்கருக்கும் அந்த வசதியை பண்ணி வைச்சிட்டாங்க மக்க. பாத்த உடனே சந்தோசமாயிருச்சி. அந்த வசதி இங்க இருக்கு. இதை ரெடி பண்ணின குழலிக்கும் அடிப்போட்ட கோபி, ஜெகத்துக்கும் நன்றி.



சரி நாமளும் மாறிடலாம்னு வந்து நின்னா ப்ளாக்கரே ரெண்டு நிமிசத்தில புது ப்ளாக்கருக்கு மாத்தி குடுத்துடிச்சி. அதுக்கப்புறம் போய் ஒரு அடைப்பலகைய தேர்ந்தெடுத்து குழலியோட பக்கத்தில கொண்டு போய் ஒட்டுனேன். அந்த புரோகிராம் தமிழ்மண பட்டை, அப்புறமா கொக்கி நீக்கம் எல்லாம் பண்ணி அடைப்பலகைய மெருகேத்தி குடுத்தது. அதை மறுபடியும் ப்ளாக்கர்ல ஒட்டுனா வலைப்பதிவு ரெடியாயிருச்சி. ஒரு பதிவு போட்டு விட்டு பாத்தா தமிழ்மணத்திலயும் தெரியுது!!!!



அதே சந்தோசத்தில மத்தவுங்க பக்கங்களுக்கு போனா, ஊர்ல இருக்கற பாதிப்பேரு இந்த அடைப்பலகைய தான் வைச்சிகிட்டு இருக்காங்க. இது என்ன சோதனைன்னு வேற எதாவது அடைப்பலகை கிடைக்குமான்னு தேடினேன். எதுவும் பிடிச்ச மாதிரி கிடைக்கலை. சரி இருக்கற வீட்டைய இணைய வாஸ்து படி மாத்திக் கட்டிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.



அடிச்சி உடைச்சி இடிச்சி நொறுக்கி கட்டுறதுக்கு கொத்தனார் யாராவது வேணும். அந்த மாதிரி கொத்தனார் யாரையும் எனக்கு தெரியாது. தொழிலும் தெரியாது ஆளும் தெரியாதுன்னா என்ன பண்ண முடியும். குறைஞ்சபட்சம் "நீங்களும் ஆகலாம்"னு எதைப் பாத்தாலும் இந்த ஊர்ல ஒரு புக்கு போட்டு வித்துருவாங்களே. அந்த மாதிரி எதாவது சிக்குதான்னு தேடினேன். அப்ப ரெண்டு உபயோகமான மென்பொருட்கள் சிக்கிச்சி. அதை வைச்சி நானும் என்னோட பக்கத்தை எனக்கு தெரிஞ்ச மாதிரி மாத்திருக்கேன். நல்லா இருக்காங்றதை விட நானே மாத்துனதுன்ற சந்தோசம் எனக்கு இருக்கு.



இதே மாதிரி எல்லாரும் தங்களுக்கு பிடிச்ச மாதிரி மாத்த முடியுமான்னா, முடியும். உங்களுக்கு குறைஞ்சது CSS ன்ற ஒன்னு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா போதும். இந்த ரெண்டு மென்பொருளையும் வைச்சி ஒங்க வலைப்பதிவை பிரிச்சி மேஞ்சிரலாம்.



நான் சொல்லப் போற ரெண்டும் மென்பொருள் அப்டின்றதை விட பயர்பாக்சோட நீட்சின்னு சொல்றது தான் சரி. நீங்க உங்க கிட்ட இருக்கற பயர்பாக்ஸ்ல இந்த இரண்டு நீட்சியையும் சேத்துக்கிட்டிங்கன்னா எதை மாத்துனா எது மாறும்னு தெரிஞ்சிக்கலாம்.



1. Web Development tool bar



இந்த நீட்சியில உங்களோட CSS மாற்றங்களை தற்காலிகமா மாத்தி அந்த மாற்றம் சரியான்னு தெரிஞ்சிக்கலாம். இது ஒரு எடிட்டர் மாதிரி வேலை செய்யும்.



2. CSSviewer



இந்த நீட்சியை உபயோகப்படுத்தி குறிப்பிட்ட பாகம் CSS ல எந்த எடத்தில இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்.









முயற்சி பண்ணிப் பாருங்க.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Jan 16, 2007

அப்துல் கலாமும் யாகூவும்...

யாகூ தன்னோட "யாகூ பதில்கள்" சேவையோட ஒரு பாகமா "Ask the planet" சேவையை இந்தியாவுல அறிமுகப்படுத்திருக்கு. இதுல பிரபலமானவங்களை கேள்வி கேக்கவிட்டு அதுக்கு பதில் சொல்ல சொல்றாங்க. பதில் சொல்ற வரிசையிலயும் சில பிரபலங்கள் உண்டு. இந்தியாவுல கேள்வி கேட்டு ஆரம்பிச்சி வைச்சிருகிறவரு அப்துல் கலாம். அவரோட கேள்வி " தீவிரவாதத்தை இந்த உலகத்திலருந்து எப்டி இல்லாம பண்றது". இந்த கேள்விக்கான பதில் சொன்ன பிரபலங்கள்னு கிரண் பேடி, லியாண்டர் பயஸ், ரவிசங்கர் பேரெல்லாம் குடுத்திருக்கறங்க.

அப்புறம் முக்கியமான விசயம், இதில தேர்ந்தெடுக்கப் படுற பொது சனங்களோட சிறந்த பதிலுக்கு ஒரு "டேப்லட் PC" பரிசு உண்டாம்.

எதைக் கேட்டாலும் கனவு காணச் சொல்றவருக்கே பதில் தெரியாதுன்றப்ப நம்ம பதில்லாம் எந்த மூலைக்குன்னு எதுவும் பதில் சொல்லலை. உங்களுக்கு தெரிஞ்சா போய் சொல்லுங்க. பரிசுக்கு வாழ்த்துக்கள்.

Jul 15, 2006

டாக்டர் . வெங்கடசாமி - அரவிந்த் கண் மருத்துவமனை

Intelligence and capability are not enough. There must be the joy of doing something beautiful
Dr.G.Venkatasawamy


"Whenever I visited Madurai, for me it was a pilgrimage to visit the Arvind Eye Hospital and meet the great soul, Dr. G. Venkataswamy, who gave light to more than a hundred thousand patients -- Dr APJ Abdul Kalam



அரவிந்த் கண் மருத்துவமனை அப்டின்னா இங்க பல பேருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அதோட நிறுவனர் பத்மஸ்ரீ. டாக்டர் வெங்கடசாமி போன வாரம் தன்னோட 87வது வயசுல இறந்து போயிட்டாரு. அதைப் பத்தி யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை(இல்லை என் கண்ல படலையா). சரி அவரு அவ்வளவு முக்கியமானவர் இல்லைன்னு எல்லாரும் விட்டுட்டாங்க போலருக்கு.


1948ல்ல தன்னோட கை விரல்களோட பாதி செயல் திறனை இழந்ததுக்கப்புறமா தன்னோட கண் மருத்துவரா ஆகிறதுக்கான் மேல் படிப்புகளை ஆரம்பிச்சவரு. கடைசி வரைக்கும் தன்னோட cripple ஆன விரல்களால தான் அறுவை சிகிச்சைகளை பண்ணிருக்காரு. அவர் மட்டும் தனியொருத்தரா ஒரு லட்சம் கண் அறுவை சிகிச்சைகளை பண்ணியிருக்காரு. இது ஒரு தனி மனுசனோட ஆர்வம், உழைப்பு, ஈடுபாடு.இன்னைக்கு அவர் பேர் சொல்ல வைச்சிருக்கற விசயங்கள்ல இதுவும் ஒன்னுன்னு தான் சொல்ல முடியும். ஏன்னா முக்கியமான விசயங்கள்னு சொன்னா அது அவரோட சமூகப் பார்வை.




இன்னைக்கு பல கிராமங்கள்ல கண் பார்வைக் குறைபாடுகள் கம்மியா/இல்லாம இருக்குன்னா அதுக்கு முழு முதல் காரணம் இவர் தான். நடமாடும் கண் பரிசோதனை மையத்திட்டங்களை உருவாக்கி மருத்துவர்களை மக்களை நோக்கி அனுப்புனது இவர் தான். இது இவர் அரசாங்கத்தோட ஆதரவுல ஒரு டாக்டரா பண்ணினது.

ஆனா அரசாங்க வேலையில இருந்து ரிட்டையர் ஆனதுக்கப்புறமா பண்ணினது தான் மகத்தான விசயங்கள். சமூகத்தின் மேல அக்கறை உள்ள யாரும், உறுதியான செயல் திட்டங்களோட இறங்குனா வயசையெல்லாம் தாண்டி ஜெயிக்கமுடியும்னு காமிச்சிருக்காரு. தன்னோட ரிடையர்மெண்ட் அப்ப சொந்த முயற்சியில 11 படுக்கை வசதியோட ஆரம்பிச்சது தான் இந்த அரவிந்த் மருத்துவமனை. இன்னைக்கு உலக அளவுல பேர் சொல்ற அளவுக்கு இருக்குன்னா அதுக்கு முழுக்க முழுக்க இவர் மட்டும் தான் காரணம்.

http://www.aravind.org

இன்னைக்கும் இந்த மருத்துவமனைகள் (மதுரை தாண்டி இன்னும் சில இடங்கள்ல இருக்கு) ஏழை மக்களை முன்னிறுத்திதான் தங்களோட பயணத்தை தொடர்ந்து கிட்டு இருக்கு. அரசாங்கத்தை எதிர்பார்க்காம தங்களோட செலவுலயே மக்களை நோக்கிப் பயணம் செஞ்சி இன்னும் நல்லாவே பண்றாங்க. தங்களோட மருத்துவ செலவை கவனிச்சிக்க முடிஞ்சவங்ககிட்ட வாங்குற பணம் மறுபடியும் ஏழைகளுக்கான சிகிச்சை, ஆராய்ச்சின்னு தான் செலவு செய்யப் படுது. இவங்களோட ஆராய்ச்சியால சில ஆயிரங்களுக்கு விக்கப் படுற கண்ணுக்கு உள்ள வைக்கப்படுற லென்ஸ் இப்ப சில நூறுகளுக்கு கிடைக்குது. மறுபடியும் இதுவும் சமூகத்தை முன்னிறுத்திதான்.

இவரைப் பத்தி எழுதணும்னா நிறைய எழுதலாம். ஆனா ஒரே ஒரு லிங்க் மட்டும்


இந்த அமைப்பு பத்தி எழுதப் பட்டுள்ள ஒரு கட்டுரை



அவர் கட்டுக்கோப்பா வளர்த்த இந்த மருத்துவமனை/அமைப்பு அவரோட எண்ணங்களின்படி இன்னும் சிறப்பா வளரும்னு நம்புவோம்.

இந்த மண்ணின் மைந்தனா, இந்த மண்ணின் மக்களுக்காகவே வாழ்ந்த இந்த ஆத்மாவுக்கு எனது அஞ்சலிகள்

Feb 10, 2006

தெகப்பூடு/திசைபூண்டு

கதைகள், கற்பனைகள், எதார்த்தங்கள்ன்னு போற கிராமத்து வாழ்க்கை எப்பவுமே சுகமானது தான். ஆனா இன்னும் இந்த கிராமங்கள் இருக்கான்னு கேட்டா, அதுக்கு பதில் சொல்றது கஷ்டம் தான். ஏன்னா கிராமத்து மக்கள் தலைமுறை தலைமுறையா பேனா பேப்பர்ல எழுதாம கடத்தி வந்த விசயங்கள் (பட்டறிவு) எல்லாம் இந்த தலைமுறையோட காணம போய்கிட்டு இருக்கு. இப்ப எல்லா கிராமங்களும் தங்களை நகர்ப்புற கலாச்சாரத்தோட ஒட்டுன மாதிரியான கலாச்சாரத்துக்கு மாறிக்கிட்டு இருக்காங்க. இத தப்புன்னு சொல்ல முடியாது. ஆனாலும் பட்டறிவை இழந்துகிட்டு இருக்கோம்ன்ற ஆதங்கத்தை தவிர்க்க முடியலை. என்ன மாதிரியான விசயங்களை இழந்துகிட்டு இருக்கோம்ன்றதுக்கு ஒரு சின்ன உதாரணம் இங்க.

சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம். எங்க ஊரு சிலம்பு வாத்தியாரு. கொஞ்சம் வயசானாலும் கட்டுக்குள்ள இருக்குற உடம்பு. காட்ல எங்கயோ வழி தவறி நடக்ககூட முடியாம கிடந்தாருன்னு, ஒருநாளு அவரை வண்டி கட்டி தூக்கிட்டு வந்தாங்க. பாக்கப்போனவுங்க வந்து அதைப்பத்தி கதை கதையா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா யாருக்கும் ஏன் அந்த மாதிரியாச்சின்னு தெரியல. ஒருத்தங்க மட்டும், அவரு எங்கயாவது தெகப்பூடு மிதிச்சிருப்பாரு. அதனால தான் இந்த மாதிரி ஆகியிருக்கு. கொஞ்ச நேரத்தில இது சரியாயிரும், அப்டின்னாங்க(சில மணி நேரங்கள்ல அவரு சரியாயிட்டாரு). அந்த வார்த்தையை முதலும் கடைசியுமா அப்ப தான் கேட்டேன். தெகப்பூடுன்னா என்னன்ற கேள்விக்கு எந்த சரியான பதிலும் இல்ல. ஒருசிலரு, அது ஒரு சின்ன பூச்சி. நாம அதை மிதிச்சிட்டம்னா, அதோட உடம்பு எவ்வளவு கஷ்டப்படுமோ அதே மாதிரி மிதிச்சவங்களோட உடம்பும் கஷ்டப்படும், அப்டின்ற ரேஞ்சுல சொல்லிக்கிட்டு போனாங்க. அதுக்கு மேல கேட்டு பிரயோசனமில்லை. அட்லீஸ்ட் அப்பயாவது தெகப்பூடுன்னு சொல்றதுக்கு ஒரு சிலர் இருந்தாங்க. இப்ப யாராவது இருப்பாங்களான்னு தெரியல. நானு அதுக்கப்புறம் அதைப் பத்தி எங்கயுமே நான் கேள்விப் படவேயில்ல. சரி, எதோ ஒரு கதை விட்ருப்பாங்கன்னு நான் அதை மறந்தே போயிருந்தேன்.

ஆனா இந்த வார நக்கீரன்ல அதைப் பத்தின ஒரு சின்ன குறிப்பு மட்டும் வந்திருக்கு. அதோட பேரு திசைபூண்டு. இது ஒரு ஒரு வகையான செடி. இது மனுச உடம்புல குத்திருச்சின்னா, சிறுமூளை போதையுண்டது மாதிரி ஆகிருமாம்.(குடிமகன்கள் கவனிக்க). சில மணி நேரங்கள் திசை தெரியாம சுத்திக்கிட்டு இருக்க நேரிடுமாம். இதுக்கு மேல இதைப் பத்தி எதுவும் குறிப்பிடப்படலை.

இதைப் பத்தின மேலதிக விபரம் இங்க யாருக்காவது தெரியுமா ??